“என் ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல் மாடல்!” | சூர்யா, லிங்குசாமி, surya, lingusami

வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (25/01/2014)

கடைசி தொடர்பு:12:07 (25/01/2014)

“என் ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல் மாடல்!”


 

''கதை என்னன்னு கேட்கிறீங்களா? அது புரொடியூசர் போஸுக்கே தெரியாதே!''

''கமல் சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, 'இத்தனை வருஷ அனுபவத்துல சினிமாவில் என்ன பண்ணக் கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, என்ன பண்ணணும்னு இன்னும் பிடிபடலை’னு சொன்னார். அவருக்கே அப்படின்னா...''

''ஒவ்வொரு தடவை பார்க்கிறப்பவும் 'கர்ணன்’ படத்துல இருந்து நச் ஐடியா பிடிக்கலாம். அப்பவே சீனுக்கு சீன் அவ்வளவு விஷயங்கள் வெச்சிருப்பாங்க!''- லிங்குசாமியின் படங்களைப் போலவே அவருடைய பேட்டியும் என்டர்டெயின்மென்ட்டுக்கு எப்பவும் கேரன்ட்டி!

சூர்யா-லிங்குசாமி கூட்டணிக்கு ஆல் ஏரியாவில் எகிறுது எதிர்பார்ப்பு. படத்துக்கு டைட்டில் பிடிப்பதைக்கூட மறந்து பரபரவென முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு வந்திருக்கிறார் லிங்குசாமி. '' 'அஞ்சான்'னு டைட்டில் வெச்சிருக்கோம். எப்படி இருக்கு?என்று சிரித்துக்கொண்டே அமர்கிறார் லிங்குசாமி.

''சூர்யா-லிங்குசாமி காம்பினேஷன்கிட்ட என்ன எதிர்பார்க்கலாம்?''

''இந்தக் கேள்விக்கான பதிலை இன்னும் தயாரிச்சுட்டே இருக்கோம். சூர்யா சார்கிட்ட 'ஆனந்தம்’ அப்பாஸ் கேரக்டருக்காகக் கதை சொன்னேன். அப்ப அவர்கிட்ட இருந்த சின்ன கார்ல என்னை வீட்ல டிராப் பண்ணிட்டு, 'பீர் அடிக்கக் கத்துக்கணுமா சார்’னு சிரிச்சார். ஏன்னா, 'ஆனந்தம்’ அப்பாஸ் கேரக்டர் பீர் குடிக்கும். அப்புறம் சூர்யாவுடன் 'சண்டக்கோழி’ பண்ண வேண்டி யது. அதுவும் மிஸ் ஆச்சு. அந்த சூர்யாவுக்கும் இப்ப உள்ள சூர்யாவுக்குமான ஜம்ப்பைப் பார்த்து மிரண்டுட்டேன். நானும் ஒருசில படங்கள் மூலம் நிறைய விஷயங்கள் கத்துட்டிருக்கேன்.

சூர்யாவுக்கு நான் சொன்ன நாலாவது கதை இது. படத்துல அவருக்கு ரெண்டு லுக். 'இந்த மாதிரி கெட்டப் இருந்தா, நல்லா இருக்கும்’னு சும்மா பேச்சுக்குச் சொன்னேன். அவரே தேடிப் பிடிச்சு, 'ஹேர்ஸ்டைல் இப்படி இருக்கலாமா... மீசை இப்படி வெச்சுக்கலாமா?’னு கிட்டத்தட்ட 300 ரெஃபரன்ஸ் அனுப்பிவெச்சார். அவரோட இந்த உழைப்பு, நம்மளையும் தூங்கவிடாம இன்னும் வேகமா ஓடவைக்குது. 'ஆஹா... நம்மோட ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய ரிசல்ட் வருதா!’னு இன்னும் அலெர்ட் ஆக்குது. 'அந்த ஷாட்ல லேசா சிரிச்சுட்ட மாதிரி இருக்கு’னு நேத்து முடிஞ்ச ஷ§ட்டிங் பத்தி இன்னைக்கு விசாரிப்பார். அவரோட சந்தேகத்துக்கு நம்மகிட்ட தெளிவான பதில் இருக்கணும்!''

''சமந்தா படத்தில் நடிக்கிறாங்களா... ஏகப்பட்ட கண்ணாமூச்சியா இருந்ததே?''

''நிச்சயமா நடிக்கிறாங்க. சமந்தாவை ஸ்கிரீன்ல பார்க்கும்போது, 'இந்தப் பொண்ணுக்கு ஆல்டர்நேட்டிவே கிடையாது’னுதான் தோணுது. மூணு கதை மாறினாலும், சமந்தா மட்டும் மாறவே இல்லை. ஒவ்வொரு தடவை விசாரிக்கிறப்பவும், 'கதை மாறிடுச்சு சமந்தா. ஆனா, நீங்க மாறலை’ம்பேன். சமந்தாவுக்காக எத்தனை நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம். அதுக்குத் தகுதியான பொண்ணு!''

