“யேய்... யாரைப் பார்த்து அண்ணாங்கிற?” | ma.ka.pa. anand, மா.கா.பா. ஆனந்த்

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (25/01/2014)

கடைசி தொடர்பு:12:22 (25/01/2014)

“யேய்... யாரைப் பார்த்து அண்ணாங்கிற?”

''இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் கல்யாணம் பண்ணிக்காம இருப்ப... நான் வேணும்னா பொண்ணு பார்க்கட்டுமா?’னு சில நண்பர்கள் கேட்பாங்க. சில பொண்ணுங்க, தயங்கித் தயங்கிக் காதலைச் சொல்வாங்க. அவங்ககிட்ட எல்லாம், 'ஸாரி... எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு’னு சொன்னா, 'அட, காமெடி பண்ணாதீங்க’னு சிரிப்பாங்க. நம்புங்க மக்களே... நான் குடும்பஸ்தன். எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்கு!'' - 'ஹேய்... சூப்பரு... சூப்பரு...’ புகழ் மா.கா.பா.ஆனந்தின் ஜாலி காதல் ப்ளஸ் கலாட்டா குடித்தனக் கதையைக் கேட்போமா...  

''என் மனைவி சுசானா, ஆங்கிலோ இந்தியன். நான், 'குட் மார்னிங்’கையே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட சொல்ற ஆளு. இந்த லட்சணத்துல அவங்களை கரெக்ட் பண்ணிக் காதலிக்க, எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்?

அப்ப நான் ரொம்பக் கடுப்பான இளைஞன். 'இவ்வளவு பரபரனு வேலை பார்க்கிறோம். மாசம் வெறும் 3,500 சம்பளம் தர்றானுங்க’னு தொடங்கி எல்லாத்துலயும் விரக்தி.  'கால்சென்டரில் வேலை. பயிற்சிக் காலத்திலேயே 6,000 சம்பளம்’னு ஒரு விளம்பரத்தைப் பார்த்துட்டு, ஒரு பிட்டு இங்கிலீஷ்கூட தெரியாத நான், அதுக்கு விண்ணப்பிச்சேன். நான் எழுதின இங்கிலீஷைப் படிச்சு அதுக்கு பாஸ் மார்க்கும் போட்டு என்னை வேலைக்கு எடுக்கிறாங்கனா, அது எவ்வளவு பெரிய டுபாக்கூர் கம்பெனியா இருக்கும்னு அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். வெளிநாட்டுக்கு போன் போட்டு பொருளை விக்கணும். 'தினம் 10 பொருள்களை வித்தா, மாசம் 6,000 ரூபாய் தருவோம்’னு சொன்னாங்க. '20 நாளா எந்தப் பொருளையுமே விக்காம இருக்கோமே... சம்பளம் தருவானுங்களா?’னு அப்பவாது நான் யோசிச்சிருக்கணும். ஒரு மாசம் முடியிறப்போதான் எனக்குத் தெரிய வந்துச்சு, அங்கே வேலை செய்ற யாருக்குமே சம்பளம் இல்லைனு. அந்தக் கம்பெனியில என்னை மாதிரியே வேலைக்கு வந்தவங்கதான் சுசானா. முதல் மீட்டிங்ல என்கிட்ட வந்து, 'அண்ணா எல்லாரும் இன்டர்வியூக்குப் போயிட்டாங்களாண்ணா?’னு  கேட்டாங்க. 'யேய்... யாரைப் பாத்து 'அண்ணா’ங்கிற? நான் கருப்பா இருக்கேன். நீ வெள்ளையா இருக்கே. நான் உனக்கு அண்ணனா? ச்சீ போ...’னு கடுப்படிச்சு விட்டேன். அப்போ இருந்து எங்கே என்னைப் பார்த்தாலும் 'ச்சீ போ...’ங்கிற மாதிரிதான் முறைப்பாங்க. ஆனா, அப்புறம் அப்புறம் ஓரப் பார்வைகள், சிரிப்புகள், தவிப்புகள், ஏக்கங்கள்னு ஒரு மாதிரி உள்ளுக்குள்ள ஒரு சைக்ளோன் ஃபார்ம் ஆச்சு.

ஒருநாள் அவங்களைக் கூப்பிட்டு, 'தயவுசெய்து அண்ணானு மட்டும் கூப்பிடாத... ரொம்ப ஃபீலிங்கா இருக்கு’னு சொன்னேன். இன்னொரு நாள், 'செருப்பை எடுத்து அடிச்சிடக் கூடாது. கோபமா அறைஞ்சிடக் கூடாது’னு கையைப் பிடிச்சிக்கிட்டு, 'உன்னை லவ் பண்றேன்’னு சொல்லிட்டு அடுத்த பஸ் பிடிச்சு எஸ்கேப். அவங்ககிட்ட இருந்து, 'யெஸ்... நோ... இருக்குனு நினைக்கிறேன்’னு கலவையா பொறுமையா ரியாக்ஷன் வந்துச்சு. காதல், கல்யாணத்துல முடிஞ்சது. இப்ப ஆறு வயசுல 'அனிலியா’னு ஒரு பொண்ணு, ஒன்றரை வயசுல 'லொரான்சோ’னு ஒரு பையன்!''

''இங்கிலீஷ் மனைவி இருந்தும் இன்னமும் நீங்க அந்த மொழியைக் கொலை பண்ணிட்டுத்தானே இருக்கீங்க..?''

