துரை தயாநிதி தயாரிப்பில் நடிப்பேன்! | நயன்தாரா, உதயநிதி, nayanthara, uthayanithi

வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (17/01/2014)

கடைசி தொடர்பு:12:23 (17/01/2014)

துரை தயாநிதி தயாரிப்பில் நடிப்பேன்!

 

!உதயநிதி ஸ்டாலினிடம் பேட்டிக்காக அணுகியபோதே, ''நோ அரசியல்'' என்ற கண்டிஷனோடுதான் ஆரம்பித்தார்.

''துரை தயாநிதியின் கிளவுட் 9  தயாரிப்பில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா?''

''முதல் கேள்வியிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா? 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்குத் தயாரான நேரத்திலேயே கிளவுட் 9-ல் இருந்து அழைப்பு வந்தது. நான்தான் 'இன்னொரு படம் பண்ணிட்டு நடிக்கலாமே’ என்றேன். ரெண்டாவது படம் இன்னும் கொஞ்சம் சேஃப்ட்டியாப் பண்ணலாமேனுதான் 'இது கதிர்வேலன் காதல்’ பண்றேன். ஆனா, கண்டிப்பா கிளவுட் 9 தயாரிப்பில் நடிப்பேன்.''

''உங்களுக்கும் நயன்தாராவுக்கும் எப்படி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சு?''

''ஏற்கெனவே எங்கள் தயாரிப்பில் நயன்தாரா 'ஆதவன்’ படத்தில் நடித்தார்.  இந்தப் படத்தின் கதையை டைரக்டர் பிரபாகரன் சொல்லும்போதே நயன்தாரா ஹீரோயினாக இருந்தால் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.  அவங்க கூட மேட்ச் ஆகணும்னா அவங்களுக்குப் பின்னால மூச்சிரைக்க ஓடணும். அந்த அளவுக்கு நல்ல பெர்ஃபார்மர்.

''நயன்தாரா அடுத்து யாரைக் காதலிக்கப்போறாங்கனு உங்ககிட்ட சொன்னாங்களா?''

''ஏங்க இப்படி? ஷூட்டிங்கில் அன்னைக்கு என்ன வேலையோ, அதைப் பத்தி மட்டும்தான் பேசுவோம். அப்புறம் ரிலீஸ் ஆன படங்கள் பற்றிப் பேசுவோம். 'ராஜா ராணி’ ரிலீஸ் ஆனப்போ நான் வெளிநாட்டில் இருந்தேன் படத்தில் அவங்க கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. போன்ல கூப்பிட்டுப் பாராட்டினேன். அவங்க பெர்சனல் ஏரியா பக்கமெல்லாம் போறதில்லைங்க.''

''உங்கள் தாத்தா வசனம் எழுதிய படங்களை ரீ-மேக் செய்தால் எந்தப் படத்தில் நடிக்க விருப்பம்?''

''ஏன் பாஸ் மறுபடியும்? தாத்தா வசனத்தில் 'பாலைவன ரோஜாக்கள்’, 'பாசப்பறவைகள்’ ரெண்டும் பிடிச்ச படங்கள். கண்டிப்பா இந்த ரெண்டு படங்களையும் ரீ-மேக் பண்ற ஃபியூச்சர் பிளான் இருக்கு. ஒருவேளை நான் நடிக்கிறதா இருந்தா, அந்த கேரக்டருக்கு ஏற்ப என்னை வளர்த்துக்கிட்டு பண்ணுவேன்.''

''இப்படியே காமெடியா நடிச்சுட்டிருந்தா எப்படி? தனுஷ், விஜய் சேதுபதி மாதிரி பெர்ஃபார்மன்ஸுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கிற ஐடியா இருக்கா?

''தனுஷ் எல்லாம் நடிக்க வந்து எவ்வளவு நாளாச்சு. நான் இப்பத்தான் ரெண்டாவது படமே நடிக்கிறேன்.  அடுத்த படம் 'நண்பேண்டா’வும் ஃபுல் காமெடி படம். 'இது கதிர்வேலன் காதல்’ ரொமான்டிக் காமெடி. பத்து படங்களுக்கு அப்புறம் நீங்க சொன்ன மாதிரி டிரை பண்ணலாம்.''

''கிருத்திகா உங்ககிட்ட கால்ஷீட் கேட்டாங்களா?''

''என் கால்ஷீட்டையே அவங்கதானே முடிவு பண்றாங்க. 'வணக்கம் சென்னை’ சிவா கேரக்டர் என்னை மனசில வெச்சுதான் உருவாக்கி இருந்தாங்க. நான்தான், 'சிவாதான் இதுக்கு செட் ஆவார்’னு சொன்னேன். மேடம் அடுத்த புரொஜெக்ட் ஸ்கிரிப்ட்ல இருக்காங்க. ஆனா நான் அதில் ஹீரோ இல்லை.''

''நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்னு எல்லா சங்கங்களிலும் பிரச்னைகளா இருக்கே?''

''தயாரிப்பாளர் சங்கம் தவிர மத்த சங்கங்களைப் பத்திப் பேச விரும்பலை. நடிகர் சங்கத்துக்கு ஓட்டு போடப் போனதோட சரி. நான் போய் நின்னா அதை அரசியல் சாயத்தோடதான் பார்க்கிறாங்க. தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரை கேயார் தலைமையிலான டீம் நல்லா ஒர்க் பண்றாங்க. முன்னாடி இருந்தவங்களை விட இவங்க பரவாயில்லை. முக்கியமா திருட்டு வி.சி.டி-க்கு எதிராக நிறையத் திட்டங்கள் வெச்சிருக்காங்க. அதை நடைமுறைப்படுத்தினா, சினிமா ரொம்ப நல்லா இருக்கும்.''

''ஜெயா டி.வி-யில் பட்டிமன்றத்துக்கு நடுவராக உங்களைக் கூப்பிட்டா பட்டிமன்றத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?''

'' எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. அப்படிக் கூப்பிட்டா 'டாஸ்மாக் வேணுமா? வேணாமா?’னு தலைப்பு வெச்சு செமையா நடத்திட்டாப் போச்சு. ஒரே ஒரு கண்டிஷன். சந்தானம் ஏதாவது ஒரு அணியில பேசணும்!''

-  செந்தில்குமார்

படம் : ஆ.முத்துக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close