“லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!” | jeyam ravi, ஜெயம் ரவி

வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (16/11/2013)

கடைசி தொடர்பு:09:29 (16/11/2013)

“லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!”

''வாழ்க்கை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்தடுத்து ரெண்டு வரங்கள் கிடைச்சது மாதிரி மனைவி, குழந்தை ரெண்டு பேரும் அமைஞ்சாங்க. ஷூட்டிங் ஸ்பாட் பிரஷர் எவ்வளவு இருந்தாலும் வீட்டுக்கு வந்து இவங்க முகத்தைப் பார்த்ததும் புது உற்சாகம் தொத்திக்குது. குடும்பம் என்னை நிறையவே மாத்திருக்கு. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா அமையிறதே பெரிய வரம்தான்!'' - நெகிழ்ந்து பேசும் ஜெயம் ரவியின் ஸ்பெஷலே, அறிமுக நடிகரின் அந்த தன்னடக்கம்தான். சினிமா, பெர்சனல் என ரவி பேசியதிலிருந்து...

''வட சென்னையில் இருந்த ரெண்டு பாக்ஸிங் பரம்பரை பற்றிய படம்தான் 'பூலோகம்’. அவ்வளவு தீவிரமா, வெறி பிடிச்சது கணக்கா, பாக்ஸிங் பண்ணிட்டு இருந்திருக்கு ஒரு தலைமுறை. ஆனா, அதை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தாமலே விட்டுட்டோம். அந்த வைப்ரேஷனை அப்படியே கொடுக்கும் படம் இது. படத்துல எமோஷனுக்கும் பெரிய ரோல் இருக்கு. ஜனநாதன் சாரின் அசோசியேட் கல்யாண் கிருஷ்ணாதான், இதன் இயக்குநர். ஜனா சாரின் எல்லாப் படங்களுக்கும் திரைக்கதை அமைச்சவர் இவர்தான். எங்க ஒரு வருஷ உழைப்பு, நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும்!''

''இதென்ன ஹீரோக்கள் தங்கள் வயசுக்கு மீறி நடிக்கும் சீஸனா? 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசு கேரக்டர்ல நடிக்கிறீங்களாமே!''

'' 'நிமிர்ந்து நில்’ - என் சினிமா வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷல் படம். என் வயசுக்கேத்த இயல்பான கேரக்டர், 40 ப்ளஸ் வயசு உள்ள ஒரு கேரக்டர்னு டபுள் ஆக்ட். அந்த நடுத்தர வயசுக்காரர் ஆந்திராவுல இருந்து வர்ற கேரக்டர். செம சவால் கொடுத்த ரோல். அந்த ரெண்டு கதாபாத்திரங்களும் தங்களுக்குனு வெச்சிருக்கிற நியாய-தர்மங்கள்தான் படத்தின் ஹைலைட். கனி அண்ணன், கிராஃபிக்ஸ் டீமோட பேசி, ஸ்டோரி போர்டு தயாரிச்சு, எடிட்டிங் வரைக்கும் யோசிச்சு பக்கா பிளான் பண்ணி வேலை வாங்கியிருக்கார். இவ்ளோ மனநிறைவா ஒரு ஆக்ஷன் படம் பண்றது புதுசா இருக்கு!''

''ரவி, ஆர்யா, ஜீவா, விஷால் டீம் கிரிக்கெட் போட்டிகள்லயும் பார்ட்னர்ஷிப் வைக்குது... நடிகர் சங்க பஞ்சாயத்துகள்லயும் கூட்டணி வைக்குது. அந்தளவுக்கு உறுதியான நட்பின் ரகசியம் என்ன?''

''நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆர்யா பழக்கம். ஜீவா, விஷால் ரெண்டு பேரும் சினிமாவுக்கு வந்த பிறகுதான் பழக்கம். எங்களை இந்தளவுக்கு திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக்கினது கிரிக்கெட்தான். விளையாடுறதைவிட அரட்டைதான் அட்டகாசமா இருக்கும். எல்லாப் போட்டிலயும், 'நிறைய ரன் அடிங்க’னு ஆர்யா எதிர் டீமுக்கு சியர்ஸ் சொல்லிட்டே இருப்பான். 'ஏன்டா இப்படிப் பண்ற?’னு கேட்டா, 'அவங்க ஜெயிச்சா, சீக்கிரம் மேட்ச் முடியும்; சீக்கிரமாக் கிளம்பிடலாமே’னு கூலா சொல்வான். அவனுக்கு எல்லாமே சேட்டைதான். வெளிப்படையா, ஈகோ இல்லாம இருக்கோம். அவ்வளவுதான்!''

''நீங்களும் ஜீவாவும் சேர்ந்து நடிக்கிறதா இருந்த ஜனநாதன் படத்தில் இருந்து ரெண்டு பேருமே விலகிட்டீங்களே.. ஏன்?''

''ஜனா சாருக்கு நான் எப்ப வேணும்னாலும் படம் பண்ணுவேன். எங்களுக்குள்ள அப்படி ஆத்மார்த்தமான புரிதலும் நட்பும் இருக்கு.  'பூலோகம்’, 'நிமிர்ந்து நில்’ படங்கள் ரொம்ப லேட் ஆகிருச்சு. அடுத்து நடிக்கப் போற ராஜா அண்ணன் படமும் தாமதமாகுது. எனக்காக ஜனா சார் காத்திருக்க வேண்டாமேனுதான், 'நாம அப்புறமா ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னேன். அவரும் ஓ.கே. சொல்லிட்டார். இப்ப ஆர்யா-விஜய் சேதுபதி காம்பினேஷன்ல அந்தப் படம் வருது. எனக்கு ஸ்க்ரிப்ட் தெரியும். பெரிய லெவல் படம். நிச்சயம் பிரமாண்ட சக்சஸ் கொடுக்கும்!''

''குடும்ப வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு... பையன் என்ன சொல்றான்?''

''பையன் ஆரவ் செம சேட்டை. இப்போ சமீபத்தில் நானும் பையனும் ஒரு கப்பல்ல போனோம். கண்ணாடி வழியா கடலைப் பார்த்துட்டு, 'எவ்வளவு பெரிய நீச்சல் குளம்’னு ஆர்வமாகிக் குளிக்கக் கிளம்பிட்டான். அவ்வளவு பெரிய கடலையும் சின்னக் குளமாப் பார்த்த அவன் மனசைப் பாராட்டுறதா, 'நீச்சல் குளம்னு நினைச்சுக் குதிச்சிடப் போறானே’னு பயப்படுறதா? வீட்ல அடிக்கடி ஜன்னல் மேல ஏறி நின்னுக்குவான். ஆனா, இறங்கத் தெரியாது. 'அப்பா... அப்பா’னு கத்த ஆரம்பிச்சுடுவான். இப்படி எப்பவுமே தன்னைச் சுத்தி ஒரு டெரர் சிச்சுவேஷன் உருவாக்கிட்டே இருப்பான். வீட்ல இருந்தா, அவன் பின்னாடியே ஓடிட்டு இருப்பேன். குழந்தை வளர்ப்பு எவ்வளவு பெரிய விஷயம்னு ஒவ்வொரு நொடியும் எனக்குப் புரிய வெச்சுட்டே இருக்கான். அவன்கூட இருக்கும்போது என் அப்பா - அம்மாவின் அர்ப்பணிப்பை உணர்றேன். அந்த அன்பும், அர்ப்பணிப்பும்தானே வாழ்க்கை!''

- ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்