“இந்தியாவில் மாடர்னிட்டிக்கு அர்த்தமே இல்லை!” | சுவாதி, swathi, actress

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (21/03/2014)

கடைசி தொடர்பு:11:35 (21/03/2014)

“இந்தியாவில் மாடர்னிட்டிக்கு அர்த்தமே இல்லை!”

'ஜாலியாப் பேசணுமா? எதுக்கோ வார்னிங் கொடுக்கிற மாதிரியே இருக்கே...?’ கலகலப்பாக ஆரம்பிக்கிறார் 'சுப்ரமணியபுரம்’ சுவாதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கும் அவரிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை...

''தெலுங்கில் மூணு படங்கள்ல பாட்டு பாடியிருக்கீங்க. தமிழ்ல பாடுறதுக்கு விருப்பம் இல்லையா?''

''நான் நடிக்கிற தமிழ்ப் படத்துக்கு நானே டப்பிங் பேசணும். அப்புறம்தான் பாட்டெல்லாம்.''

''கடவுளைப் பார்த்திருக்கீங்களா?''

''நான் தினமும் கடவுளைப் பார்த்துட்டுதான் இருக்கேன். எங்க அம்மா, அப்பா வடிவத்துல. கடவுள் குழந்தைங்க முன்னாடி வந்து, 'உனக்கு நான் வேணுமா? உங்க அம்மா, அப்பா வேணுமா?’னு கேட்பாராம். 'அம்மா, அப்பா போதும்... நீங்க வேணாம்’னு சொல்ற குழந்தைகளுக்குத்தான் கடவுளோட ஆசிர்வாதம் இருக்குமாம். எனக்கு இருக்குப்பா.''

'' ஓவரா ஃபீல் ஆக வெச்சுட்டீங்களே... சரி, யாரிடம் அதிகமா மொக்கை வாங்குவீங்க?''

'' உங்களை மாதிரி பத்திரிகைகாரங்ககிட்டதாங்க... எனக்கு நீங்க போன் பண்ணும்போதே 'இந்தப் பொண்ணுக்குத் தமிழ் வராது. எப்படிப் பேசி, பேட்டி எடுத்து... ஸ்ஸப்பா தலைவலிடா’னுதான் கால் பண்ணுவீங்க. ஆனா, இந்த மாதிரி பேட்டி கொடுக்கிற சான்ஸ்லதான் நான் நல்லாத் தமிழ் பேசக் கத்துக்கலாமேனு ஆசைப்படுவேன். என்கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ், என்னோட டைரக்டர்ஸ்னா நான் எப்படிப் பேசினாலும் பொறுமையா இருந்துடுவாங்க. ஆனா, பத்திரிகைகாரங்ககிட்ட பேசும்போது மட்டும் ஆட்டோமேட்டிக்கா எனக்குப் பதட்டம் வந்துடும். நல்லாவே தமிழ் பேசினாலும் பதட்டத்துல உளற ஆரம்பிச்சுடுவேன். சிம்பிளா சொல்லணும்னா, எல்லா பிரஸ்மீட்லேயும் நான்தாங்க மொக்கை பீஸ்.''

''ஜெய்-சுவாதி காம்பினேஷன் எப்படி?''

''ஐயோ... அந்த சேப்டர் ஸோ போரிங். ஒரு படத்துல 20, 25 நாள் நடிச்சா, அதுல 10, 15 நாள் ஹீரோ, ஹீரோயினுக்கு காம்பினேஷன் சீன் இருக்கும். அதுலேயும் ரெண்டு, மூணு பேர் சேர்ந்தேதான் நடிப்பாங்க. ஜெய்க்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் ஹீரோ, ஹீரோயின் மட்டும்தான். அவர் சென்னையில் இருக்கார். நான் ஹைதராபாத்ல இருக்கேன். நான் அவரோட தனியா சுத்தவும் இல்லை, ஒண்ணா சாப்பிடவும் இல்லை. போதுமா?''

