கெட்ட பய சார் இந்த விஜய்!

 விஜய் சேதுபதியுடன் ஒரு 'ரேபிட் ஃபயர்’ ரவுண்ட்...

''உங்க வெயிட் எவ்வளவு?''

''ரொம்ப வருஷமா, 85 கிலோ!''

''பொக்கிஷம்?''

''என் அப்பாவின் சில புகைப்படங்கள். அப்புறம் 'தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வெளியான சமயம், என்னைப் பாராட்டி ஒரு சின்னக் குறிப்பு விகடன்ல வந்தது. அதை என் தங்கச்சி லேமினேட் பண்ணிக் கொடுத்தாங்க!''

''மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் சினிமா?''

''முள்ளும் மலரும்''

''இப்போ பர்ஸ்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?''

(எண்ணிப் பார்த்துச் சொல்கிறார்) ''250 ரூபா!''

''உங்க உயிர்த் தோழன்?''

''சூர்யா... என் பயங்கர தோஸ்த். ஆனா, ப்ளஸ் ஒன் படிக்கும்போது இறந்துட்டான். ப்ச்... அவன் ஞாபகமாத்தான் என் மகனுக்கு 'சூர்யா’னு பேர் வெச்சேன்!''

 

 

''இப்போ என்ன கார் வெச்சிருக்கீங்க?''

''செகண்ட்ஹேண்ட்ல வாங்கின லேன்சர் கார்!''

''சென்னையில் பிடிச்ச ஸ்பாட்?''

''சாலிகிராமம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு டீக்கடை. அங்கே கிடைக்கிற இஞ்சி டீக்கு நான் அடிமை!''

''அடிக்கடி நினைத்து மகிழும் பாராட்டு?''

''அமெரிக்காவில் இருந்து ஒரு வி.ஐ.பி. என்னைப் பார்க்க வந்தார். என்னை மாதிரியே பேசி நடிச்சுக் காமிச்சார். அவர் பெயர் யதுனன், வயசு ரெண்டு!''

''உங்கள் பலம்?''

''நான் நடிக்கும் படங்களின் கதையை நானே முழுசா, சீன் பை சீன், ஒவ்வொரு வசனமும் கேட்டு அப்புறம் முடிவெடுக்கிறது!''

''உங்கள் பலவீனம்?''

''நான் ஒரு சூப்பர் சோம்பேறி!''

''தமிழ் சினிமாவில் பிடித்த பன்ச் வசனம்?''

'' 'மகாதேவி’ படத்துல 'மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி’னு பி.எஸ்.வீரப்பா சொல்றது. அப்புறம், 'முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி சொல்ற 'கெட்ட பய சார் இந்தக் காளி’!''

- டி.அருள் எழிலன், படம்: பொன்.காசிராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!