கேரள - தமிழ் ரசிகர்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது!

விஜய் - மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் 'ஜில்லா' . மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப் பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை...

'ஜில்லா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?
'ஜில்லா' படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்திக் கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் எதற்கு? கதை அழகாக இருந்தது. அதில் எனது கேரக்டரும் வலுவாக, பொருந்தும்படியாக இருந்தது.

விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறீர்களே? ஹீரோ இம்மேஜ் பாதிக்காதா?
படம் பார்க்கும் யாருக்கும் அப்படி ஒரு கேள்வி எழாது. மதுரை மண்ணுக்கே உரித்தான வீரமும், கர்வமும் கலந்த பாத்திரத்தில் வந்திருக்கிறேன்.

தமிழில் விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் உள்ளனர், கேரளாவில் உங்களுக்கும் பெரிய ரசிகர்கள் உள்ளனர்? இரண்டு ரசிகர்களும் திருப்தியடைவார்களா?
தமிழ்நாட்டில் விஜய்க்கு பெரிய ரசிகர்கள் உள்ளது போல் கேரளாவிலும் அவருக்கு பெரிய ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக இனிப்பான பொங்கலாக ஜில்லா இருக்கும்.

கேரளா, தமிழ் ரசிகர்கள் பற்றி?
கேரளா, தமிழ் மக்கள் உறவுகளால், உணர்வுகளால், கலாசாரத்தால் ஒன்றானவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய நட்பு இது. இந்த அன்பையும், நட்பையும் யாரலும் பிரிக்க முடியாது. தமிழ்ப் படங்கள் கேரளாவிலும், கேரளா படங்கள் தமிழிலும் அதனால்தான் நன்றாக ஓடுகிறது.

மலையாளத்தில் நீங்கள் நடித்த ‘திரிசம்’ சூப்பர்ஹிட் ஆகியுள்ளதே?
இந்தப் படத்தின் கதை சொல்லும்போது பெரிய அழுத்தம் இருந்தது. இந்தக் கதையில் ஹீரோயிசம் இல்லையென்பது எனக்கு தெரியும். ஆனால் கேரக்டர் அவ்வளவு அழுத்தமாக இருந்தது. ‘திரிசம்’ தமிழ், தெலுங்கில் கூட தயாராக உள்ளது.

விஜய்யுடன் உங்கள் நட்பு பற்றி...
சிறிய வயதிலேயே சூப்பர் ஸ்டார் ஆனவர். ஆனால் அதற்குரிய எந்த பந்தாவும், பதட்டமும் அவரிடம் இல்லை. பங்சுவாலிட்டி, ஒழுக்கம், உழைப்பு என பல நல்ல குணங்கள் அவரிடம் உள்ளது. அதனால்தான் இவ்வளவு ரசிகர்களைப் பெற்று உயர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் இருவரும் அமைதியாகத்தான் இருந்தோம். போக, போக நல்லாப் பழக ஆரம்பித்து, நகைச்சுவையோடு பேச ஆரம்பித்தோம். இப்போது அவர் வீட்டிற்கு நானும், எனது வீட்டிற்கு அவரும் வந்து போகும் அளவிற்கு நட்பு வளர்ந்துள்ளது.

'ஜில்லா' படம் பார்த்தீர்களா?
நானும் எனது மனைவியும் சேர்ந்து பார்த்தோம். சிவனும், சக்தியும் சேர்ந்த 'ஜில்லா' படம் மாசுடா பாடலுக்கு நானும், விஜய்யும் நடனமாடியதை எல்லோரும் பாராட்டினார்கள். எனது மனைவி எதையும் வெளிப்படையாக விமர்சிப்பவர். அவருக்கு படம் சூப்பராக பிடித்துள்ளது.

கேரளாவில் நீங்கள்தான் 'ஜில்லா'வை வெளியிடுகிறீர்களாமே?
நான்தான் வெளியிடுகிறேன். சுமார் 300 திரையரங்கங்களில் படம் வெளியாகிறது. 'ஜில்லா' வெளியாகும்நாள் கேரள மக்களுக்கு கண்டிப்பாக ஓணம் பண்டிகையாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!