''வாய்ப்புக்காகத் தூது விடுகிறேனா?'' | பிரியாமணி, priyamani

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (14/03/2014)

கடைசி தொடர்பு:12:32 (14/03/2014)

''வாய்ப்புக்காகத் தூது விடுகிறேனா?''

'முத்தழகு’, 'முத்தழகு’ என்று ஊரே கொண்டாடிய, தேசிய விருது பெற்ற பிரியாமணியைத் தமிழ் சினிமாவில் காணவே காணோம். கன்னடப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியாமணியிடம் பேசினேன்.

''தமிழ் சினிமாவுக்கும் உங்களுக்குமான இடைவெளி ரொம்பப் பெரிசாகிடுச்சே?'

''நேரடி தமிழ்ப் படங்களில் நடிச்சு ரொம்ப நாள் ஆச்சு... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நல்ல கதை, நல்ல கேரக்டர் கிடைச்சா வேணாம்னா சொல்லப்போறேன். 'சாருலதா’வுக்கு அப்புறம் சில தமிழ்ப் படங்கள் பண்ற வாய்ப்புகள் வந்துச்சு. எதுவுமே எனக்கு செட் ஆகலை.'

''கிளாமருக்கு மாறியதும் கூட வாய்ப்புகள் குறைஞ்சதுக்குக் காரணமோ?'

''ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமா நடிச்சாதானே  நடிகைக்கு அழகு. 'முத்தழகு’ கேரக்டருக்காக தேசிய விருது கிடைச்சிடுச்சுனு காலம் பூராவும் பாவாடை, தாவணியிலேயே நடிக்க முடியுமா என்ன? அதனால்தான் கொஞ்சம் மாடர்னா நடிச்சேன். மத்த நடிகைகள் நடிக்கும்போது மட்டும் மாடர்ன் கேரக்டர்னு சொல்றீங்க... நான் நடிச்சா மட்டும் கிளாமரா? என்ன சார் நியாயம்?'

''ஸ்ருதிஹாசனோட க்ளோஸ் ஃபிரெண்ட் ஆகிட்டீங்களாமே?'

''தமிழ் சினிமாவில் இடைவெளி இருந்தாலும் இப்போ வரைக்கும் என்னோட எல்லா சினிமா நண்பர்களோடும் டச்லதான் இருக்கேன். ஸ்ருதிஹாசனோட நட்பும் அந்த மாதிரிதான். டெய்லி மெசேஜ் பண்றது, கால் பண்றதுன்னு எதுவும் இல்லாட்டியும் மீட் பண்றப்போ ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டிருப்போம். அவளோட படங்களைப் பார்த்துட்டு நானும் என்னோட படங்களைப் பார்த்துட்டு அவளும் பாராட்டிப் பேசிக்குவோம். ஸ்ருதி இஸ் எ நைஸ் கேர்ள்!'

'' 'தேசிய விருது’ பெற்ற நடிகையா இருந்தும் தமிழ்ல நடிக்க வாய்ப்பு இல்லையேங்கிற வருத்தம் இருக்கா?''

''ஆமா... என்னோட கேரியர் ஸ்டார்ட் ஆனதே தமிழ்லதான். ஆனா, இந்தக் கேள்வியை நீங்க தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கிட்டதான் கேட்கணும். 'உங்க படத்துல எனக்கொரு கேரக்டர் கொடுங்க’னு நான் அவங்ககிட்ட கேட்க விரும்பலை. சரியோ, தப்போ... முகத்துக்கு நேரே சொல்லிடுற பொண்ணு நான்.'

''பாலிவுட்ல கலக்கிடணும்னு அங்கே இருக்கிற ஹீரோக்களுக்கெல்லாம் தூது விடுறீங்களாமே?'

''பாலிவுட்டைவிட பெரிய ஹீரோக்கள் தமிழ்ல அதிகமா இருக்காங்க... நான் வாய்ப்புக்காக தூதுவிட்டேன்னா, அதைத் தமிழ் ஹீரோக்கள்கிட்டேயே பண்ணியிருக்க மாட்டேனா?

''உங்களைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் உங்களைப் பாதிக்குதா?''

'' இங்கே இஷ்டத்துக்கு கிசுகிசுக்கள் எழுதுகிற ஆட்கள் அதிகமாயிட்டாங்க. அதையெல்லாம் நான் கண்டுக்கிறதே இல்லை. ஸோ, 'கர்ப்பமாக இருக்கிறார் பிரியாமணி’னு எழுதினவங்க, இப்போ 'பிரியாமணிக்குக் குழந்தை பிறந்தது’ன்னும் எழுதிடுங்க... அப்போதான் மேட்ச்சா இருக்கும்.'

''நடிகை பிரியாமணியா இல்லாம, நார்மல் ஃலைப்ல நீங்க எப்படி?'

''உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரிதாங்க நான். ஷூட்டிங் இல்லைனா, அம்மா, அப்பாகூட சந்தோஷமா இருப்பேன். மத்தபடி செலிபிரட்டி ஃலைப் எனக்குப் பிடிக்காது. அப்படி இருக்கவும் மாட்டேன். எப்போவாச்சும் வெளியே போகும்போது என்னை அடையாளம் கண்டுக்கிறவங்களுக்கு ஒரு ஆட்டோகிராஃப், அவங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு, 'நைஸ் டு மீட் யூ’ன்னு சொல்லிட்டு வந்துடுவேன். அவ்வளவுதான்.'

''நடிப்பைத் தாண்டி வேற விஷயங்கள்ல இன்ட்ரஸ்ட் இல்லையா?'

''டைரக்ஷன் மேல கொஞ்சம் ஆசை இருக்கு. உடனே 'இயக்குநராகிறார் பிரியாமணி’னு எழுதிடாதீங்க. அதையெல்லாம் கத்துக்கவே பல வருஷம் ஆகிடும். இப்போதைக்கு அது விருப்பம் மட்டும்தான்!'

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்