எல்லாமே இழவுப்பாட்டு!

மிழ் சினிமாவில் 'இழவு’க் காட்சியை எடுக்கவேண்டும் என்றால், படத்தின் தயாரிப்பாளரிடம் தலைகீழாகத் தண்ணி குடிக்கவேண்டிய நிலைமை இயக்குநர்களுக்கு. ஆனால் 'விழா’ என்ற படத்தில் ஆறு பாடல்கள். எல்லாமே இழவு வீட்டில் நடக்கும் பாடல்கள். அதில் இரண்டு ஒப்பாரிப் பாடல்கள். அடடே மூணு ஆச்சர்யக்குறியோடு படத்தின் இயக்குநர் பாரதி பாலகுமாரனிடம் பேசினேன்.

''எனக்கு சொந்த ஊர் திருச்சி. காலேஜ்ல படிக்கும்போதே மைமிங், வீதி நாடகம்னு ஆர்வமாக் கலந்துப்பேன். அந்தச் சமயத்துலதான் 'நாளைய இயக்குநர் சீஸன் 3’ல கலந்துக்க வாய்ப்பு கிடைச்சுது. நான் இயக்கிய 'உதிரி’ குறும்படம் 'சீஸன் 3’யோட 'ரன்னர்-அப்’ விருதைப் பெற்றது. 'மாஸ்டர்’ மகேந்திரன்தான் அந்தக் குறும்படத்திலும் நாயகன். இப்போ அதே கதையைப் படமா எடுக்கும்போதும் அவரையே நடிக்கவெச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு'', 'விழா’ அறிமுகம் கொடுத்துத் தொடர்கிறார்...

'தென் மாவட்டங்கள்ல ஆண்டு, அனுபவிச்சு இறந்துபோனவங்க சாவைக் 'கல்யாண சாவு’னு சொல்லி, குறவன் - குறத்தி நாடகம், கரகாட்டம்னு ஆர்ப்பாட்டமான விழாவாக் கொண்டாடுவாங்க. அப்படி ஓர் இழவு வீட்டுல ஒப்பாரி வைக்கிற பொண்ணுக்கும், அந்த இழவுல பறையடிக்கிற ஒரு பையனுக்கும் காதல் இருந்தா, எவ்வளவு அழகா இருக்கும்னு யோசிச்சப்போ உருவான கதைதான் இது. ஏன்னா, கல்யாண சாவு எப்படி அவங்க சொந்தங்களுக்கு விழாவா இருக்குதோ, அந்த மாதிரி இழவு வீட்டுல மட்டுமே சந்திச்சுக்கிற காதலர்களுக்கு அதுதானே 'விழா’வா இருக்க முடியும்? அதுக்குத்தான் இந்தத் தலைப்பு.

எல்லா சாவு வீட்டுக்கும் வான்ட்டடா எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்ய ஓர் ஆள் வருவார். அந்த மாதிரி இந்தப் படத்துக்கும் 'முயல்’னு ஒரு சூப்பர் கேரக்டர் இருக்கு. இப்படி மொத்தப் படமே சாவு சம்பந்தமானதுனு சொல்றதுனால, பிழியப் பிழிய அழவெச்சுடுவானோனு பயந்துடாதீங்க. காதலும் காமெடியும்தான் களம்.

என்ன ஒண்ணு... சாவு வீட்டுல நடக்கிற கதைன்னு சொல்லி ஷ§ட்டிங் பண்ணத்தான் முடியலை. அதனாலதான் சில காட்சிகளை ஷூட்டிங் நடந்த வீட்டுக்காரங்களுக்குத் தெரியாமலே எடுத்தோம். படத்தோட பாடல்களை எல்லோருமே ரசிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு... சீக்கிரமே படமும் ரிலீஸ் ஆயிடும். அதுவரைக்கும் எங்க ஒப்பாரியைக் கேட்டுக்கிட்டே இருங்க!'' என்கிறார்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!