தல...தளபதி அடிதடி ! | silva, சில்வா

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (07/02/2014)

கடைசி தொடர்பு:12:04 (15/10/2015)

தல...தளபதி அடிதடி !

'வீரம்’, 'ஜில்லா’ எனப் பொங்கல் ரிலீஸாக வந்த இரண்டு மாஸ் ஸ்டார் படங்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்திருப்பவர் 'ஸ்டன்ட்’ சில்வா. வழக்கம்போல் ஹீரோக்களிடம் அடிவாங்கும் ஃபைட்டராகவும் தலை காட்டும் இவர், பெரிய ஹீரோக்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஃபைட் மாஸ்டர். ''கொஞ்சம் ஜாலியாப் பேசலாமா பாஸ்?'' என்றேன். ''ஃபைட் மாஸ்டர்னா மூஞ்சியை வெரைப்பா வெச்சுக்கிட்டு, சிடுசிடுன்னு பேசுவான்னு நினைச்சுட்டீங்களா? நான் எப்பவுமே ஜாலி பார்ட்டி பாஸ்'' என்றபடியே தொடர்ந்தார் சில்வா.

''தூத்துக்குடிதாங்க என் சொந்த ஊர். ஃபைட் மாஸ்டரா ஆகணும்னு எந்தக் கனவும் இல்ல. ஏதோ ஒரு வேலை பார்க்கணும், நல்லா சம்பாதிக்கணும் இதான் நம்ம டார்கெட். சினிமாவில் இருந்தா ஈஸியா சம்பாதிக்கலாம்னு தோணுச்சு. டான்ஸ் யூனியன்ல கார்டு வாங்கிட்டு குரூப் டான்ஸர் ஆயிடலாம்னு இருந்தேன். உறுப்பினரா சேர்றதுக்கே 10,000 கேட்டாங்க. எப்படியோ புரட்டிக்கொண்டு வந்து கொடுத்தா, அந்தச் சமயம் பார்த்து ரேட்டை ஏத்திட்டாங்க. சரின்னு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்தா, மறுபடியும் ரேட் எகிறிடுச்சு. 'நம்மளை ஏமாத்துறாங்களோ?’னு சின்ன டவுட். அதனால, 'இருக்கிற காசுக்கு எந்த யூனியன்ல சேரலாம்’னு ஒருத்தர்கிட்ட டிஸ்கஸ் பண்ணினேன். அவர் ஸ்டன்ட் யூனியனுக்குப் போற வழியைக் காட்டினார். அதில் சேர்ந்து பல படங்கள்ல அடிவாங்கி, அப்புறம் ஒரு வழியா 'ஸ்டன்ட் மாஸ்டர்’ ஆகிட்டேன். அறிமுகமானது தெலுங்குப் படம். அப்புறம்தான் தமிழ்ல 'யாரடி நீ மோகினி’. இப்போ சூர்யாவோட 'அஞ்சான்’, சசிகுமாரோட 'பிரம்மன்’ படங்கள்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன். நம்மளைப் பொறுத்தவரைக்கும் எந்தத் தொழில் செஞ்சாலும், ரசிச்சுப் பண்ணனும். ஜாக்கிசானோட படத்துக்கு ஃபைட் மாஸ்டரா வொர்க் பண்ணனும். 'இது கொஞ்சம் ஓவர்’னு ஜாக்கிசான் நினைச்சா, அவருக்கு அசிஸ்டென்ட்டாகவாவது ஒர்க் பண்ணனும்''

''ஃபைட் மாஸ்டர்னாலே ஹீரோகிட்ட அடிவாங்குற மாதிரி நடிக்கணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?''

