Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தனுஷும் த்ரிஷாவும் என் சாய்ஸ்!

 

 

ரே ஒரு படம். அனைத்து ரெக்கார்டு களையும் முறியடித்ததோடு கன்னட சினிமாவையே புரட்டிப் போட்டது என்றால், எல்லாப் புகழும் 'லூசியா’வுக்கே! பெரிய ஸ்டார் வேல்யூ எதுவும் இல்லாமல் நம்புவதற்கே கஷ்டமான கதையமைப்பை வைத்து எளிமையாகக் கதை சொன்ன இயக்குநர் பவண் குமாரை இப்போது பாலிவுட் வெல்கம் பொக்கே கொடுத்து வரவேற்றிருக்கிறது. பரபரப்பாக இந்தி லூசியாவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் பவண் குமாரை பெங்களூருவிலிருந்து மும்பைக்குப் பறக்க ரெடியாகிக்கொண்டிருந்த தருணத்தில் போனில் பிடித்தேன்.

''யார் சார் நீங்க?  'லூசியா’ கதை எப்படி உருவானது? முக்கியமா அந்த 'புரொஜக்ட் லூசியா’ ஐடியா?'

''நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஒரு படத்தில் அசோஸியேட் இயக்குநராக வேலை பார்த்தேன். இரண்டு கன்னடப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய அனுபவத்தில் 'லைஃபு இஸ்டனே’ என்ற படத்தை இயக்கினேன். படம் ஹிட் ஆனாலும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அலையாய் அலைந்ததுதான் மிச்சம். அப்போதுதான் மன வேதனைகளை எல்லாம் என்னுடைய ப்ளாக்கில் குமுறலோடு எழுதினேன். அது ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. சில நண்பர்களும் முகம் தெரியாத சிலரும் என் மன உணர்வைப் புரிந்துகொண்டு பணம் தர முடிவு செய்தார்கள். அப்போதுதான் புரொஜக்ட் லூசியா என்ற தளத்தைத் துவங்கி முழுக் கதையையும் அதில் குறிப்பிட்டு இருந்தேன். டெக்னீஷியன்களும் அப்படியே கிடைக்க, அதன் மூலம் லூசியா, 'பிரொஜக்ட் லூசியா’ ஆனது. 110 தயாரிப்பாளர்கள் மூலம் 75 லட்சம் உருவானது. என் ஸ்கிரிப்ட்டுக்குத் தேவையான பட்ஜெட்டும் அவ்வளவு தான். எத்தனையோ இடைஞ்சல்கள்  தாண்டி படம் கடந்த செப்டம்பரில் ரிலீஸானது. படம் எடுப்பது உங்கள் கனவென்றால், உடனடியாகக் களத்தில் இறங்கிவிடுங்கள். பிரச்னைகள் உங்கள் இலக்கிற்குச் செல்ல இன்னும் மன உறுதியைத் தரவல்லவை என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.'

'' 'லூசியா’ படத்தின் கதை எப்படி உருவானது?'

''கனவு எல்லோருக்கும் உண்டு. கனவு வராத மனிதனே இருக்க முடியாது. அதேபோல சாமானிய மனிதனுக்கு பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஒரு சூப்பர் ஸ்டாருக்கு சாமானிய மனிதனாக வாழ ஆசை இருக்கும். இந்தச் சின்ன விஷயத்தை வைத்துதான் நான்லீனியர் பாணியில் ஒரே கேரக்டரின் இரண்டு வெவ்வேறு மனநிலைகளைத் திரையில் காட்டியிருந்தேன். கேட்கும்போது சிக்கலான கதையாகத் தோன்றினாலும் படம் வெற்றி பெற்றது. இது ஸ்கிரிப்ட்டுக்குக் கிடைத்த வெற்றியும் கூட.'

''ஓ.கே. தமிழ் சினிமா பார்க்கிறது உண்டா? தமிழ்ப் படங்கள் இயக்க வாய்ப்பு வந்தா யார் உங்க சாய்ஸ்?'

''தமிழ் தெரியாவிட்டாலும் தமிழ் சினிமாக்கள் பார்க்கிறது உண்டு. தனுஷ் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். தனுஷை வைத்துப் பல பரிசோதனை முயற்சிகள் செய்யலாம். அவர் டைரக்டர்களின் நடிகர். இப்போது விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிக்கிறது. 'சூது கவ்வும்’, 'பீட்சா’ நல்ல முயற்சி. நலன் குமாரசாமியிடம் வித்தியாசமான திரைப்பார்வை இருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் அவர் இந்திய அளவில் பேசப்படுவார். தமிழ் தெரியாது என்பதால், தமிழில் இயக்க விருப்பம் இல்லை. ஒரு ஜாலி கேள்வியாகக் கேட்பதால் சொல்கிறேன். தனுஷ§ம் த்ரிஷாவும் என் சாய்ஸ். த்ரிஷாவை ரொம்பப் பிடிக்கும். 'விண்ணைத் தாண்டி வருவாயா’ எனக்குப் பிடித்த தமிழ்ப் படங்களுள் ஒன்று.'

''இந்திக்குப் போறீங்களாமே பாஸ்?'

''ஆமாம். என் ஆதர்ச இயக்குநர் அனுராக் காஷ்யப். முதல் படத்தின் டி.வி.டி-யை அனுப்பிவைத்திருந்தேன். லூசியாவை லண்டன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் வரை கொண்டுசென்றது அவர்தான். என் படத்தைப் பார்த்துவிட்டு, 'என் பிறந்தநாளில் எனக்குக் கிடைத்த கிஃப்ட் லூசியா’ என ட்வீட் செய்ததன் மூலம் படம் பாலிவுட் கவனத்தை ஈர்த்தது. நேரில் அழைத்து படத்தை அங்குலம் அங்குலமாகப் பாராட்டினார். நெகிழ்ந்துவிட்டேன். இப்போது பெரிய பேனருக்காக இந்தி லூசியா பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் இயக்க வாய்ப்பு வந்தபோது மறுத்து ரைட்ஸ் மட்டும் சி.வி.குமார் சாருக்குக் கொடுத்தேன். ஆனால் இந்தி டிரெண்ட் வேறு அல்லவா? நிதானமாக லூசியாவை பாலிவுட்டுக்கு தகுந்தாற்போல படமாக்க வேண்டும். பதட்டம் இல்லை. ஆனால் கவனம் இரு மடங்கு கூடி இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தில் ஒரு படத்தின் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது.''  

''கனவுப் படம் எதுவும் உங்களுக்கு இருக்கிறதா?'

'' குழந்தைகளுக்காக ஒரு சினிமா எடுப்பதுதான் என் கனவு.'

வாழ்த்துக்கள் ப்ரோ!

- ஆர்.சரண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement