“கதைக்கு நேர்மையும் நமக்கு அதிர்ஷ்டமும் முக்கியம்!” | வல்லினம், vallinam

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (27/02/2014)

கடைசி தொடர்பு:12:16 (27/02/2014)

“கதைக்கு நேர்மையும் நமக்கு அதிர்ஷ்டமும் முக்கியம்!”

“என் முதல் படம் 'ஈரம்’ல மழையும் ஒரு கேரக்டர். ஆனா, ஷூட்டிங்ல பல சமயம் செயற்கை மழையை வெச்சுத்தான் சமாளிச்சோம். இப்போ 'வல்லினம்’ பண்ணும்போது பல சமயம் இயற்கை மழை வந்து படப்பிடிப்பை நிறுத்துச்சு. கல்லூரி சப்ஜெக்ட்... சனி, ஞாயிறுகளில் மட்டும்தான் ஷூட்டிங் வைக்க முடியும். இப்படி சின்னச் சின்ன விஷயங் கள் சேர்ந்து படத்தைக் கொஞ்சம் லேட் பண்ணிருச்சு. கடின உழைப்பு, திறமை இருந்தா சினிமாவில் முன்னுக்கு வந்துடலாம்னு சொல்வாங்க. ஆனா, அதோடு அதிர்ஷ்டம்னு ஒரு விஷயமும் தேவைப்படுது. அதை என் அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டேன்!'' - சின்னப் புன்னகையை உதிர்க்கிறார் அறிவழகன்.

''ஒரு சுமார் டீம், ஒரு பெரிய சவால், இறுதியில் பிரமாண்ட வெற்றி... 'லகான்’, 'சக்தே இந்தியா’, 'வெண்ணிலா கபடிக் குழு’ போன்ற ஸ்போர்ட்ஸ் சினிமாக்களின் ஸ்க்ரீன்ப்ளே இப்படி ஒரே டிராக்லதான் இருக்கும். வல்லினமும் அப்படியா?''

''அந்தப் படங்களில் ஒரே கேம் விளையாடும் ரெண்டு டீமுக்கு இடையிலான போராட்டம்தான் கதை. நான் பேஸ்கட்பால், கிரிக்கெட்னு ரெண்டு விளையாட்டுகளுக்கு இடையிலான ஈகோ பிரச்னைகளைச் சொல்றேன். 'விளை யாட்டுங்கிறது வெறும் விளையாட்டு இல்லை. அது வீரத் தின் அடையாளம். ஆனா, அதுதான் இப்போ பெரிய சூதாட்டமாகியிருக்கு’, 'நாலு கோட்டுக்குள்ள விளையாடு றதுல மட்டுமில்லை, வெளியேயும் நான் வீரன்தான்’, '40 கோடிப் பேர் பார்க்கிற மேட்ச்சையே யார் ஜெயிக்கணும், தோற்கணும்னு நாமதான் முடிவுபண்றோம். 4,000 பேர் பார்க்குற விளையாட்டை ஒண்ணும் பண்ண முடியதா?’னு டாபிக்கல் பரபரப்பு, விளையாட்டின் விறு விறுப்பு எல்லாம் கலந்து இருக்கும் படம். நம்மோட ஆதித் தொழிலே வேட்டைதான். அப்போ ஆயுதங் களைப் பயன்படுத்தி வேட்டையாடினோம். இப்போ விளையாடுறோம். வன்முறையை மென்மையாக்குவதிலும், நம்மை வலிமையாக்குவதிலும் விளையாட்டுக்குப் பெரிய பங்கு இருக்கு!''

''நகுல் இன்னமும் பெருசா கண்டுகொள்ளப்படாத நடிகரா இருக்கார். அவரை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?''

'' 'பாய்ஸ்’ படத்தில் இருந்தே நகுல் எனக்கு நல்ல பழக்கம். ஏகப்பட்ட எனர்ஜியோட துறுதுறுனு இருப்பார். அவர் கண்கள் செம ஷார்ப். ஸ்போர்ட்ஸ்மேன் பாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. பேஸ்கட்பால் விளையாட்டின் அடிப்படை மொத்தமும் கத்துக்கிட்டார். சின்னச் சின்ன விஷயங்கள்லகூட ஒரு தேர்ந்த ஸ்போர்ட்ஸ்மேனுக்கான நேர்த்தி வந்திருச்சு. இந்தப் படத்துக்குப் பிறகு நகுலுக்கான ரேங்க்கில் நிச்சயம் மாற்றம் இருக்கும்!''

''இப்போ காமெடிப் படங்கள்தானே அதிகம் ஜெயிக்குது?''

'' 'சேட்டை’ காமெடிப் படம்தான். ஸ்டார் ஹீரோ, சூப்பர் காமெடியன் நடிச்ச படம்தான். ஆனா, மூணு நாள்ல சுருண்டுருச்சே... சில காமெடிப் படங்கள் ஜெயிச்சா, எல்லா காமெடிப் படங்களும் ஜெயிக்கிறதா நினைக்கிறோம். அது மாயை. காமெடி, சீரியஸ் எதுவா இருந்தாலும் கதைக்கு நேர்மையா இருந்தா... எந்தப் படமும் ஜெயிக்கும்!''

''முதல் படத்துக்குப் பிறகு, இரண்டாவது படம் பண்றதுக்கு அதிர்ஷ்டமும் முக்கியம்னு நீங்க சொன்னீங்க. இப்போ குறும்படங்கள் மூலமா ஓப்பனிங் கிடைச்சு, முதல் படத்தில் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் ரெண்டாவது படத்தைத் தேர்ந்தெடுப்பதில் உங்க டிப்ஸ் என்ன?''

''குறும்பட இயக்குநர்கள் சக்ஸஸ் ஆவது ரொம்ப சந்தோஷம். ஆனா, இதை ஒட்டுமொத்த சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சின்னோ, சினிமா டிரெண்டே மாறிடுச்சுன்னோ சொல்ல முடியாது. முதல் பட வெற்றியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக இன்னும் நிறைய அனுபவம் வேணும். வாழ்க்கையில் எதையும் அனுபவமாக் கத்துக்கணும். நல்ல புத்தகங் கள் படிக்கணும். ஈரான் சினிமால இருந்து மலையாள சினிமா வரை பார்த்துப் பார்த்து சினிமா இலக்கணம் கத்துக்கணும். பொதுவா, கிராமத்துப் படங்களில்தான் நேட்டிவிட்டி காட்ட முடியும்னு சொல்வாங்க. ஆனா, சிட்டி சப்ஜெக்ட்லயும் யதார்த்தத்தைப் பதிவு பண்ணலாம்னு நிரூபிப்பதில் இருக்கு குறும்பட இயக்குநர்களின் தொடர் வெற்றிகள்!''

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்