இது ஒரு நல்ல கேள்வி! | kamal. கமல்

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (03/01/2014)

கடைசி தொடர்பு:11:52 (03/01/2014)

இது ஒரு நல்ல கேள்வி!

 

 

திடீர்னு எனக்கு ஒரு டவுட். 'பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்’, 'அமீரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்’ அவ்வளவு ஏன்... இன்னும் கொஞ்ச நாளில், 'ராஜகுமாரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்’னுகூட அறிமுக இயக்குநர்களோட அடையாளத்தைப் பார்க்கலாம். ஆனா, சினிமாவின் தூண், கலையுலக வாரிசு, உலக நாயகன் என்று போற்றப்படுகிற கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இயக்குநர் ஆனவர்ங்கிற லிஸ்ட்டைப் பார்த்தா, கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலியாத்தான் இருக்கு. கமல்ஹாசனிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சிலரிடம் காரணம் கேட்க, அவர்கள் சொன்னது அப்படியே இங்கே....

அசோக் : ''கமல் சாரோட 'ஹேராம்’, 'ஆளவந்தான்’, 'விருமாண்டி’ படங்கள்ல உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். அந்த அனுபவத்தில் 'ஆயுள் ரேகை’னு ஒரு படம் இயக்கினேன். ஃபிலிம்ல படம் எடுத்துட்டு இருந்த காலத்துல டிஜிட்டல்ல உருவான படம் அது. 2005-ல ரிலீஸ் ஆச்சு. சரியான வரவேற்பு கிடைக்கலை. அதே சமயம், சில படங்கள்ல லைன் புரொடியூசரா வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, 'லியோ விஷன்’ சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசரா இருக்கேன். மத்தபடி, கமல் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்கிறவங்க, படம் பண்றதில்லைனு சொல்ல முடியாது. அவங்களுக்கான வாய்ப்புகள் இன்னும் கிடைக்கலை அவ்வளவுதான். இயக்குநர் ஆகணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். இப்போ புரொடக்ஷன் ஃபீல்டில் வொர்க் பண்ற திறமையும் எனக்கு இருக்குன்னா, அதுக்குக் காரணம் கமல்கிட்ட உதவி இயக்குநரா இருந்ததுதான். அவர்கிட்ட வொர்க் பண்ணினா, கத்துக்க வேண்டிய விஷயமும் அதிகமா இருக்கும். கத்துக்கிறவங்க அதை வெளிப்படுத்துற காலமும் அதிகமாத் தேவைப்படும்''

ரவிதேவன் : ''ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல டைரக்ஷன் கோர்ஸ் முடிச்சவன் நான். சினிமாத் துறையில் அடுத்து மேல்படிப்பு படிக்கணும்னா அது கமல் சார்கிட்ட மட்டும்தான் கத்துக்க முடியும்னு உதவி இயக்குநரா சேர்ந்து, அவருடைய 'விருமாண்டி’ படத்தில் வொர்க் பண்ணினேன். பாதிப் படம் முடிகிற சமயத்திலேயே அந்தப் படத்தில் வொர்க் பண்ணின பல உதவி இயக்குநர்கள் விலகிட்டாங்க. கடைசி வரை கமல் சாரோட இருந்த ஆட்கள்ல நானும் ஒருத்தன்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். அப்புறம் விளம்பரப் படங்கள் இயக்க ஆரம்பிச்சேன். ஏகப்பட்ட விளம்பரப் படங்கள் இயக்கினேன். போன வருஷம் ரிலீஸ் ஆன 'கள்ளத்துப்பாக்கி’ படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர். 50 வயசுலகூட சினிமா டைரக்ட் பண்ணிக்கலாம். அதுக்கு இடைப்பட்ட காலத்துல கஷ்டப்படுற உதவி இயக்குநர்களுக்கு வழிகாட்டியா இருக்கலாமேன்னுதான் தயாரிப்பில் இறங்கினேன். இப்போ பசும்பொன் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாற்றை, 'தேவரய்யா’ங்கிற பெயரில் படமா எடுக்கிறேன். எந்த விஷயத்தை ஆரம்பிச்சாலும், என்னுடைய குருநாதர் கமல் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணிடுவேன்.

பொதுவா ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் அவர் வொர்க் பண்ற படங்களுடைய தயாரிப்பாளர் சார்ந்துதான் வாய்ப்புகள் கிடைக்கும். இங்கே கமல் சாரே தயாரிப்பாளரா இருக்கிறதால, அந்த வாய்ப்புக் கிடைக்காமப் போயிருக்கலாம். கமல் சார், தான் தயாரிக்கிற படங்கள் தவிர்த்து, மத்த இயக்குநர்களுடைய படங்கள்ல நடிப்பதால், மறுபடியும் தன்னுடைய தயாரிப்பில் உருவாகிற படத்துக்கு அவருடைய உதவி இயக்குநர்களை வெயிட் பண்ண சொல்ல முடியாது. தவிர, அவருடைய படங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில்தான் ரிலீஸ் ஆகும். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு யுனிவர்சிட்டி. அவர்கிட்ட வொர்க் பண்ற சான்ஸே மிகப் பெரிய தவம். அதுக்கான பலன் லேட்டா கிடைச்சாலும், முழுமையா இருக்கும்னு நம்புறேன்''.

தனுஷ் : ''எங்க அப்பா ஏ.கே.நடராஜன் சினிமாவில் 40 வருஷமா போட்டோகிராஃபரா இருந்தவர். 'களவாணி’, 'வாகை சூட வா’, 'ஆரம்பம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஓம்பிரகாஷ் என் அண்ணன். தவிர, 'பூவிழி வாசலிலே’ பேபி சுஜிதா என் மனைவி. இப்படி மொத்த ஃபேமிலியே சினிமா பின்ணனியில் இருந்ததால், சினிமா ஆர்வம் இயல்பாவே இருந்தது. உதவி இயக்குநர் வாய்ப்புக்காக சீரியஸா ட்ரை பண்ணிட்டிருந்த சமயத்தில், கௌதமி மேடம் மூலமாக் கிடைச்ச வாய்ப்புதான் 'விருமாண்டி’. 'மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் வொர்க் பண்ணினேன். இடையில் 'ஆரஞ்ச் ட்ரீ’ங்கிற விளம்பர நிறுவனம் ஆரம்பிச்சு விளம்பரத் துறையில் இறங்கிட்டேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் எடுத்திருக்கேன். மம்முட்டி நடிச்ச, 'உதயம்’ வேஷ்டிகள் விளம்பரம் நான் எடுத்தது. இந்தத் திறமைகள் எல்லாமே கமல் சார்கிட்ட கத்துக்கிட்டதுதான்.

'மும்பை எக்ஸ்பிரஸ்’ல வொர்க் பண்ணிட்டிருக்கும்போதே, படம் டைரக்ட் பண்ற சான்ஸ் கிடைச்சது. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி பண்ணலாமேனு அதை அவாய்ட் பண்ணிட்டேன். கமல் சார் இன்னைக்கு வரைக்கும் எதையாவது புதுசா கத்துக்கிட்டேதான் இருக்கார். அதே பாதையில் நானும் இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டு பண்ணலாமேனு வெயிட் பண்றேன். சுருக்கமா சொல்லணும்னா, கமல் சாரோட உதவி இயக்குநர்கள் ஒரு இயக்குநரா மட்டும் சினிமாவில் வெற்றி பெறாமல் இருக்கலாமே தவிர, சினிமாத் துறையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சக்ஸஸ் பாயின்ட்லதான் இருக்காங்க!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்