''நான் இப்போ நல்லா நடிக்கிறதில்லையா?'' | vimal, விமல்

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (17/01/2014)

கடைசி தொடர்பு:12:33 (17/01/2014)

''நான் இப்போ நல்லா நடிக்கிறதில்லையா?''

 

 

'பசங்க’, 'களவாணி’ படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய நாயகனாக எதிர்பார்க்கப்பட்டு, சுமாரான படங்களில் நடித்ததன் மூலம், 'இவர்கிட்ட ரொம்ப எதிர்பார்த்துட்டோமோ?’ என்று நம்மை யோசிக்கவைத்தவர் விமல். இருந்தும் 2013-ல் ஐந்து படங்களில் விமல் நடித்தது ஆச்சர்யம்தான்.

''நிறையப் படங்களில் நடிச்சது ஓகே. ஆனா பெர்ஃபார்மென்ஸ் பத்தலையே?''

''அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. அறிமுகம் ஆனப்போ எனக்கான லெவல் எப்படி இருந்துச்சோ, அது அப்படியேதான் இருக்கு. இல்லைன்னா, அடுத்தடுத்து வாய்ப்புகள் வருமா? ஆரம்பத்துல இருந்தே என்னைத் தேடி வர்ற எல்லோருமே காமெடிக் கதைகளையே கொண்டுவந்தாங்க. எனக்கும் காமெடி பிடிச்சிருந்தது, நடிச்சேன். அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போற 'புலிவால்’, 'மஞ்சப்பை’ படங்கள், இனி வரப்போற எல்லா படத்துலேயும் என்னோட ஃபுல் ஃபெர்பார்மென்ஸ் உங்களுக்குத் தெரியும்.''

''இப்போதைக்கு உங்க போட்டியாளர்கள்னு பார்த்தா, உங்களுக்கு அடுத்து அறிமுகமாகி, சக்ஸஸ் ரூட்ல போய்ட்டு இருக்கிற விஜய்சேதுபதியும் சிவகார்த்திகேயனும்தானே?''

''அவங்களை ஏங்க நான் போட்டியா எடுத்துக்கணும்? ரெண்டு பேருமே என் நண்பர்கள். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே நாங்க  நண்பர்கள். விஜய்சேதுபதி கூத்துப்பட்டறையில் என்கூட இருந்தவர். சிவா எப்பவும் என்னை அண்ணேனு கூப்பிடுவான். நானும், அவனைத் தம்பின்னுதான் சொல்றேன். ரெண்டு பேரும் அவங்க அவங்களுக்கான பாதையில் போய்ட்டு இருக்காங்க. நான் என் பாதையில போய்ட்டு இருக்கேன். அவ்வளவுதான்.  இப்போ மட்டுமில்ல. எப்பவுமே அவங்க என்னோட சொந்தங்கள்தான்.''

''டைரக்டர்ஸ் எல்லோரும் சிங்கம் புலி, சாம்ஸ், சூரினு இருக்கிற காமெடி நடிகர்களைஎல்லாம் புக் பண்ணிட்டுத்தான் உங்ககிட்ட கதை சொல்லவே ஆரம்பிக்கிறாங்களாமே, அப்படியா?''

''இதெல்லாம் ரொம்ப டூ மச். இதுவரைக்கும் எனக்குக் கதை சொன்ன எல்லோருமே, 'இது உங்களுக்கான கதைதான்’னு என்கிட்ட சொல்லியிருக்காங்க. ஒரு படம் முழுக்க நானே காமெடி பண்ணிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? அதுக்குத்தான் நாயகனுக்குத் துணையா காமெடி நடிகர்களை கமிட் பண்றாங்க. என்ன... என்னுடைய படங்கள்ல கொஞ்சம் அதிகமா இருக்காங்க. அவ்வளவுதான்.''

''ஓவியா, பிந்து மாதவினு உங்க படத்து நாயகிகளுக்கும் உங்களுக்குமான கிசுகிசுவும் அதிகமா இருக்கே?''

''நிறைய ஹீரோயின்ஸ்கூட, நிறையப் படங்கள் நடிக்கிற பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் கிசுகிசு வராது, எழுதவும் மாட்டாங்க. ஒண்ணு, ரெண்டு படத்துல நடிச்சுட்டு, வளர்ந்து வர்ற ஹீரோக்களைத்தான் கிசுகிசு எழுதிக் கிழிப்பாங்க. இதெல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே பாஸ். தவிர, சினிமாவுல கிசுகிசு சகஜமான விஷயம். வேற வழி இல்லை. பெரிய நடிகரா வளர்ற வரைக்கும் இதையெல்லாம் பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும். அதனால, நான் பெரிசாக் கண்டுக்கிறதே இல்லை.''

'' 'பசங்க’, 'களவாணி’ வந்தப்போ உங்ககிட்ட இருந்த ஒரு எதிர்பார்ப்பு இப்போ இல்லை. மறுபடியும் எதிர்பார்க்கவைக்கிற முயற்சிகள் எடுக்க விரும்பலையா?''

''அப்படி இல்லைங்க... இதுதான் இலக்குன்னு எதையும் ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போகலை. அதனால, இன்னும் போகவேண்டிய இடம் அதிகமா இருக்கிறதால, கண்டிப்பா எதிர்பார்க்கலாம். இப்பவே சீரியஸான, அதே சமயம் அதில் காமெடியும் கலந்த கதைகளைத்தான் தேர்ந்தெடுத்துக்கிறேன். 'வாகை சூட வா’ மாதிரியான படங்களுக்கெல்லாம் கண்ணை மூடிட்டு கால்ஷீட் கொடுக்கணும்னு ஆசை!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்