Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரிப்பில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீர்தான் குக்கூ!

 ''சாமான்யர்களின் சந்தோஷம்... இதுதான் நம்ம 'குக்கூ’ படம். ஒன்லைன்கூட இல்லை... ரெண்டே வார்த்தையில் முடிச்சுட்டேன்ல!''

விகடனில் 'வட்டியும் முதலும்’ மூலம் நேசமும் பிரியமும் விதைத்த ராஜுமுருகன், இப்போது 'குக்கூ’ பட இயக்குநர்!

''விகடன் ரிப்போர்ட்டரா நான் வேலை பார்த்த ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவம். அப்போ நான் பார்த்த, ரசித்த, வியந்த, தரிசித்த உலகங்களின் ஒரு சாம்பிள்தான் நம்ம 'குக்கூ’. இந்தப் படத்துக்காக ஒரு சீன், ஒரு வசனத்தைக்கூட ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணலை. எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம்ம உள்ளங்கை உணர்ந்த தோழியின் கண்ணீர், நண்பர்கள் அரட்டைகளில் பேசிச் சிரிச்ச காமெடி, ஓவர் உற்சாகத்தில் ஆடிப் பாடின பாட்டுனு... உண்மைக்கு நெருக்கம்லாம் இல்லை... இது உண்மையேதான்!''

''படத்தின் உள்ளடக்கம் பத்தி இன்னும் பேசலாமே..!''

'' 'தமிழ்’, 'சுதந்திரக்கொடி’னு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ரெண்டு பேரின் காதல்தான் படம். வாழ்க்கையை ரசனையா, காமெடியா, உற்சாகமாகவே பார்க்கிற அற்புதன்... தமிழ். ஒவ்வொரு நிமிஷத்தையும் நம்பிக்கையோட மட்டுமே கடக்கும் மனுஷி, சுதந்திரக்கொடி. இவங்க ரெண்டு பேருக்கும் இருட்டுதான் உலகம். ஆனா, நாம யோசிக்கமுடியாத கலர்ல, வெளிச்சத்துல ஒரு காதல் இருக்கு அவங்களுக்கு. அழகு, நிறம், பணம்னு நம்மளோட அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன்வைக்கிற காதல். இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களைவிட, என்னைவிட, நம் எல்லோரையும்விட, பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை அவ்வளவு அழகா, அற்புதமா வாழறாங்கனு உங்களுக்கு உணர்த்தும் 'குக்கூ’. மனசோட வெளிச்சம்தானே மானுட வெளிச்சம்!''

'' 'வட்டியும் முதலும்’ பாணி திரை வடிவம்னு சொல்லலாமா?''

''ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். 'வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா’ங்கிற டிஸிகாவோட கோட், எவ்வளவு உண்மை. நாம அனுதினமும் கவனிக்காமல் கடந்து போற ஒவ்வோர் எளிய மனிதனும், அவன் உலகத்தில் ஹீரோதான். அப்படி நான் சந்திச்ச பல சுவாரஸ்யமான ஹீரோக்கள்தான் இந்தப் படத்தோட நாயகர்கள். ஏதேதோ யோசனைகள்ல இருக்கும்போது, எங்கிருந்தோ ஒரு குயிலின் 'குக்கூ’ கேக்கும். நம்ம மனசுல என்ன உணர்வு இருந்தாலும் அதை ஆமோதிக்கிற மாதிரி இருக்கும் அந்தக் குக்கூ. தேடிப் பார்த்தா, அந்தக் குயில் கண்ணுலயே படாது. அப்படி நம்ம உணர்வு எல்லைக்குள் இருந்தாலும், கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் 'குக்கூ’!

ஏழெட்டு வருஷம் முன்னாடி விகடன்ல ரிப்போர்ட்டரா இருந்தப்போ, நான் பார்த்த ஒருத்தனோட கதை இது. அவன்தான் தமிழ். ரெண்டு வருஷம் முன்னாடி சினிமா பண்றதுக்கான முயற்சிகள்ல ஷங்கர் சார்கிட்ட ஒரு கதை சொல்லப் போயிருந்தேன். ஒரு கதை சொன்னேன். அதைக் கேட்டுட்டு, 'ராஜு... இந்தக் கதை நிச்சயம் ஹிட் ஆகும். ஜாலியா இருக்கு. நான்தான் தயாரிக்கணும்னுகூட இல்லை. ரொம்ப ஈஸியா உங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பாங்க. ஆனா, 'வட்டியும் முதலும்’ சாயல்ல ஒரு கதை சொல்வீங்கனு நினைச்சேன். அதை நான் உங்கக்கிட்ட மட்டும்தானே எதிர்பார்க்க முடியும்’னு சொன்னார். அந்த நிமிஷமே எனக்குள்ள தமிழ்தான் பளிச்னு நினைவுக்கு வந்தான். அவர்கிட்ட கொஞ்சம் அவகாசம் வாங்கிட்டு, இந்தக் கதையை டெவலப் பண்ணிட்டுப் போய் சொன்னேன். 'செமயா இருக்கு ராஜு. கமர்ஷியலோ, ரசனையோ... இந்தக் கதை எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் தமிழ் சினிமாவுக்கு ஹெல்த்தியா இருக்கும்’னார்.

