''எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும்!'' | இனிகோ பிரபாகர், inico prabakar

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (24/01/2014)

கடைசி தொடர்பு:11:21 (24/01/2014)

''எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும்!''

 

'அழகர்சாமியின் குதிரை’, 'சுந்தரபாண்டியன்’, 'ரம்மி’ எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவரும் இனிகோ பிரபாகரனிடம் ஓர் அரட்டை...

''இனிகோ பிரபாகரன் பற்றிக் கொஞ்சம்?''

'' திருநெல்வேலிக்குப் பக்கத்தில் முத்துலாபுரம், என்னுடைய சொந்த ஊர். மதிய நேரத்திலும் குயிலும் சேவலும் கூவுகிற கிராமம். ஊர்த் திருவிழாவில் நாடகம் போடுவதை டவுசர் போட்ட வயசுலேயே பார்த்த எனக்கு, நடிப்பு ஆசை வந்திருச்சு. அதனால், நான் இல்லாத பள்ளி நாடகங்கள் கிடையாது. என் ஆசையெல்லாம் எப்படியாவது பெரிய நடிகன் ஆகிடணும். சினிமானு சொன்னதும், என் அம்மாவும் கண்ணைக் கசக்க ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம பி.ஏ., படிச்சுக்கிட்டே சினிமாவுக்கு டிரை பண்ண ஆரம்பிச்சு, முட்டி மோதி இப்போ நான் ஒரு நடிகன்.

சினிமாதான் இலக்குனு முடிவு பண்ணதுக்கு அப்புறம் நம்பிக்கையோட காத்திருந்தேன். ஸ்கிரீன்ல கிராஸ் பண்ணிட்டுப் போற சான்ஸ்தான் எனக்குக் கிடைச்சது. 'வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் நான்தான் ஹீரோவா நடிக்க இருந்தது. ஏன்னா, சுசீந்திரன் சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, சில காரணங்களால அது முடியலை. அவருடைய 'அழகர்சாமியின் குதிரை’யில மெயின் கேரக்டர் கொடுத்தார். அடுத்து 'சுந்தரபாண்டியன்’ பார்த்தவங்களுக்கு, என்னோட முகம் முழுசாப் பதிஞ்சது. அடுத்து வரப்போற 'ரம்மி’, என் கேரியரை மாத்திடும்.''

''உங்களைத் தாண்டிப் போற, உங்க செட் நடிகர்களைப் பார்த்தா பொறாமையா இருக்குமே?''

''நான் ஏன் பொறாமைப்படணும்? விஜய் சேதுபதி, தினேஷ்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா அடிச்சு விளையாடுறதைப் பார்த்துக் கைதட்டி ரசிக்கணும்னுதான் தோணுது. எல்லா இடமும் அவ்வளவு ஈஸியா கிடைச்சுடாது. தமிழ் சினிமாவில் நடிகரா, இயக்குநரா இருக்கிறவங்க, ஆகப்போறவங்க... எல்லோருக்குமே ஒரு கதை இருக்கும். அவ்ளோதான். அவங்களுக்குக் கிடைச்ச மாதிரி, எனக்கும் ஒரு நாள் கிடைக்கும். அதுக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோமே?''

''இந்த இடைவெளியில், ஏன்டா சினிமாவுக்கு வந்தோம்னு சலிப்பு வந்ததா?''

'' 'அழகர்சாமியின் குதிரை’ படத்துல நடிச்சிட்டிருந்தப்போ, ஒரு அம்மா ஓடிவந்து, என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதாங்க. 'என்னோட மகன் இறந்துட்டான்ப்பா... உன்னைப் பார்த்தா, என் மகனைப் பார்க்கிற மாதிரியே இருக்கு. உன்கூட ஒரு போட்டோ எடுத்துக்கவா?’னு கேட்ட அந்த அம்மாவோட வார்த்தை போதும். அது எனக்குக் கிடைச்ச பாராட்டு இல்லே... விருது.''

'' 'ஐ லவ் யூ...’னு யாராச்சும் ரோஜாப்பூ நீட்டி இருக்காங்களா?

''நீட்டியிருக்காங்க. ஆனா, கண்டிப்பா யார்? எங்கே? எப்போங்கிற டீட்டெயிலை இங்கே நீட்ட மாட்டேன். ஏன்னா, இன்னும் நிறைய லவ் பண்ண வேண்டியிருக்கு.''

'' முதல் படத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்குறவங்க, அடுத்து கோடிக்குப் போயிடுறாங்க. இதுல நீங்க எப்பிடி?''

''படத்துக்கு ஹீரோவா நடிக்கிறதை விட, கதைக்கு ஹீரோவா நடிக்கணும். அதுதான் என் ஆசை. 'இனிகோ கேரக்டர் அப்படியே என்னை ரிஃப்ளெக்ட் பண்ணுதுடா’னு சொன்னாப் போதும். அந்த மாதிரிக் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சாலே போதும். அந்த வாய்ப்புதான், நான் வாங்குகிற சம்பளத்துக்கான அட்வான்ஸ்.''

''உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு. உண்மையான பெயர்தானா?''

''இனிகோ மட்டும்தான் ஒரிஜினல் பெயர். 'பிரபாகரன்’கிற பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் நானேதான் அதைச் சேர்த்துக்கிட்டேன்.''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்