''அட, அதை ஏன் கேக்கிறீங்க தலைவா! காதலிச்சக் காலத்துல இருந்து மொழிதான் எனக்குப் பெரிய பிரச்னை. தலையை அடகு வெச்சாவது இங்கிலீஷ் கத்துக்கணும்னு ரெண்டு இங்கிலீஷ் பேப்பர் வாங்க ஆரம்பிச்சேன். அதைப் புரட்டிப் பார்த்த புண்ணியத்துல,  'யூ நோ வாட்’னு பேச ஆரம்பிச்சேன். ஆனா, ஆப்பிள்னு சொல்ல வராது. 'ஆப்புள்’னு சொல்லி மாட்டிக்குவேன். 'நோ... நோ... இட்ஸ் ஆப்பிள்’னு மேடம் கரெக்ஷன் போடுவாங்க. இப்படி தினம் தினம் புரட்சிப் போராட்டமாத்தான் இருக்கும் வாழ்க்கை. நான் சொல்ற சில தமிழ் வார்த்தைகள் அவங்களுக்குப் புரியாது. 'புத்துணர்ச்சியா இருக்கு’னு சொன்னதுக்கு அர்த்தம் கேட்டாங்க. ரொம்ப யோசிச்சு, 'ஃப்ரெஷ்ஷா இருக்கு’னு சொன்னேன். இந்த கம்யூனிகேஷன் பஞ்சாயத்துனால வீட்ல நிறைய சண்டை நடக்கும். உங்க முன்னாடி அப்படி எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான், 'நான் பேசலை. நீயே பேசிடு’னு மேடம் உத்தரவு போட்டுட்டாங்க. டி.வி-ல விஜய் டி.வி-யும் ஸ்டார் மூவீஸும் மாத்தி மாத்திப் பார்க்கிற மாதிரி... பசங்கதான் பாவம் குழம்பிக் குழம்பி வளர்றாங்க. ஆக, மொத்தத்துல ஆல் இஸ் வெல்!''

''உங்க சீனியர்கள் பாதையில் நீங்களும் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. அதுதான் உங்க கனவா?''

''அப்படி எல்லாம் இல்லைங்க. அட்வர்டைஸிங் கம்பெனில வேலைக்குச் சேரலாம்னு சென்னைக்கு வந்தவன் நான். ரூம்ல உட்கார்ந்து சும்மா தொணதொணனு பேசிட்டு இருந்த என்னை, 'நீ ஆர்.ஜே. ஆகலாம்டா’னு பசங்கதான் கிளப்பிவிட்டாங்க. ஆர்.ஜே. வேலை கிடைக்க ரெண்டு வருஷம் ஆச்சு. அந்த ரெண்டு வருஷத்துல நான் சென்னையில் பார்க்காத வேலையே கிடையாது. போஸ்டர் ஒட்டியிருக்கேன். ரெங்கநாதன் தெருவுல முந்திரி பருப்பு வித்திருக்கேன். 'இந்த சூப்பை ட்ரை பண்ணிப் பாருங்க. சாப்பிட்டதும் உச்சி மண்டைல நச்னு இருக்கும்’னு பலப் பல பொருட்களின் பிராண்ட் அம்பாசடரா இருந்திருக்கேன். அப்புறம் சூரியன் எஃப்.எம்., மிர்ச்சினு டிராவல் பண்ணி 'சிறந்த பண்பலைத் தொகுப்பாளர்’னு விகடன் விருது ஜெயிக்கிற அளவுக்கு விக்ரமன் பட ஸ்டைல்ல கடுமையா உழைச்சிருக்கோம் பாஸ்!''

''சூப்பரு... சூப்பரு... சினிமால நடிக்கிறீங்க. சீனியர் சிவகார்த்திகேயன் எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா?''

''நான் ஆர்.ஜே-வா இருக்கும்போது, டி.வி-யில் பார்த்து ரசிச்ச ஒரே ஆள் சிவகார்த்திகேயன்தான். ஸ்க்ரிப்ட்டே இல்லாம எப்படி இப்படி இவரால் இன்ஸ்டன்ட் காமெடி பண்ண முடியுதுனு ஆச்சர்யமாப் பார்த்த ஆள். 'அது... இது... எது...’ நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கிட்டு இருந்தப்ப, அதுல ஒரு போட்டியாளரா நான் கலந்துக்கிட்டேன். 'பிரதர் 'மெரினா’ பார்த்தேன்... நல்லா இருந்துச்சு. என்னையும் சினிமால சின்னச் சின்னக் கேரக்டர் பண்ணச் சொல்லிக் கேக்கிறாங்க. யோசனையா இருக்கு. என்ன பண்ணலாம்?’னு கேட்டேன். 'இந்த இடத்துக்கு வர்றதுக்கு எப்படிப் பொறுமையாக் காத்திருந்தீங்களோ, அப்படி சினிமா வாய்ப்புக்கும் காத்திருங்க. பெருசாவே ஒரு விஷயம் வரும்’னு சொன்னார். கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் காத்திருந்தேன். இப்ப 'வானவராயன் வல்லவராயன்’ படத்துல நான் 'வல்லவராயன்’. அவரோட சின்ன டிப்ஸ் எனக்குப் பெரிய திருப்புமுனை தந்தது. தேங்க்ஸ் சிவா!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close