அப்புறம்தான் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் பேனர்ல இந்தப் படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. 'எங்களுக்கு கதைதான் பட்ஜெட்... அப்படிப் பார்த்தா இது மெகா பட்ஜெட் படம்’னு நம்பிக்கையா வந்தாங்க. அதுக்காக விஜய் டி.வி. மகேந்திரன், சண்முகம் சார் ரெண்டு பேருக்கும் நன்றி. 'அட்டகத்தி’ தினேஷ்தான் என் தமிழ். அவன் என்னை மாதிரியே ஒரு முட்டாள் கலைஞன்; அற்புதமான அடிமை. மாளவிகானு 'வழக்கு எண்’ மளையாளப் பதிப்பில் நடிச்ச பொண்ணுதான் சுதந்திரக்கொடி. ரெண்டு பேரும் தங்களை நிறைய வருத்திக்கிட்டு உழைச்சிருக்காங்க. அப்புறம் இந்தப் படத்துல நிறையப் பேர், அங்கங்க பிடிச்ச நிஜமான பாத்திரங்கள். பி.கே.வர்மாவோட கேமரா, சந்தோஷ் நாராயணனோட இசை, யுகபாரதி அண்ணனோட பாடல்கள்னு நல்ல டீம் நம்பிக்கையா இருக்கு!''­

'' 'பரதேசி’... யதார்த்தத்தின் உச்சம்; 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’... கமர்ஷியலின் மிச்சம். எல்லாவித சினிமாக்களும் நமக்குப் பழகிருச்சு. 'குக்கூ’ எந்த ப்ளாட்ஃபார்ம்ல பயணிக்கும்?''

''ஒரு சினிமா ரசிகனா எனக்கு சார்லி சாப்ளின், மகேந்திரன் சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதிச்சவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனசுல ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தப்போ, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க். சார்லி சாப்ளின், மகேந்திரன் சார் படங்களிலும் நீங்க அந்த அழகை ரசிக்கலாம். நமக்குள்ள ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமா இருக்கணும். அப்படியான  சினிமாதான் காட்ட ஆசைப்படுறேன். ரொம்ப எளிமையான கதைசொல்லி நான். சொந்த வாழ்க்கை மாதிரியே இதுலயும் திட்டம் ஒண்ணும் கிடையாது. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.

விகடன்ல வேலைக்குச் சேர்றதுக்கு முன்னாடி ஒப்பந்தத் தொழிலாளியா ஒரு ஃபேக்டரியில் இயங்கிட்டு இருந்தேன். அங்கே பலருக்கு பசி, அகோரப் பசி... இந்த ரெண்டு ருசிதான் பரிச்சயம். சட்டைப்பையிலும் மனசுலயும் எந்த பாரமும் இல்லாம இருக்கிறவங்க அவங்க. விகடன் நிருபரா சென்னையில் தங்கி வேலை பார்த்தப்போ, எதிர் துருவமான ஃபேன்டசி உலகத்தையும் பார்த்தேன். இங்கே தினம் தினம் தீபாவளி. ஒரு நொடியில் லட்ச ரூபாயைக் கரைச்சிடும் மனிதர்களையும் பார்த்திருக்கேன்.

எப்பவுமே இந்த ரெண்டு உலகமும் என் முன்னாடியே கிடக்கு. ஆனா, 'ஈஸி ஹிட்’டா ஒரு படம் பண்ணிட்டு, ரெண்டாவது படத்துக்கு பெரிய சம்பளம், கார், வீடு வாங்கிரலாம்னு நினைப்பே வரலை. என் இயல்பு அப்படி. இந்த வீணாப்போன அறம், பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இதெல்லாம்தான் எப்பவும் என்னை ஈர்த்திருக்கு.

'வட்டியும் முதலும்’ தொடருக்குக் கிடைச்ச வரவேற்பும் அன்பும் அதை அழுத்தமா மனசுல பதிச்சிருக்கு. அந்த உணர்வுக்கு உண்மையா ஒரு படம் எடுக்கிறேன். மனசுவிட்டுச் சிரிச்சா, ஒரு துளி கண்ணீரும் வரும்ல... அப்படி இருக்கும் நம்ம 'குக்கூ’!''

- கி.கார்த்திகேயன், படங்கள்: அருண் டைட்டன், சசிகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்