''விரட்டி விரட்டிக் காதலிக்க ஆசை!'' | அருள்நிதி , arulnithi

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (08/03/2014)

கடைசி தொடர்பு:09:00 (08/03/2014)

''விரட்டி விரட்டிக் காதலிக்க ஆசை!''

'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என ரைமிங் டைட்டில் படங்களில் பிஸியாக இருக்கும் அருள்நிதியிடம் ஒரு ஜாலி அரட்டை...

''வித்தியாசமான டைட்டில் வெச்சா கவனம் அதிகமாகும்னு யாராவது ஐடியா கொடுத்தாங்களா பாஸ்?''

'' 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில் களவாணியாகவும், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் போலீஸாவும் நடிச்சிருக்கேன். மற்ற மூணு போலீஸ் கேரக்டர்ல சிங்கம்புலி, பக்ஸ், ராஜா நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு படங்களும் என்னோட ஹிட் லிஸ்ட்ல மட்டுமில்ல, பெஸ்ட் லிஸ்ட்லேயும் இடம் பிடிக்கும்.''

''இப்படியே 'போலீஸ்  திருடனா’வே நடிச்சுட்டு இருந்தா எப்படி? ரொமான்ஸ் பண்ற ஐடியா இல்லையா?''

'' 'ஓகேஎம்கே’ லவ் ஸ்டோரிதான். இதுவரை ரிலீஸான என்னுடைய எல்லாப் படங்கள்லேயும் வித்தியாசமான கேரக்டர்களில்தான் நடிச்சிருக்கேன். படம் முழுக்க ஹீரோயினை விரட்டி, விரட்டி லவ் பண்ண எனக்கும் ஆசைதான். செம ஸ்டோரி அமைஞ்சா, நான் நடிக்க மாட்டேன்னா சொல்லப்போறேன்?''

'' 'அரசியல்ல என்னை சம்பந்தப்படுத்தாதீங்க. ஒரு நடிகனா மட்டுமே பாருங்க’னு சொல்லியிருந்தீங்களே?''

''இப்பவும் அதைத்தான் சொல்றேன். மத்த நடிகர்கள்கிட்ட நீங்க இந்த மாதிரி கேள்வியைக் கேட்க முடியாது. என்னுடைய முதல் படத்தில் இருந்து, இன்னைக்கு வரைக்கும் நான் இந்தக் கேள்வியை எதிர்கொண்டுதான் இருக்கேன். இது எனக்குப் பிடிக்கலைனுதான் சொல்றேன். ஏன்னா, எனக்கு அரசியல் பேசுற வயசு கிடையாது. தவிர, அரசியல் பேசுறதுக்கும், பண்றதுக்கும் எங்க குடும்பத்தில் நிறையப் பேர் இருக்காங்க.''

'' 'அருள்நிதி மாதிரி சின்ன நடிகர்களோட நடிக்க மாட்டேன்’னு தன்ஷிகா சொல்லியிருக்காங்களாமே?''

''இந்த விஷயத்தை நான் கேள்விப்படலையே. ஒருவேளை, இதை உண்மையாகவே அவங்க சொல்லியிருந்தாங்கனா, நான் பெரிய நடிகர் ஆனதுக்கப்புறம், தன்ஷிகா என்கூட நடிக்கட்டும்.''

''குறும்பட இயக்குநர்கள் இதுவரைக்கும் யாரும் உங்களை அப்ரோச் பண்ணலையா?''

''பண்ணியிருக்காங்க. ஆனா, எதுவுமே எனக்கு செட் ஆகாத கதைகளா இருந்ததால் நான் விரும்பலை.  ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்த்துப் பார்த்து வைக்க வேண்டியதா இருக்கு. வளர்ந்து வர்ற நடிகனுக்கு இந்தப் பயமெல்லாம் இருக்கத்தானே செய்யும்? அதே சமயம், 'சூதுகவ்வும்’, 'பீட்சா’ மாதிரியான கதைகளைக் குறும்பட இயக்குநர்ங்கிறதுக்காக மிஸ் பண்ண மாட்டேன்.''

''லவ் அப்ரோச்... கேர்ள் ஃபிரெண்ட்ஸ் இதைப்பத்தி கொஞ்சம்...''

''பொண்ணுங்க எனக்கு அப்ரோச் பண்ணினதைவிட, நான் பொண்ணுங்களுக்கு அப்ரோச் பண்ணினதுதான் அதிகம். அதையெல்லாம் இப்போ தோண்ட வேணாம். கேர்ள் ஃபிரெண்ட்ஸ்னு பார்த்தீங்கனா, என்கூட நடிக்கிற எல்லா நடிகைகளும்.''

'' 'இளைய சூரியன்’, 'குட்டித் தளபதி’னு பட்டம் போட்டுக்கிற ஆசை இல்லையா?''

''பட்டம் கூட ஒழுங்கா விடத் தெரியாத எனக்கு பட்டம் கொடுக்கிறதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரா இருக்கும் பாஸ். அதெல்லாம் ஒண்ணும் வேணாம், 'அருள்நிதி’னு தாத்தா எனக்கு வெச்ச அழகான பெயர் போதும்.''

''துரை தயாநிதியைப் பற்றிப் பேசுகிற அளவுக்கு, உதயநிதி ஸ்டாலினைப் பற்றி நீங்க சொல்வது இல்லையே?''

''நாங்க கூட்டுக் குடும்பமா இருந்தப்போ, சின்ன வயசில் மதுரையில் இருந்து வர்ற துரை, நேரா என்னோட ரூமுக்கு வந்து கதவைத் தட்டுவார். காரணம் என்னை சீக்கிரமா எழுப்பிவிட்டு, உதயநிதி அண்ணனோட விளையாடுறதுக்குத்தான்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்