“கர்நாடக சங்கீதத்திலும் கலக்கப் போறேன்!” | கானா பாலா, gana bala

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (29/03/2014)

கடைசி தொடர்பு:15:28 (29/03/2014)

“கர்நாடக சங்கீதத்திலும் கலக்கப் போறேன்!”

இப்போதெல்லாம் நடிகர்களின் கால்ஷீட்டோடு கானா பாலாவின் ஒரு பாட்டையும் நிஜாம் பாக்கு போல உனக்கு, எனக்கு எனக் கேட்டு வாங்குவது தயாரிப்பாளர்களின் வாடிக்கையாகிவிட்டது.

 ''வணக்கம்ணா. கானா பாலா அடுத்து ஹீரோ வேஷம் கட்டப்போறதா தகவல் வருதே...?'

''ஓ வந்துருச்சா? ஹீரோ வேஷம்லாம் தேடி வரும்ணா. அப்படி வர்றப்போ பின்னி பெடல் எடுக்க வேணாம்? இப்பவே டான்ஸ் க்ளாஸ்லாம் போய் தயாராகிக்கினு இருக்கேன். இப்போ நம்மளுக்கோசரம் பாட்டு கேக்குறவங்கனு ஒரு சின்ன‌ குரூப் இருக்கு. அதுக்காக ஹீரோ கனவு காண முடியுமா? ஆனா, நேத்து என்னவா ஆகணும்னு நான் கனவு கண்டது இல்லை. இன்னிக்கு பிஸியா பாடிக்கினு இருக்கேன். நாளைக்கு நடிக்கிற வாய்ப்பு வந்தா அதையும்தான் பார்த்திருவோமே.'

 

'’கரெக்ட்ணா... அப்படி ஹீரோ வாய்ப்பு வந்தால், ஹீரோயின் யாரு?'

'’வேற யாரு... என் மனைவி நதியாதான். நிஜ வாழ்க்கையில் எனக்கு சோடி போட்டவங்க.  அவளும் அழகா ஹீரோயின் கணக்காதான் இருப்பாங்க. மனைவிக்கு மரியாதை செஞ்ச மாதிரியும் இருக்கும். நாங்களும் ஸ்க்ரீன்ல லவ் பண்ணா மாதிரியும் இருக்கும். சூப்பர் ஐடியால. என்னாங்குறீங்க?'

''சூப்பர்ணா... அனாதை பாலாங்கிற பேர்லதான் ஆரம்பத்துல கானா  பாடிக் கலக்கினீங்க. ஏன் அந்தப் பட்டத்தை விட்டுட்டீங்க?'

''அது நெகட்டிவ் பப்ளிசிட்டியாப் போச்சுங்ணா. 89-‍ல இருந்து அந்தப் பேர்லதான் பாடிக்கினு இருந்தேன். சுற்றமும் நட்பும் அனாதைங்கிற வார்த்தை வேணாம்ணாங்க. நமக்கு அடையாளமே இந்த புளியந்தோப்பு கன்னிகாபுரம்தானே. நம்ம ஏரியா சனத்தோட உணர்வுக்கு மரியாதை கொடுத்து அனாதையைத் தூக்கிட்டேன். மக்கள்ல ஒருவனா ஒரே நாள்ல கானா பாலாவாகிட்டேன். இப்போ எல்லோருக்கும் குஷி.'

''வக்கீல் வேலை என்னாச்சு?'

''படிப்புதான் நம்மை மாதிரி எளிய மனிதர்களுக்கு அடையாளம்.  இப்போ கடவுள் கிருபையால் நல்லா பிஸியா சம்பாதிச்சுக்கினு இருக்கேன். நாளைக்கே சினிமாவில் சான்ஸ் போச்சுனா என்ன பண்ணுறது? வருமானத்துக்காக வக்கீல் தொழில் பண்ணாம ஆத்ம திருப்திக்காக இப்போ பார்த்துகினுதான் இருக்கேன். வக்கீல்னாலும் நல்லதுக்கு மட்டும்தான் போவேன். கெட்ட விஷயங்கள்  எதுக்கும் போக மாட்டேன். லீகல் அட்வைஸ் வேணும்னா பண்ணிக்கொடுப்பேன். வேலை விஷயமா ஒரு வக்கீல்கிட்ட கையெழுத்து வேணும்னா போட்டுக்கொடுப்பேன். எதையும் காசுக்காக பண்றதில்ல. நாளைக்கே பாட்டு போச்சுனா, நம்ம கருப்பு கவுன்தான் கஞ்சி ஊத்தும்ணா.'

''அரசியல்ல குதிக்கிற ஐடியா இருக்கா?'

''அழைப்பு எல்லாக் கட்சியில் இருந்தும் வந்தது. ஒரு கட்சிக்காரனாகிட்டா மத்த கட்சிகளைப் பகைச்சுக்க வேண்டிவரும். அரசியல் அறிவு நிச்சயம் ஒவ்வொரு மனுஷனுக்கும் வேணும். அதனாலதான் ஒவ்வொரு வாட்டி மார்ஜின்ல தோத்தாலும் கவுன்சிலர் எலெக்ஷன்ல சுயேட்சையா நின்னுட்டு இருக்கேன். ஜனங்க நிச்சயம் ஒருநாள் வெற்றிக்கனியை பறிச்சுக் கொடுப்பாங்க. இன்னும் அவங்களுக்கு என்னால முடிஞ்சதை செஞ்சு கொடுக்க முடியும்.'

''இப்போ பாடகர், பாடலாசிரியர்னு செட்டில் ஆகிட்டீங்க? இன்னும் நார்த் மெட்ராஸ்ல இருக்கீங்களே?'

''ஒரு மனுஷன் வாழ்ந்ததுக்கான அடையாளமே சாகும்போது தூக்கிப்போட வர்ற சனங்கதான். இந்த ஏரியாவை விட்டுப்போனா எனக்கு யாரும் வர மாட்டாங்க.  இங்கே பசிச்சா எந்த வீட்டுல வேணும்னாலும் போய் உரிமையா கை நனைக்கலாம்.  நாளைக்குப் பின்னால யார் வந்து நிப்பா? என் சனம்தான் எனக்கு எல்லாம். என்னை வளர்த்து ஆளாக்கிவிட்டது புளியந்தோப்புதான். கோல்டு மனசுக்காரங்க நம்ம சனங்க. கடைசி வரைக்கும் இங்கே தான் கிட‌ப்பேன். அவங்க பிரதிநிதியா ஜெயிச்சுக் காட்டுவேன். புளியந்தோப்புக்கு எல்லோரும் குடியேறி வர்ற காலம் வராமலா போகும்? சிட்டிலாம் நமக்கு அலர்ஜிணா.'

''கானாவைத் தாண்டி வேறு எதுவும் பாடுகிற முயற்சி பண்ணலையா?'

''ஜாஸ், பாப், ப்ளூ வெஸ்டர்னு பாடிக்கினு இருக்கேன். நானும் என் மனைவி நதியா மகன் அபிமன்யு, மகள் அபிமன்யா எல்லோரும் முறையா கர்நாடக சங்கீதம் கத்துக்கினு இருக்கோம். என்னைவிட என் ஜூனியர்ஸ் நல்லாவே கர்நாடக சங்கீதம் பாடுறாங்க. இசைக்கு சாதி, இனம், மொழிலாம் கிடையாது. சீக்கிரமே குடும்பத்தோட ஒரு கர்நாடக கச்சேரி வெச்சுட்டாப் போச்சு'  அதிர அதிர சிரிக்கிறார் கானா பாலா!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்