Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“சிவகார்த்திகேயன் சூப்பர்... விஜய் சேதுபதி க்ளாஸிக்!”

'ஒரு சின்ன டவுன். அதில் சில கேரக்டர்கள். உப்புப்பெறாத பிரச்னையைக்கூட தலைக்கு மேலே தூக்கிவெச்சுக்கிற வெகுளியானவங்க அவங்க. அந்த ஒவ்வொரு கேரக்டரும்தான் படத்தின் பலம். டைரக்டர் ராஜேஷ், சும்மாவே செம ஜாலியான ஆள். அதுலயும் இப்படி ஒரு ஏரியா பிடிச்ச பிறகு அவர் உற்சாகத்துக்குக் கேக்கவா வேணும்! ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல பார்ட்டி செம கறார். நான் வழக்கமா நடிக்கிற சாயல் வந்துடக் கூடாதுனு விரட்டி விரட்டி, வெரைட்டியா நடிக்கவெச்சிருக்கார். என் படங்கள்ல, 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ காமெடி பெஞ்ச் மார்க்கா இருக்கும்!'' - அதே 'அன்லிமிடெட்’ சிரிப்புடன் அட்டகாசமான கார்த்தி.

''சகுனி, 'அலெக்ஸ் பாண்டியன்’, 'அழகுராஜா’னு தொடர்ந்து சந்தானத்தோட படம் பண்ணிட்டே இருக்கீங்களே... இந்தக் கூட்டணி, ரசிகர்களுக்கு போர் அடிக்காதா?''

''நான் நாலைஞ்சு படங்கள் பண்ற நேரத்தில், அவர் 30 படங்களை முடிச்சுடுறார். அந்தப் படங்கள் கொடுக்கிற மெச்சூரிட்டி, எங்களுக்குப் பலம்தானே. டயலாக் டெலிவரி, பாடி லாங்வேஜ், ஸ்டைல்னு ஒவ்வொரு படத்துக்கும் புதுசா வந்து நிக்கிறார். 'இப்படிப் பண்ணணும் ஓய்... அப்படிப் பண்ணணும் ஓய்’னு புதுப்புது ஐடியாக்களைத் தூவிட்டே இருப்பார். அதனால, எங்க கூட்டணி இப்போதைக்கு போர் அடிக்க வாய்ப்பே இல்லை!''

'' 'பிரியாணி’ படம் தாமதமாவதால், வெங்கட் பிரபு மேல வருத்தமா இருக்கீங்கனு சொல்றாங்களே... உண்மையா?''

''அப்படி வருத்தப்பட்டுட்டு இருந்தா, இங்கே ஒரு படமும் பண்ண முடியாது. 'பிரியாணி’ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. படத்துல ஆக்ஷன் போர்ஷனுக்கு நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் நடக்குது. எல்லா ஃப்ரேமும் பிரமாதமா வந்த பிறகுதான் படத்தை ரிலீஸ் பண்ணணும்னு வெங்கட் தெளிவா இருக்கார். என் மத்த படங்களைவிட 'பிரியாணி’ ரொம்பவே ஸ்டைலா இருக்கும். மத்தபடி எனக்கும் வெங்கட்டுக்கும் நடுவில் எந்தப் புயலும் இல்லை பிரதர்.''

''சமீபமா... உங்க படங்கள்ல டபுள் மீனிங் வசனங்கள் தவறாம இடம்பிடிச்சிருதே... ஃபேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிப்பாங்களேனு யோசிச்சிருக்கீங்களா?''

''ஒவ்வொரு முறையும் அந்த மாதிரி வசனங்கள் வரும்போது சந்தானத்துக்கிட்ட சொல்வேன். 'பசங்க என்ஜாய் பண்றாங்க ஓய்’னு சொல்லிடுவார். ஆனா, இப்ப அவர்கிட்ட சொல்லிச் சொல்லிக் குறைச்சாச்சு. சில விஷயங்களை ஸ்பாட்ல பேசும்போது ரொம்ப யதார்த்தமா இருக்கும். ஆனா, எடிட்டிங்ல ஏதாவது ஒரு ஷாட் சேர்த்த பிறகு பார்த்தா, பகீர் அர்த்தம் வந்துரும். ஆனா, 'அழகுராஜா’வுல இந்தப் பஞ்சாயத்தே இருக்காது. டபுள் மீனிங் வசனங்கள் எனக்கும் பிடிக்காதுதான். எங்க வீட்லயும் ரொம்ப ஃபீல் பண்றாங்க. அதனால், இனிமே கவனமா இருப்பேன்! இந்தப் படத்தில் சந்தானத்துக்கு மூணு கெட்டப். அப்புறம் 'சித்ராதேவிப்ரியா’ங்கிற ஹீரோயின் கேரக்டரும் இருக்கு. பசங்க இனி பொண்ணுங்களை 'சித்ராதேவிப்ரியா’னு கூப்பிடுற அளவுக்கு படம் ஹிட் அடிக்கும்.''

