Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“எனக்கு சினிமா இயக்குவது செக்ஸ் வைத்துக்கொள்வது போல...”

ட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்.

ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து...

'' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவையான சினிமா!'' என்று உரையாடலைத் தொடங்கிவைக்கிறார் சசி.

''இந்தப் படத்துல சார் நடிச்சிருக்கார். ஆனா, அந்தக் கேரக்டர்ல அவர்தான் நடிக்கப்போறார்னு எனக்குத் தெரியாது. கதை சொல்லி முடிச்ச பிறகு, 'உங்களுக்கு ஒரு விஷயம் காட்டுறேன்’னு சொல்லி ஒரு தாத்தாவின் போட்டோ காட்டினார். 'யார் சார் இவர்? கண்ணு பவர்ஃபுல்லா இருக்கே. உங்களுக்கு இன்னொரு சொக்கலிங்க பாகவதர் கிடைச்சிட்டாரு’னு சொன்னேன். 'நான்தான் இது. அந்தக் கேரக்டர்ல நான்தான் நடிக்கப்போறேன்’னு  சார் சொன்னார்!'' என்று சசிகுமார் முடித்த இடத்தில் இருந்து தொடங்குகிறார் பாலுமகேந்திரா.

''நம் குடும்பங்களின் அடிப்படை உறவுகள்தான் படத்தின் கரு. நம் குடும்பங்களைத் தூக்கிச் சுமந்து கரைசேர்ப்பது நம் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதை. பெண்கள் மீது எனக்குள்ள ஆராதனை கலந்த மரியாதையும் மதிப்பும் படத்தில் வெளிப்படும்!''

''நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்குகிறீர்கள். ஏதேனும் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?''

''திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர்... இந்த நாலு பேரும்தான் படத்தின் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தில் அந்த நாலுமே நான்தான். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. என் படத்தை நானே எழுதி, நானே ஒளிப்பதிவு பண்ணி, நானே இயக்கி, நானே எடிட் செய்தால்தான் எனக்குத் திருப்தி. ஒரு படம் எடுப்பது என்பது, எனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணோட செக்ஸ் வெச்சுக்கிற மாதிரி. 'நீ பாதி பண்ணு, நான் பாதி பண்றேன்’னு அதை என்னால் யார்கிட்டயும் பிரிச்சுக் கொடுக்க முடியாது.

ஓர் எழுத்தாளன், 'இது என் சிறுகதை’னு சொல்றான். ஓர் ஓவியன், 'இது என் ஓவியம்’னு சொல்றான். ஆனா, ஒரு சினிமாக்காரன், 'இது என் படம்’னு சொல்ல முடியலை. காரணம், சினிமா இங்கே ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆனா, சரியோ தப்போ என் படத்துக்கு நான்தான் பொறுப்பு. 'எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு போட்டேன்னா, அதை ஒரு திமிரோடதான் போடுவேன்!''

''சினிமா 100 விழாவைப் புறக்கணித்து உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தீர்கள். அந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?''

''கலந்துக்கலைனுதான் சொன்னேனே தவிர, என் ஆதங்கத்தை எங்கேயும் நான் வெளிப்படுத்தலை. அதைப் பத்தி ஏன் என்கிட்ட கேக்குறீங்க? இப்படி சிண்டு முடிந்துவிட்டு கலைஞர்களை சிக்கலில் மாட்டிவிடும் வேலை வேண்டாமே?''

''இது சிண்டு முடிவதற்கான கேள்வி அல்ல. அரசு, மக்களின் வரிப் பணத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அந்த நிகழ்வுக்கு அளித்திருக்கிறது. அது சினிமாவுக்கு ஆக்கபூர்வமான நன்மைகளை விளைவித்திருக்கிறதா என்று ஒரு சினிமா படைப்பாளியான உங்களிடம் கேட்கிறேன்!''

''அரசைக் கேளுங்கள். அல்லது இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். ஆனால், ஒரு விஷயம் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொக்கிஷம்னா, அது பழைய படங்கள்தான். அதோட நெகட்டிவ்களைக் காப்பாத்த, பாதுகாக்க ஒரு காப்பகம் தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. இதை மூணு வருஷமா சொல்லிச் சொல்லி தலப்பாடா அடிச்சுட்டு இருக்கேன். ஆனா, அதை யாரும் கண்டுக்கவே இல்லை!''

''இதை ஏன் அரசாங்கம் செய்யணும்னு நினைக்கிறீங்க? சினிமாத் துறையினரே சேர்ந்து செய்யலாமே!''

''செய்யணும்தான்! அதுக்கான முறையையும் சொன்னேன். கேளிக்கை வரி மூலம் அரசாங்கம் வருமானம் ஈட்டுவதால், பாதி பணத்தை அரசாங்கம் போடட்டும். சினிமாத் துறையினர் மீதியைச் செலவழிக்கட்டும். மேற்கொண்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, சினிமாவில் ஆர்வமுள்ள ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் சில சிப்பந்திகள் மட்டுமே போதும். இப்படியான ஒரு காப்பகம் இல்லாமல் நிறைய தமிழ்ப் படங்கள் அழிஞ்சிருக்கு. 'அழியாத கோலங்கள்’, 'வீடு’, 'சந்தியா ராகம்’, 'மூன்றாம் பிறை’, 'மறுபடியும்’ போன்ற என் படங்களின் நெகடிவ்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் வந்த படங்கள் இல்லை. வெறும் 20 வருடங்களுக்குள் வந்த படங்கள். சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், இந்தப் புள்ளியிலிருந்து தங்கள் பணிகளைத் தொடங்கலாம்!''

   - ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement