எப்படி சீக்கிரம் படம் எடுக்கிறோம்?

மலையாள சினிமாவின் குவான்டின் டொரான்டினோ என அழைக்கிறார்கள் இளம் இயக்குநர் ஆஷிக் அபுவை. '22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தின் மூலம் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகை ரீமா கல்லிங்கலைத் திருமணம் செய்து, இன்னும் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

''வாழ்த்துக்கள் ப்ரோ... ஒரு தேவதையை மணமுடித்திருக்கிறீர்கள். எப்படிப் போகிறது திருமண வாழ்க்கை?''

''நன்றி. சிலரைப் பார்க்கும்போதே காதலிக்கத் தோன்றும் இல்லையா? அப்படிப்பட்ட பெண் ரீமா. '22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தை நான் இயக்கும்போது எங்களுக்குள் ஒரே அலைவரிசையை உணர்ந்தோம். அந்தப் படம் இன்று எல்லா மொழிகளிலும் ரீமேக் பண்ணப்படுவதற்கு முழுக் காரணமே ரீமாதான். நான் திரையில் காட்ட நினைத்த பெண்ணை என் கண் முன் கொண்டுவந்து நிறுத்தினார்''

''மலையாளத்தில் எப்படி இத்தனை வேகமாகப் படங்களை எடுக்கிறீர்கள்?''

''தமிழிலும் இப்போது வேகமாகப் படம் எடுக்கிறார்களே... தமிழ் சினிமா போல் மிகப் பெரிய ஸ்டார் வேல்யூ எல்லாம் எதுவும் இங்கு இல்லை. அது நல்ல விஷயம். கதைக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வதற்கு மட்டுமே இங்கு தாமதம் ஆகும். லேண்ட் ஸ்கேப் சிறிய பகுதிதான். கிட்டத்தட்ட வீட்டுக்குப் பக்கத்திலேயே படம் எடுக்கிறோம். காலை டிபன் சாப்பிட்டுவிட்டு படப்பிடிப்புக்கு வந்து சாயங்காலம் வீட்டுக்குப் போய்விடலாம். இது எங்கள் கேரளாவுக்கே உரிய வசதி. பெரிதாய் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை.''

''தமிழ்ப் படங்கள் பார்ப்பது உண்டா?''

''ஹலோ... நான் டை ஹார்டு ரஜினி ஃபேன். தலைவரை வைத்து படம் இயக்கும் ஆர்வம்கூட இருக்கிறது. மலையாளப் படங்களை இவ்வளவு உன்னிப்பாக நீங்கள் கவனிக்கும்போது தமிழ் படங்களை நாங்கள் கவனிக்காமல் விடுவோமா? சமீபத்தில் தமிழில் குறும்பட இயக்குநர்கள் கலக்குகிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பு உயிர்ப்போடு இருக்கிறது. மற்றபடி அஜித், விஜய், விக்ரம், சூர்யா படங்கள் ஒன்றையும் விடுவது இல்லை. சென்னை எனது இன்னொரு தாய்வீடு. லாலை ஹீரோவாக வைத்து நான் இயக்கிய 'சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை பிரகாஷ் ராஜ் சார் ரைட்ஸ் வாங்கித் தமிழில் தயாரித்து இயக்குகிறார். என் இயக்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை, பெருமையாகக் கருதுகிறேன்.''

''இப்போது என்ன படம் இயக்கிக்கொண்டிருக்கிறீர்கள்?''

''ஹனிமூன் முடித்து இப்போதுதான் வந்திருக்கிறேன். 'கேங்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரிக்கிறேன். மம்முட்டி என்ற பெரிய நடிப்பு தாதா நடிக்கிறார். மிரட்டலான கேங்ஸ்டர் படத்தை எடுக்க மெனக்கெட்டு வருகிறோம். விரைவில் பெரிய அளவில் அறிவிப்பு வரும்.  ரீமாவை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறேன். ஸ்கிரிப்ட் என்ன என்பது சஸ்பென்ஸ்!''

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!