'' 'திருப்பதி பிரதர்ஸ்’ பேனர்ல ஏகப்பட்ட படங்கள் லைன்ல நிக்குதே..?''

''சினிமா மீது இருக்கிற அன்பும் ஆர்வமும்தான் காரணம். இங்கே அந்த ஆர்வம் இல்லாம டைரக்ஷனும் பண்ண முடியாது; புரொடக்ஷனும் பண்ண முடியாது. 'திரும்ப கைக்கு எவ்வளவு வரும்?’னு கணக்குப் போட்டு பண்ற வேலை கிடையாது சினிமா. கணக்குப் போட்டா, சினிமா எடுக்கவும் முடியாது. 'சினிமா... சினிமானு சுத்திட்டு இருக்காங்கடா’னு ஊர்ல சொல்வாங்கள்ல... அந்த மனநிலைலதான் இப்ப நாங்க இருக்கோம். 'திருப்பதி பிரதர்ஸ்’ல கமல் சார் படம் பண்றது எங்களுக்குப் பெருமை. அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி, பொன்ராம் - சிவகார்த்திகேயன், 'ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் இயக்கத்தில் 'நான்தான் சிவா’, பாலாஜி சக்திவேல்  படம்னு வரிசையாப் படங்கள் பண்றோம்.''

''கமல் படம் எப்ப ஆரம்பிக்கிறீங்க?''

''ரஜினி சார், கமல் சார் ரெண்டு பேரையும் டச் பண்ணிட்டு வந்தால்தான், சினிமாவுல ஃபுல்ஃபில் ஆனதா நினைக்க முடியும். கமல் சாரை இயக்கும் என் ஆசை, இப்போதைக்கு வடிவம் எடுக்கலை. கமல் சார் படத்தைப் பார்க்க கும்பகோணம் தியேட்டர் கவுன்டர்ல எப்படி நிப்போமோ, அதே மாதிரி அவரோட வீட்டுக்குப் போய் 'படம் பண்ணலாமா சார்?’னு கேட்டோம். இன்னமும் அவ்வளவு விளையாட்டுப் பசங்களா இருக்கோம்னு இப்போ புரியுது. கமல் சார்கிட்ட கேக்கும்போது ஒண்ணும் தெரியலை. கேட்டுட்டு வந்த பிறகுதான் நடுங்குது. அவரும் நாங்க கேட்டதும் எங்களை மதிச்சு, 'இது பண்ணலாமா... அது பண்ணலாமா?’னு மூணு கதைகளைச் சொல்லி, 'எந்தக் கதை பண்ணலாம்னு சொல்லுங்க?’னு எங்களையே செலக்ட் பண்ணச் சொன்னார். என் சினிமா கேரியர்ல இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கப்போகுது! பிப்ரவரியில் ஷூட்டிங். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிக்கிறார். தலைப்பு... 'உத்தம வில்லன்’!''

''ரஜினியை இயக்கும் ஆசை இல்லையா?''

''நான் ரஜினி சாரோட பயங்கர ஃபேன். நான் இயக்கும் படங்களில் ஹீரோயிஸ மூட் எங்கேயாவது இருந்தா, அது அவர்கிட்ட இருந்து எடுத்ததா இருக்கும். 'இங்கே ரஜினி சார் பேசினா எப்படி இருக்கும்?’னு ஒரு தடவை கற்பனை பண்ணிப் பார்த்துதான், என் ஹீரோக்களுக்கு டயலாக் எழுதுறேன். 'உன் அண்ணனுக்கு என்ன ரெண்டு உசுரா? அடிச்சா வலிக்கும்ல... வெட்டுனா ரத்தம் வரும்ல?’னு 'ரன்’ல பேசுனது மாதவனா இருக்கலாம். ஆனா, அது ரஜினி சார் மாடுலேஷனுக்கும் செட் ஆகும். டயலாக்லாம் யோசிப்பேன். ஆனா, ரஜினி சாருக்குக் கதை மட்டும் என்னால யோசிக்கவே முடியாது. ஏன்னா, திருப்தியே வராது. என்ன யோசிச்சாலும், 'பத்தலைடா’னு எனக்குள்ளேயே இருக்கிற ரஜினி ரசிகன் சொல்லிட்டே இருப்பான். 'பாட்ஷா’ மாதிரி ஒரு கதை அமைஞ்சிட்டா, அடுத்த நிமிஷம் அவர் வீட்டு வாசல்ல போய் நின்னுடுவேன். இப்பவும் அவர் என்ன மாதிரி படங்கள் பண்ணினா நல்லா இருக்கும்னு அவரைச் சந்திக்கிற தருணங்கள்ல ஒரு ரசிகனாச் சொல்லிட்டே இருப்பேன். சமீபத்தில் பேசினப்ப,  'என்ன லிங்கு அடுத்த படம் மும்பையா?’னு கேட்டார். 'ஆதாரமே, உங்க படம்தான் சார்’னு சொன்னேன். 'சூப்பர்... சூப்பர். நீங்க நல்லாப் பண்ணுவீங்க, பண்ணுங்க’னார். எனக்கு அவ்வளவு சந்தோஷம்!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close