'' அது நம்ம தொழில் பாஸ். ஃபைட்ல திடீர்னு ஒரு துணை நடிகர் மிஸ்ஸாயிட்டா, நம்மளை ஊறுகாய் ஆக்கி, 'உங்களால முடியும் பாஸ்’னு ஊதி விளையாடிடுவாங்க. வேற வழி இல்லாம நடிகராவும் தலைகாட்ட வேண்டியதாகிப் போச்சு. ஆனா, 'வீரம்’, 'ஜில்லா’ படங்கள்ல நடிச்சதுக்குக் காரணம் வேற. 'மங்காத்தா’ படத்துக்கு ஃபைட் மாஸ்டரா ஒர்க் பண்ணப்போ அஜித் சார் நல்ல பழக்கம். 'வீரம்’ல கண்டிப்பா நடிக்கணும்னு அஜித் சார் சொல்ல, டைரக்டர் சிவாவும் அதையே கெட்டியாப் பிடிச்சுக்கிட்டார். 'தலைவா’ படத்துல ஓப்பனிங் சீன்ல டைரக்டரா நடிச்சதைப் பார்த்து 'வாவ்... சூப்பர் ஆக்ட்டிங்... செம’னு சொன்ன விஜய் சார்கிட்ட நானே, 'அப்படினா அடுத்த படத்துல ஒரு சான்ஸ் கொடுத்துடுங்க’னு சும்மா சொன்னேன்.  'ஜில்லா’ டைரக்டர் நேசனுக்கு போன் பண்ணி வேலையை முடிச்சுட்டார்.''

''உங்க ஹேர் ஸ்டைலுக்கு எதுவும் ஃப்ளாஷ்பேக் இருக்கா? இல்லை, ஸ்டண்ட் மாஸ்டர்ங்கிறதால இப்படி வெச்சிருக்கீங்களா?''

''எனக்கு சுருட்டை முடி. தமிழ்நாட்டுல சுருட்டை முடி இருக்கிற பாதிப் பேர் இந்த மாதிரி ஹேர்ஸ்டைலைத்தான் ஃபாலோ பண்றாங்க. சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம்தான், 'ஸ்டன்ட் மாஸ்டர்னா இப்படித்தான்’னு இவங்களாவே நினைச்சுகிட்டு இருக்காங்க'

''விஜய், அஜித், சூர்யானு பெரிய நடிகர்களோட படங்களுக்கு ஒர்க் பண்றீங்க. ரசிகைகள் ஆட்டோகிராஃப் கேட்கிற அளவுக்கு டெவலப் ஆகி இருப்பீங்களே?''

''அட ஏங்க நீங்க வேற. என் பையன் பர்த்டேக்கு கேக் வாங்கலாம்னு ஒரு கடைக்குப் போனேன். உள்ளே இருந்த ரெண்டு பொண்ணுங்க சில்லறையைக் கூட வாங்காம அலறியடிச்சு ஓடிட்டாங்க. 'என்ன ஆச்சு சார்?’னு கடைக்காரர்கிட்ட கேட்டா, 'உங்களைப் பார்த்துதான் சார் ஓடுறாங்க’னு சிரிக்கிறார். இது பரவாயில்லை, என்னைப் பார்த்தாலே 'ஷூவைக் கழட்டு, பெல்டைக் கழட்டு’னு எல்லா ஏர்போர்ட்லேயும் ஸ்பெஷலா செக் பண்ணுவாங்க. இதுல நீங்க வேற வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டு...'

'கூட ஒர்க் பண்ற நடிகைகள்ல பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?''

''அனுஷ்கா மேடமும் டாப்ஸி மேடமும்தான் என்கிட்ட நல்லாப் பேசுவாங்க, பழகுவாங்க. மத்தபடி ஹீரோயின்ஸ்கூடதான் நமக்கு போர்ஷனே வராதே? அப்புறம் எப்படி நமக்கும் அவங்களுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும்? அதனால, எனக்கு இருக்கிற கேர்ள் ஃபிரெண்ட்ஸ்னு பார்த்தீங்கனா, என்னோட மனைவியும் பொண்ணும்தான்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்