''இனி 'ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான படங்கள் பண்ற ஐடியாவே இல்லையா..? கமர்ஷியல் ரூட் மட்டும்தானா?''

'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை நீங்க இன்னும் ஞாபகம் வெச்சிருக்கிறதே எனக்கு சந்தோஷமா இருக்கு. ' 'பருத்திவீரன்’ படத்துக்கு அப்புறம் நீங்க கஷ்டப்பட்டு நடிக்கிற மாதிரி படமே பண்ணலையே’னு என்கிட்ட பலர் கேட்டிருக்காங்க. 'மூணு வருஷமா 'ஆயிரத்தில் ஒருவன்’ பண்ணது நான்தான்’னு அவங்களுக்கு ஞாபகப்படுத்துவேன். காமெடியோ, க்ளாஸிக்கோ எந்தப் படமா இருந்தாலும் அது ஓடினால்தான் இங்கே மரியாதை. இல்லைனா, அந்தப் படத்தை யாரும் ஞாபகம் வெச்சுக்க மாட்டாங்க. நீங்க, நான்னு சிலர் மட்டுமே கொண்டாடுற க்ளாஸிக் படங்களை எத்தனை பேர் இன்னைக்கும் ஞாபகம் வெச்சிருப்பாங்கனு நினைக்கிறீங்க? ஏன்னா, அந்தப் படங்கள் அப்ப ஓடியிருக்காது. ஆனா, 'பருத்தி வீரன்’ படத்தை ஞாபகம் வெச்சிருப்பாங்க. ஏன்னா, அந்தப் படம் ஓடியிருக்கு.

இப்போ அடுத்ததா 'அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். சென்னை சப்ஜெக்ட். வியாசர்பாடியில் நடக்கிற கதை. ரொம்ப லைவ்வா, லைஃபா இருக்கும். 'காமெடியே பண்ணிட்டு இருக்கீங்களே?’னு கேக்கிறவங்களுக்கு அந்தப் படம்தான் என் பதில்!''

'' 'ஆஹா மிஸ் பண்ணிட்டோமே’னு ஃபீல் பண்ணவெச்ச படங்கள் என்னென்ன?''

''ஒரே ஒரு படம்தான். அது 'மதராசபட்டினம்’. அந்த அளவுக்கு எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இன்னும் சில படங்கள் பிடிச்சிருந்தாலும், 'நாம பண்ணலையே’னு ஃபீல் பண்ணவெக்கிற அளவுக்கு இல்லை!''

''விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''

''சிவகார்த்திகேயன் சூப்பர். செம டைமிங் இருக்கு அவர்கிட்ட. ரொம்ப இயல்பா ஸ்கோர் பண்ணிட்டுப் போறார். பார்த்த உடனேயே சிவாவைப் பிடிச்சிருது. விஜய் சேதுபதி, க்ளாஸிக். 'எப்படி... இப்படி வெரைட்டி வெரைட்டியா கேரக்டர் பிடிக்கிறார்?’னு தெரியலை. அவரை ஸ்க்ரீன்ல பார்க்கிறப்பவே சுவாரஸ்யமா இருக்கு. தெளிவான ஸ்கிரிப்ட் பிடிக்கிறார்; அட்டகாசமா நடிக்கிறார். எந்த ஹீரோவும் தொடாத ஏரியாவில் டிராவல் பண்ணிட்டே இருக்கார்!''

''அடுத்தடுத்து கமர்ஷியல் சக்சஸை மட்டுமே மனசுல வெச்சு செயல்படுறதைப் பார்த்தா, சினிமாவைத் தாண்டியும் ஏதோ ஒரு ஐடியா இருக்கிற மாதிரி தெரியுதே!?''

''அட, பொழப்பைத் தேடிப் போறேங்க. அவ்வளவுதான். சேனல்கள், வீடியோ கேம்ஸ், பெர்சனல் பிரச்னைகள்னு எல்லாத்தையும் தாண்டித்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வர்றாங்க. அப்போ 'படம் நல்லாயிருக்கு’னு தெரிஞ்சாதான் வருவாங்க. அதனால் நல்ல படங்கள்ல நடிக்கிறதைத் தவிர, வேற சாய்ஸே இல்லை. ஒரு ஆக்டரா அடுத்தடுத்து பெரிய படங்கள் பண்ணணும். நம்ம மார்க்கெட் பெருசாகணும். அப்பத்தான் பெட்டர் பட்ஜெட் கிடைக்கும். அதனால அதை நோக்கிப் போய்ட்டு இருக்கேன். அப்பதான் எதிர்காலத்துல ஒரு சரித்திர படமோ, மெகா பட்ஜெட் படமோ பண்ணும்போது, 'கார்த்தி இருந்தா பிரமாண்டமா எடுக்கலாம். படத்துக்கு நல்ல கலெக்ஷன் கிடைக்கும்’னு ஒரு தயாரிப்பாளரோ இயக்குநரோ யோசிக்க முடியும். அவ்ளோதான் பிரதர்!''

-  ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்