''நமீதா அரசியலுக்கு வரப்போறாங்களாமே? அவங்க எந்தக் கட்சியில் சேர்ந்தா நல்லா இருக்கும்?''

''என்னது... நமீதா அரசியலுக்கு வர்றாங்களா? நீங்க சொல்லித்தாங்க எனக்கே தெரியுது. எனிவே... அவங்களுக்கு ஆல் தி பெஸ்ட். அதுதான் என்னால சொல்ல முடியும்.''

''உங்களை அரசியலுக்குக் கூப்பிட்டா?''

''எப்போ கூப்பிடுவாங்கனு சொல்லுங்க, அதுக்கு முன்னாடி போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எஸ்கேப் ஆகணும்.''

''அரசியல்வாதிகள் ஓட்டு சேகரிக்க, நடிகைகளைக் குத்தாட்டம் போடச் சொல்றாங்களே, இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டீங்களா?''

''அரசியலுக்கும் சினிமாவுக்கும் பல வருட கனெக்ஷன் இருக்கு. ஜெயலலிதா, என்.டி.ஆர்., சிரஞ்சீவி, இப்போ பவன் கல்யாண்னு பல சினிமா பிரபலங்கள் அரசியல்ல இருக்காங்க. அதனால இதையெல்லாம் பெருசா எடுத்துக்க முடியாது. அந்த யூடியூப் வீடியோவை முதல் தடவை பார்க்கும்போது 'ஆங்’னு ரியாக்ஷன் வரும். சிரிப்போ, எரிச்சலோ பட்டுட்டுப் போக வேண்டியதுதான், வேற ஒண்ணும் பண்ண முடியாது.''

''அரசியல் பிடிக்காதுனு சொல்றீங்க... இவ்ளோ அப்டேட்?''

''அய்யோ நானாதான் உளர்றேனா? இதெல்லாம் பேப்பர்ல படிக்கிறதுதாங்க. பவன் கல்யாண் கட்சி ஆரம்பிச்சதுதான் இங்கே ஹைலைட்டாப் போயிட்டு இருக்கு. நியூஸ் பேப்பர்ல எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் அரசியலைத் தவிர வேற இல்லை. நான் என்ன பண்றது?''

'' 'மாடர்ன் இந்தியா’ங்கிற வார்த்தைக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்?''

''முதல்ல இந்தியா மாடர்னே கிடையாது. அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்றதுதான். சினிமாவிலே ஹைகிளாஸ் பொண்ணா, பேஸ்புக்கைப் பார்க்கிற மாதிரி காட்டலாம். ஆனா, இங்கே எல்லோருமே புடவை கட்டி, கோயில்ல தாலி கட்டணும்னுதான் நினைக்கிறாங்க. வர்ற மனைவிக்கு சாம்பார் சாதமும் பருப்பு சாதமும் வைக்கத் தெரியுமானுதான் முதல்ல யோசிக்கிறாங்க. மாடர்ன்கிற வார்த்தை வெறும் வார்த்தையாதான் இருக்கே தவிர, அதுக்கு இங்கே எந்த அர்த்தமும் இல்லை.''

''தெத்துப்பல் உங்களுக்கு லக்கியா? அன் லக்கியா?''

'' ரெண்டுமே இல்லை. பார்க்கிறவங்கதான் 'அழகா இருக்கு’, 'அசிங்கமா இருக்கு’னு கமென்ட்ஸ் சொல்றாங்க. ஆனா, ஆரம்பத்தில் நானே இதை எடுக்கிறதுக்கு பல் டாக்டர்கிட்ட போனேன். அவர், 'ஒரு வருஷத்துக்கு கறி சாப்பிடக் கூடாது, ஆப்பிளைக் கடிக்கக் கூடாது’னு கன்டிஷன் போட்டாரா, 'எனக்கு இந்தப் பல் இருக்கட்டும்’னு எந்திரிச்சு வந்துட்டேன். நமக்கு சிக்கன்தாம்பா முக்கியம்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்