“எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்!” | oru kanniyum moonu kalavanigalum, chimbudevan, arulnithi, ashritha shetty, bindhumadhavi, அருள்நிதி, பிந்து மாதவி, சிம்புதேவன், அஷ்ரிதா ஷெட்டி, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (03/04/2014)

கடைசி தொடர்பு:12:53 (03/04/2014)

“எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்!”


ரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தோட டீஸர்க்கு இவ்ளோ ரீச் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. 40 செகண்ட்ஸ்ல சொல்லணும்; வித்தியாசமாவும் இருக்கணும். யோசிச்சப்ப பளிச்சுனு கிடைச்ச ஐடியாதான்... அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி மூணு பேருயும் சுவர் ஓரமா ஓடறதும், படத்தைப் பத்தின விவரங்களை அந்தச் சுவரில் வரைஞ்சதும். ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட லைக்ஸ், ஷேர்ஸ். இயக்குநர்கள் ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், ஏ.எல்.விஜய்னு நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினாங்க. ரொம்ப உற்சாகமா இருக்கு!''- இயக்குநர் சிம்புதேவன் பேச்சில், படத்தின் டீஸர் ஹிட்டடித்த மகிழ்ச்சி!

''என்ன கதை?''

''தலைப்புதான் கதை. மூணு களவாணி களுக்கும் ஒரு பொண்ணுக்குமான நட்பு, அதனால் நடக்குற சம்பவங்கள்னு யதார்த்தமான ட்ரீட்மென்ட். வாழ்க்கையில் சோதனை வரும் நேரங்களில் சோர்ந்து உடைஞ்சுபோய் உட்கார்ந்திடாம, நினைச்ச விஷயங்களை அடைஞ்சே தீரணுங்கிற வெறியோட இந்த நாலு பேரும் முட்டி மோதுறாங்க. சென்னை நகரப் பின்னணியில் நடக்குற கதை. இன்னைக்கு வாழ்க்கையில் நாம எதிர்கொள்கிற பிரச்னைகளை வெச்சு சுவாரஸ்யமா சொல்ல முயற்சிப் பண்ணியிருக்கேன்!''

''நீங்க, ஃபேன்டஸி காமெடி ஏரியாவில் கில்லி. உங்க அலைவரிசைக்கு அருள்நிதி செட்டானாரா?''

''இந்தக் கதையை முதன்முதலா இயக்குநர் பாண்டிராஜ்கிட்ட சொன்னேன். 'மெயின் கேரக்டரை அருள்நிதி பண்ணினா நல்லா இருக்கும்’னு அவர்தான் சஜஷன் கொடுத்தார். ஆரம்பிச்சு கொஞ்ச நாளிலேயே பரபரனு ஷூட்டிங்கை முடிச்சிட்டோம். எங்களுக்கு இடையே நல்ல நட்பு வந்திருக்கு. இயல்பான கதாபாத்திரத்துக்கு பொருத்தமான முகம் அருள்நிதிக்கு. தவிரவும், அவரோட சொந்த பேனர்ல படம் பண்றதும் ஈஸியா இருந்துச்சு. சினிமாவில் இயல்பான ஒரு பயணத்துக்கு, டைரக்டர், தயாரிப்பாளர், ஹீரோ - இந்த மூணு பேருக்குமான புரிதல் ரொம்ப முக்கியம். இந்தப் படத்தில் எனக்கு அது நிறையவே கிடைச்சது!''

''படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?''

''அருள்நிதி, பிந்து மாதவி, அர்ஷிதா ஷெட்டி, பக்ஸ் என்கிற பகவதி... இந்த நாலு பேரைச் சுற்றி நகருது கதை. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடிச்ச பின்னாடி, பக்ஸ் டைரக்ஷன் பண்ண முயற்சி பண்ணிட்டு இருந்தார். கதையைக் கேட்டதும், டைரக்ஷன் ஆசையைத் தள்ளிவெச்சுட்டு நடிக்க வந்துட்டார். அருள்நிதி - அஷ்ரிதா ஷெட்டி - பிந்து மாதவிக்கான கெமிஸ்ட்ரியைவிட அருள்நிதிக்கும் பக்ஸுக்குமான கெமிஸ்ட்ரிதான் பிரமாதமா வொர்க் அவுட் ஆகியிருக்கு. பிந்து மாதவியின் லுக் அண்டு ஃபீல் படத்தில் ரொம்ப வித்தியாசமா இருக்கும்!''

'' 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்துக்கு அடுத்து ஏன் ரெண்டு வருஷ இடைவெளி?''

''இப்பல்லாம் வித்தியாசமா கதை பிடிச்சு, ஸ்க்ரிப்ட் பண்ணி ஷூட்டிங் முடிச்சிட்டு வர, ஒன்றரை வருஷம் ஆகிருது. கால தாமதங்கள், சினிமாவில் தவிர்க்க முடியாதது. 'இரும்புக்கோட்டை’க்குப் பின்னாடி தனுஷ் சாருக்கு ஒரு கதை பண்ணினேன். அந்த புராஜெக்ட் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கு. அதான் தாமதம். இடைவெளிங்கிறது நம்மள உற்சாகப்படுத்திக்கவும் அப்டேட் பண்ணிக்கவும் கிடைக்குற நேரம்தான். இப்பப் பாருங்க, சோஷியல் மீடியா பத்தின அப்டேட்ஸ், எங்க பட டீஸரை ஃபேஸ்புக்கில் வெளியிடுற அளவுக்கு நம்பிக்கை தந்திருக்கு. எவ்வளவு ரீச்! எவ்வளவு கமெண்ட்ஸ்! சோஷியல் மீடியா, இன்னைக்கு மிகப்பெரிய பிளாட்ஃபார்ம். இந்த சயின்ஸ், நாளைக்கே சினிமாவைவிட பெரிய மீடியாவாகக்கூட ஆகலாம். எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்ல!''

-  ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்