நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! | ராஜேந்திரன், நயன்தாரா, rajendran, nayanthara

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (18/11/2013)

கடைசி தொடர்பு:10:20 (18/11/2013)

நயன்தாரா மேல லைக் இருக்குப்பா !

மொட்டைத் தலை, கரகர குரல், கத்திப்பேசுற வசனம்... இந்த க்ளூ போதாதா? 'நான் கடவுள்’ ராஜேந்திரனைக் கண்டுபிடிக்க. 'ராஜா ராணி’, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வைத் தொடர்ந்து தற்போது, 'சகுந்தலாவின் காதலன்’, 'ஜாக்கி’ படங்களில் நடிப்பவரிடம் ஒரு ஜாலி பேட்டி...

''ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் டு ஆர்ட்டிஸ்ட்... எப்படி இருக்கு?''

''எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி. ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டு, சைக்கிள் கடையில வேலை பார்த்துட்டிருந்தேன். அப்புறம் அந்த சைக்கிள் கடையை மூடினதும், ஸ்டன்ட் எனக்குக் குலத்தொழில் ஆயிடுச்சு. நான், எங்க அப்பா, அண்ணனுங்ககூட ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்தான். இப்படி ஷூட்டிங் இருந்தா காசு, இல்லைன்னா கூலி வேலைனு ஓடிட்டிருந்தேன். ஒருநாள் 'பிதாமகன்’ல ஸ்டன்ட் சீன்ல வேலை பார்த்துட்டு இருந்தப்போ, 'அடுத்த படத்துல உனக்கொரு கேரக்டர் இருக்கு’னு பாலா சார் சொன்னாரு. அப்போ ஆரம்பிச்சதுதான். இப்போ நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைக்கிறதுனால, நடிப்புல மட்டுமே கவனம் செலுத்துறேன். முன்ன இருந்ததைவிட வாழ்க்கை, இப்போ ரொம்ப சூப்பரா இருக்கு!''

''சின்ன வயசுல ரொம்ப அடி வாங்கினவங்கதான் ஸ்டன்ட் மாஸ்டரா இருப்பாங்களாமே... அப்படியா?''

''அதெல்லாம் உண்மையா, இல்லையானு நமக்குத் தெரியாதுங்க. ஆனா, உண்மையிலேயே சின்ன வயசுல எக்கச்சக்கமான பேர்கிட்ட அடி வாங்கியிருக்கேன். ஏரியாவுல திரியிற வாண்டுகள்ல இருந்து, பள்ளிக்கூடத்து வாத்தியார் வரைக்கும் எல்லோரும் என்னை வெளுத்துருக்காங்க. இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேருகிட்ட அடி வாங்க முடியுதுனா, அதுக்குக் காரணம் இவங்கெல்லாம் எனக்குக் கொடுத்த அடிதான்!''

''உங்க வாய்ஸே இப்படித்தானா, இல்லை கத்திக் கத்திப் பேசவெச்சே இப்படி ஆக்கிட்டாங்களா?''

''சூப்பரா சொன்னப்பா... அதான் நிஜம். ஒரு படத்துல அந்த மாதிரி கத்திப் பேசினேன். அடுத்தடுத்த படத்திலேயும் இதே மாதிரியே பேசச் சொல்லிட்டாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல ரெண்டு தடவை கத்திப் பேசுறேன்னா, டப்பிங் பண்ணும்போது நாலு தடவை கத்தணும். இதுல என்ன கொடுமைன்னா, இப்பெல்லாம் 'சவுண்ட் பத்த மாட்டேங்குது... இன்னும் கொஞ்சம் கத்திப் பேசுங்க'னு சொல்றாங்கப்பா!''

''வாய்ஸ் ஓகே... மொட்டையோட திரியிறதுக்குக் காரணம்?''

''அதுவா... முன்னாடியெல்லாம் நல்லாத்தாம்பா முடி இருந்துச்சு. ஒரு மலையாளப் படத்துல ஸ்டன்ட் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டிருந்தப்போ, ஆத்துல குதிக்கிற மாதிரி ஒரு சீன்... குதிச்சிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா, தலை பூரா பொட்டு பொட்டா வீங்க ஆரம்பிச்சுடுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சது, நான் குதிச்ச ஆத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஃபேக்டரியில இருந்து, கெமிக்கல் கழிவு தண்ணியில கலக்குதுனு... அப்போ ஆரம்பிச்சதுதான் முடி கொட்டுறது. இப்போ புருவம் இல்லாத, ஏன்? உடம்பு பூராவுமே முடி இல்லாத ஆளாக்கிடுச்சு!''

''உங்க ஆசைக்காக கேட்கிறேன்... எந்த நடிகையோட ஜோடியா நடிக்கணும்னு ஆசை?''

''எனக்கு நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும். இதுவரைக்கும் அவங்களோட நான் பழகலைன்னாலும், அவங்களோட ரியாக்ஷன், பேச்சு, நடிப்பு எல்லாமே தனியாத் தெரியும். அதனால, எனக்கு அவங்க மேல சின்னதா ஒரு லைக் இருக்குப்பா!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close