லவ் ஃபீலிங்ஸ் ஆஃப் வில்லன்ஸ்! | சினிமா, வில்லன்கள், cinema, villangal

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (17/02/2014)

கடைசி தொடர்பு:12:05 (17/02/2014)

லவ் ஃபீலிங்ஸ் ஆஃப் வில்லன்ஸ்!

லவ்வர்ஸைப் பிரிக்கிறதே வேலையா வெச்சிருக்கிற சினிமா வில்லன்கள் சிலரிடம் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்கனு கேட்டோம். முதலில் கிட்டத்தட்ட 30 வருடத்துக்கும் மேலாகத் தமிழகக் காதலர்களின் கனவுகளில் கூட பயமுறுத்தும் ராதாரவி...

''காதல் என்பது வயதுவந்த இருவருக்கானது மட்டுமல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. முதலில் தாயைக் காதலிக்கிறோம். பின்னர் பாதுகாப்பு கொடுப்பதால், தந்தையைக் காதலிக்கிறோம். சகோதர, சகோதரிகளை, பின்னர் நண்பர்களைக் காதலிக்கிறோம். இன்னும் அடுத்த படியாக மொழியை, நாட்டை, இயற்கையை என்று எல்லாவற்றையும் காதலிக்கிறோம். எனவே காதலர் தினத்தை நாம் எல்லோருமே கொண்டாட வேண்டும். காதலர் தினத்தன்று மட்டும்தான் காதலியைக் கூட்டிக்கொண்டு சுற்றுவேன் என்பதை எதிர்க்கிறேன். அப்படி அவர்களின் விருப்பம் போல பீச்சிலோ, பார்க்கிலோ பேசிக்கொண்டு இருக்கும் காதலர்களைத் தாக்குவோம், தாலி கட்டவைப்போம் என்று சொல்பவர்களையும் வன்மையாக எதிர்க்கிறேன்'' என ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாவாகிவிட்டார் ராதாரவி.

அடுத்து காதலர்களை இன்னோவா எடுத்து துரத்தும் ரவி மரியாவிடம் பேசினோம். லவ்வர்ஸ்களைவிட அதுக்கு ஹெல்ப் பண்றவய்ங்களைப் பொளக்குறதுதான் இவர் ஸ்பெஷல்.

''என் பெயரே ஒரு காதல் அடையாளம்தான் பாஸ். ரவி நான். மரியா என் காதல் மனைவி. யெஸ்... என் திருமணமும் காதல் கல்யாணம்தான். இப்போ இயக்குநராக இருக்கும் என் நண்பர் ஒருவர் என் திடீர் திருமணத்திற்கு வந்திருந்தார். வந்தவர், 'வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி. குடும்பத்தில் இருந்து ஒருத்தர் கூட இல்லாமப் பண்ணிக்கிறியே. நானா இருந்தா பிரச்னை எல்லாம் முடிச்சி ஊரறியத்தான் கல்யாணம் பண்ணுவேன்’னு பயங்கர ஃபீலானார். சரியாய் ஒரு வருஷம் கழித்து அவர்கிட்ட இருந்து போன். 'பங்காளி, ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு வந்திரு... நீதான் கையெழுத்துப் போடணும்’னு. அதான் பாஸ் லவ். இப்பவும் என் காதல் மனைவிக்கு என்ன உறுதிமொழி கொடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ, அதைக் காப்பாற்றத்தான் இயக்கும் வேலைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு சினிமா காதலர்களைப் பிரித்துக்கொண்டிருக்கிறேன். இப்போகூட லவ் லெட்டர் கொடுத்த ஒருத்தனைத் தூக்கிப் போட்டு மிதிச்சிட்டுத்தான் வர்றேன்... சினிமாவில் பாஸ்'' என்று சிரிக்கிறார்.

'கும்கி’, 'ரம்மி’ படங்களில் காதலுக்கு எதிராக நின்ற ஜோ மல்லூரி,

''காதல் எனக்கு மிகவும் பிடிக்கும், காதலுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். அதனால்தான் 3 காதலிகளையும் 6 தோழிகளையும் என் வாழ்வில் கடந்து வந்திருக்கிறேன். நான் ஒரு காதல் பயணி. பல காதல்களுக்குத் துணை போனவன். நண்பர்கள் சிலரின் காதல்களுக்கு இடையூறு வந்த போது தோளோடு தோள் நின்றவன். 'காதல் மனிதனின் இரண்டாவது இதயம்’ என்று என்னுடைய கவிதைப் புத்தகத்தில் எழுதியிருப்பேன். இன்னமும் காதலிக்காகத்தான் காத்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு மனக்குறை. 80-களின் காதல் இன்று இல்லை. இளையராஜாவின் பாடல் எங்கிருந்தோ ஒலிக்கும்... மனம் காதலியை நினைத்து லயிக்கும்'' என்று கண்கள் சொருக வானம் பார்க்கத் துவங்கிவிட்டார். அட!

அவ்வளவு விரட்டு விரட்டியும் களவாணி விமல் இவர்கிட்ட இருந்து ஓவியாவைக் களவாண்டுப் போனதாலோ என்னவோ, கேரளா பக்கம் என்ட்ரி கொடுத்து, அங்கே நிம்மதியாக லவ்விக்கொண்டிருந்த சேட்டன்களையும் சேச்சிகளையும் கலவரப்படுத்திவருகிறார் திருமுருகன்.

''காதல் நாகரிகத்தின் கண்ணாடி. கோபம், சிரிப்பு, வன்மம், பொறாமை, மகிழ்ச்சி, அழுகைனு எவ்வளவோ உணர்வுகள் இருந்தும் நாம் காதலைத்தானே கொண்டாடுறோம். அதிலேயே தெரியலையா காதலின் அருமை. நான் நண்பர்களின் காதலுக்கு மட்டுமில்லை. எனது அக்காவின் காதலுக்கும் தங்கையின் காதலுக்கும் உதவி செய்து, அவர்கள் காதலித்தவர்களையே திருமணம் செய்துவைத்தேன். காதல் உணர்வைக் கொண்டாட வேண்டும். காதலினால் சமூகத்துக்கும் நல்லது. முக்கியமா சாதி ஒழியும். லவ் பண்ணுங்க பாஸ். ப்ளீஸ்''

பண்ணலாமே!

- செந்தில் குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்