கண் பேசும் வார்த்தைகள்... | ரூபா மஞ்சரி, rooba manjari

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (07/12/2013)

கடைசி தொடர்பு:14:28 (07/12/2013)

கண் பேசும் வார்த்தைகள்...

ரை மணி நேரத்தில், ஓர் அழகியை ஓவியமாகத் தீட்ட வேண்டும். சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், யோகேஷ், கிருஷ்ணகுமார், விஷ்ணு நால்வரும் உற்சாகமாக வந்தனர். அந்த அழகி... நடிகை ரூபா மஞ்சரி.

''தமிழ், மலையாளம்னு நாலு படங்கள் நடிச்சுட்டேன். அந்தப் படங்களின் ரிசல்ட் எப்படி வரும்னு பயந்ததைவிட, இவங்க ஓவியங்கள் எப்படி வரும்னு உதறலா இருக்கு. பிரதர்ஸ்... என் கண், மூக்கு, புருவம்னு தனித்தனியாக் கவனமா, பொறுமையா வரைங்கப்பா. கார்ட்டூன் மாதிரி வரைஞ்சு காமெடி பீஸ் ஆக்கிடாதீங்க!'' என ரூபா  சொல்ல,  ''மேம்... இப்படிப் பேசிட்டே இருந்தா, எங்களால கச்சிதமா வரைய முடியாது. பேசாம இருங்க ப்ளீஸ்!'' என்று செல்ல அதட்டல் போட்டார் யோகேஷ்.

''என் வாழ்க்கையில் முதல்முறையா மியூட்ல இருக்கப்போற அரை மணி நேரம் இதுதான்!'' என சிரித்தபடி அமைதியானார் ரூபா. கூர்மையான பார்வையுடன் தீவிரமானார்கள் ஓவியர்கள்!

அரை மணி நேரத்தில் நாலு வெர்ஷன்களில் அழகியின் படம் தயார். ஓவியங்கள் ரூபாவை வெவ்வேறு ரசனைகளில் அழகாகப் பிரதிபலித்தன. ஒவ்வோர் ஓவியத்தையும் பார்த்து ரசித்த ரூபாவின் முகத்தில் அத்தனை ஸ்மைல்கள்.

''கண்ணும் சிரிப்பும்தான் என்கிட்ட அழகா இருக்கும்னு சொல்வாங்க. நாலு பேரும் வரைஞ்ச ஓவியங்கள்ல அந்த ரெண்டும்தான் அழகா வந்திருக்கு. நான் கியூட்தான்ல!'' என பூரித்தார் ரூபா.

''உங்களைப் பார்த்ததும் அந்தக் கண்களும் சிரிப்பும்தான் வசீகரிக்குது... இப்படி எல்லாரும் சொல்லிச் சொல்லித்தான் நீங்க நடிகை ஆகலாம்னு முடிவு பண்ணீங்களா?''

''யெஸ். ஸ்கூல் நாடகங்கள்ல நடிக்கும்போதே,  'நீ நல்லா நடிக்கிற. அழகா இருக்க’னு சொல்லிட்டே இருப்பாங்க. அதுதான் சினிமா ஆசையைத் தூண்டிவிட்டது. ஆனா, அழகா இருக்கணும்னு நான் கேர் எடுத்துக்கவே மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட் தவிர வேற எப்பவும் மேக்கப் பண்ணிக்க மாட்டேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். நல்லா சாப்பிடுவேன். சூப்பராத் தூங்குவேன். இதைச் சொன்னா, யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க!''

''ஒரு ஹீரோயினா உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''

''ஷூட்டிங் ஸ்பாட்ல சின்சியரா இருப்பேன். சின்னச் சின்ன ரியாக்ஷனுக்கும் மெனக்கெடுவேன். இது ப்ளஸ்னு சொல்லலாம். மைனஸ்... நான் வெளிப்படையா இருக்கிறது. என்னை ஒரு படத்தில் அயிட்டம் நம்பருக்கு ஆடக் கூப்பிட்டாங்க. டென்ஷன் ஆகிட்டேன். 'அதெல்லாம் எனக்குப் பிடிக்காது’னு சொல்லி மறுத்துட்டேன். இந்த விஷயம்னு இல்லை, எவ்வளவு முக்கியமான வாய்ப்பா இருந்தாலும் எனக்குப் பிடிக்கலைனா அதைத் தவிர்த்துடுவேன். சினிமாவில் இந்தக் குணம் மைனஸ்னு சொன்னாங்க. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை!''

''பிடிச்ச ஹீரோ, ஹீரோயின்?''

''ஹீரோ தனுஷ். அவர் பெர்ஃபார்மன்ஸுக்கு நான் ரசிகை. அவர்கூட ஒரு படம் நடிக்கணும்னு ஆசை. ஹீரோயின், அனுஷ்கா. ஒரு நடிகையா அவங்க கேரியரும், பர்சனல் வாழ்க்கைக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவமும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!''

- ஆ.அலெக்ஸ் பாண்டியன் படங்கள்: கே.ராஜசேகரன் , பொன்.காசிராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்