Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நகரம் உங்களைக் கண்காணிக்கிறது!”

ஜித் முறைக்கிறார்; அபிஷேக் பச்சன் சிரிக்கிறார்; சோனம் கபூரும் ஆண்ட்ரியாவும் அழகு காட்டுகிறார்கள்; விஜய் யோசிக்க, அமீர்கான் ஆவேசமாகப் புறப்படுகிறார் - அறையின் சுவர் முழுக்க, கூரை முழுக்க விதவிதமான சினிமா ஸ்டில்கள். 'மெல்லிசை’ பட அலுவலகமே கலர்ஃபுல்லாக இருக்கிறது.

''விஜய் சேதுபதிகிட்ட இந்தப் படத்தோட கதையைச் சொன்னேன். நான் கதை சொன்ன விதம் அவருக்குப் பிடிச்சிருச்சு. 'இந்தக் கதையை நேரடியாச் சொன்னா, பாடம் எடுக்கிற மாதிரி ஆயிரும். நீங்க கமர்ஷியலா மாத்தினதால கேட்கவே நல்லா இருக்கு’னு சொன்னார். ஆனா, அவர்கிட்ட கால்ஷீட் இல்லை. 'ஒரு வருஷம் காத்திருக்க முடியுமா?’னு கேட்டார். சரினு சொல்லிட்டு, வேற ஸ்கிரிப்ட் தயார் பண்ற வேலையில் இறங்கிட்டேன்.

திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு, 'நான் பண்றதா இருந்த ஒரு படம் தள்ளிப் போகுது. இன்னும் 20 நாள்ல உங்களால் நம்ம படத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்க முடியுமா?’னு கேட்டார். நான், என் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ்., மூணு பேரும் ஒரு வருஷமா இந்தக் கதையோட டிராவல் பண்ணிட்டு இருக்கோம். அதனால், உடனே ஷூட்டிங் போனோம். இதோ, 50 நாள்ல படத்தை முடிச்சிட்டோம். விரைவில் 'மெல்லிசை’ உங்களை மெய்சிலிர்க்கவைக்கும்!'' - ஆர்வமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.

இயக்குநர் ராமின் உதவி இயக்குநர், இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'மெல்லிசை’ படத்தின் இயக்குநர்!

''படத்தில் விஜய் சேதுபதி, மியூசிக் ஆல்பம் பண்ண முயற்சிக்கிற ஓர் இளைஞன். காயத்ரி, மியூசிக் டீச்சர். இவங்க ரெண்டு பேரைச் சுத்திதான் மொத்தப் படமும் நகரும். இன்னொரு கோணத்தில் பார்த்தா, இது நகர வாழ்க்கையைப் பத்தின  சினிமா. நவீனமயமாக்கப்பட்ட நகர வாழ்க்கையில் சிக்கல்கள் நம்மைத் சுத்தி ஒரு வலை மாதிரி பின்னிக்கிடக்குது. ஆனா, அதை நாம் கவனிக்கிறதே இல்லை. இந்த நகரத்தை நாம எத்தனை பேர் கவனிக்கிறோம்னு தெரியாது. ஆனா, இந்த நகரம் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் கவனிச்சுட்டே இருக்கு. இங்கே எல்லோருமே சுவாரஸ்யமாக வாழ்றோம். ஆனா, நிம்மதியா... சுதந்திரமா வாழ்றோமா? இந்தக் கேள்விக்குப் பதில்தான் இந்தப் படம்!''

'' 'மெல்லிசை’னு பேர் வெச்சுட்டு ஏதேதோ சொல்றீங்களே!''

'' 'மெல்லிசை’னா இதமான ஒரு சோகம். சோகமாவே இருந்தாலும் மனசு லயிச்சுத் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும். இதை உளவியல் மர்மக் கதைனுகூட சொல்லலாம்.

எனக்கு ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், கிறிஸ்டோபர் நோலன் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவங்க, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் உளவியல் ரீதியா நகர்த்துவாங்க. சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கும் ஒரு கேரக்டர், ஒரு இடத்துல பதட்டமாகி, வாழ்றதுக்காக ஓட ஆரம்பிக்கும். இந்தப் படத்துலயும் அப்படி ஒரு ட்ரீட்மென்ட் இருக்கும். கமர்ஷியல் விஷயங்களையும் கச்சிதமா மிக்ஸ் பண்ணியிருக்கோம். என்ன நடக்குமோங்கிற பதற்றமும், த்ரில்லர் படங்களுக்கே உண்டான வேகமும் இருக்கும்!''

''சிவகார்த்திகேயன், ஹன்சிகா வரைக்கும் போயிட்டார். ஆனா, விஜய் சேதுபதிகூட நடிக்க இன்னும் ஒரு டாப் ரேங்க் ஹீரோயின் புக் பண்ண மாட்டேங்கிறீங்களே?''

''இந்தப் படத்துக்கு திடீர்னு விஜய் சேதுபதி கால்ஷீட் மொத்தமாக் கிடைச்சது. அப்போ ஹீரோயின் கால்ஷீட்டும் அதே நாள்ல மொத்தமா வேணும். அதுவும் இல்லாம இந்தக் கதைக்கு பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி அமைதியான, சாந்தமான ஒரு முகம் வேணும். இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் காயத்ரிதான் பொருந்தினார். ஸ்க்ரீன்ல ரெண்டு பேரையும் பார்க்கிறப்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். மனசுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தரை வழியனுப்பிட்டு, ஏதோ ஒரு யோசனையோட வீட்டுக்கு நடந்து வருவோமே... அப்படி ஒரு ஃபீலிங் தரும் இந்த 'மெல்லிசை’!''

- எஸ்.கலீல்ராஜா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்