கமல் சாரோட நடிக்கணும்னு ரொம்பநாள் ஆசை!

சுயசரிதை எழுதி வெளியிடப்போகிறாராம் ஷகிலா.

''திடீர்னு 'சுயசரிதை’ ஐடியா எப்படி?''

'' 'கேகா’ங்கிற தெலுங்குப் படத்தில் நடிக்கும்போது அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளரா இருந்த பி.சி.ஸ்ரீராம் சார் கொடுத்த ஐடியா இது. 'உன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சுயசரிதையா எழுதினா நல்லா இருக்குமே?’னு சொன்னதுதான் இந்த முயற்சிக்கான இன்ஸ்பிரேஷன். அர்ஷாத்னு ஒருத்தர் நான் சொல்லச் சொல்ல, என் சுயசரிதையை எழுதினார். இப்போ சுயசரிதை முடிஞ்சு பிரின்ட்டுக்கு ரெடியா இருக்கு. டிசம்பர் அல்லது ஜனவரியில் முதலில் மலையாளத்திலும் அப்புறம் தமிழிலும் ரிலீஸ் ஆகும். எல்.கே.ஜி. படிக்கும்போது எல்லா சப்ஜெக்ட்லேயும் 100/100 வாங்கினதுல ஆரம்பிச்சு, எட்டாம் வகுப்பு ஃபெயில் ஆனதுக்கான காரணம்... பத்தாம் வகுப்பு டுடோரியல்ல படிச்சுட்டு, குடும்பக் கஷ்டத்தினால சினிமாவுக்கு வந்தது... நடிகை ஆகணும்னா கை நிறைய போட்டோ ஷூட் படங்களை வெச்சுக்கிட்டு வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தவங்க மத்தியில, எந்த போட்டோ ஷ§ட்டுக்கும் போகாம முதல் படத்துல வாய்ப்பு பெற்றதுனு இந்த 36 வயசு வரைக்கும் என்னென்ன நடந்துச்சோ... எல்லாமே அந்த சுயசரிதையில இருக்கும்.

நான் என்ன சாதனை பண்ணிட்டேன்னு, சுயசரிதை எழுதணும்..? தவிர, என்னோட கஷ்டங்களை யாரும் காசு கொடுத்துப் படிக்கவேண்டிய அவசியமில்லை. அதனால, எல்லாத்தையுமே சொல்லியிருக்கேன்.

20 வருஷமா சினிமாவிலேயே இருந்துட்டு கமல் சாரோட நடிக்கணும்கிற நீண்டநாள் ஆசையையே என்னால சாதிக்க முடியலை.''

''இன்னும் கொஞ்சம் டீட்டெய்லா... சொல்லலாமே?''

'' இப்போ என்னோட தம்பியைத் தவிர எனக்கு யாருமே இல்லை. அம்மா, அப்பா இறந்துட்டாங்க. போன மார்ச் மாசம் அண்ணன் இறந்துபோனான். இந்த சுயசரிதையை எழுத ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷத்துலேயே அழுகைதான் வந்துச்சு. அந்த அளவுக்கு என்னோட சிஸ்டர் என்னை ஏமாத்திட்டா. இத்தனைக்கும் நான் அவளுக்கு எந்தத் துரோகமும் பண்ணலை. 'நான் ஒரு சினிமா நடிகை’ங்கிறதால ஒதுக்கிவெச்சுட்டாளாம்... ஆனா, இப்போ அவளே ஒரு டி.வி. சீரியல்ல நடிச்சுட்டிருக்கா. கூடப் பொறந்தவங்களா இருந்தாலும் சரி, யாரையும் அவ்வளவு ஈஸியா நம்பிடாதீங்க.''

''நீங்க சுயசரிதை எழுதுறதுனால, சில சினிமா பிரபலங்களுக்குப் பதட்டமா இருக்குமே?''

''அவங்க ஏங்க பதட்டப்படணும்? நான் என்னோட ஃலைப்ல நடந்த விஷயங்களை எழுதுறேன். 15 வயசுல சினிமாவுக்கு வரும்போது, என்னை அறிமுகப்படுத்தின தயாரிப்பாளரும் சரி, இயக்குநரும் சரி... என்னை அவங்க வீட்டுப் பொண்ணாதான் பார்த்தாங்களே தவிர, யாருமே வேற எந்த மாதிரியும் ட்ரீட் பண்ணலை. இப்படி எதுவுமே நடக்காதபோது நான் ஏன் அவங்களைப் பத்தி எழுதணும்?''

''இப்படி கவர்ச்சி நடிகையாவே இருந்துட்டோமேனு என்னைக்காவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா?''

'' சான்ஸே இல்லை. நான் கவர்ச்சி காட்டி நடிச்சது 2000 வருஷத்துல, இப்போ 2013.  இன்னைக்கு வரைக்கும் நீங்க என்னை ஞாபகம் வெச்சுக்கிட்டு இருக்கீங்கனா, அதுக்குக் காரணம்....? நான் காட்டின கவர்ச்சி மட்டும்தான். சினிமாவில வரும்போது இழுத்துப் போர்த்திட்டு நடிக்கணும்னுதான் வந்தேன், ஆனா கவர்ச்சி கேரக்டர்தான் கொடுத்தாங்க!''

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!