“பெரிய பட்ஜெட் படம் பண்ண தைரியம் இல்லை!” | சி.வி.குமார், c.v.kumar, சினிமா, cinema. butget cinema, பட்ஜெட் சினிமா

வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (07/04/2014)

கடைசி தொடர்பு:10:59 (07/04/2014)

“பெரிய பட்ஜெட் படம் பண்ண தைரியம் இல்லை!”

''ஒரு வருஷத்துல தமிழ்ல வெளியாகும் படங்களைவிட வெளிவராத படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். மூணு படம் தயாரிச்சவன்ற சின்ன அனுபவத்தை வெச்சு சொல்றேன்... ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல மதிப்புள்ள படங்கள் இப்பவும் லேப்ல தூங்கிக்கிட்டுதான் இருக்கு. இங்க, படம் எடுக்குறது சுலபம். ஆனா, அதை ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம். என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு சூதாட்டம். இயக்குநர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே குதிரைகள். அவங்கமேல பந்தயம் கட்டுறோம். பந்தயத்துல ஜெயிச்சா ஏ.சி. கார்ல போகலாம். இல்லைன்னா நடு ரோட்லதான் நிக்கணும்!''

 - 'அட்டகத்தி’, 'பீட்சா’, 'சூது கவ்வும்’ - ஹாட்ரிக் ஹிட் படங்களின் தயாரிப்பாளர் சி.வி.குமார், தமிழ் சினிமாவின் இப்போதைய நிதர்சனம் சொல்கிறார்.

  சில வருடங்களுக்கு முன்வரை ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ் தொழிலில் இருந்தவர், இப்போது டஜன் படங்களின் தயாரிப்பாளர். அறிமுக இளைஞர்கள், ஃபார்முலாவில் அடங்காத திரைக்கதை, குறைந்தபட்ச பட்ஜெட் என கோலிவுட்டின் தற்போதைய டிரெண்டுக்கு படம் பிடிப்பவருடன் பேசியதிலிருந்து...  

''சொந்த ஊர் மதுரை, திருமங்கலம். சைக்காலஜி படிப்பு. கல்யாணமாகி ஒரு பையன், ஒரு பொண்ணு. பக்தர்களை புனித யாத்திரை அழைச்சுட்டுப் போகும் சுற்றுலா பேக்கேஜ் தொழில்ல அப்பாவுக்கு உதவியா இருந்தேன். மாசத்துல பாதி நாள் பயணங்கள்தான். அந்த சமயங்கள்ல சினிமாவும் புத்தகமும்தான் என் நேரத்தைக் கடத்த உதவும்.

டிராவல்ஸ் தவிர இன்னொரு தொழில்ல கவனம் செலுத்தலாம்னு யோசிச்சப்போ, 'பிடிச்ச சினிமாவையே தொழிலா எடுத்துக்கிட்டா என்ன’னு தோணுச்சு. 'திருதிரு துறுதுறு’, 'உன்னைப்போல் ஒருவன்’ போன்ற படங்களின் தரமான டிஜிட்டல் மேக்கிங், 'களவாணி’, 'தமிழ்ப்படம்’ போன்ற குறைந்த பட்ஜெட் படங்களின் வெற்றி... இது ரெண்டும் என் கவனத்தை ஈர்த்தன. உடனே, டிஜிட்டல் கடவுள் மேல நம்பிக்கை வெச்சு இறங்கிட்டேன்.

'அட்டகத்தி’க்கு முன்னாடியே ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, நாலு மாசம் ப்ரி-புரொடக்ஷன் வேலைகள் போச்சு. சினிமால என்னல்லாம் செய்யக் கூடாதுனு அதுல கத்துக்கிட்டு, இப்போ தெளிவாகிட்டேன். ஒரு ஸ்கிரிப்ட் படிக்கும்போதே, இந்த சீன் இப்படி அவுட்புட் ஆகும்னு விஷ§வலா கற்பனை பண்ணிப் பார்க்க முடியுது!''  

''உங்ககிட்ட வாய்ப்பு கேட்டு வரும், அறிமுக இயக்குநரிடம் என்னென்ன தகுதிகள் எதிர்பார்ப்பீங்க?''

''ஸ்கிரிப்ட் கனமா இருந்தா மட்டும் பத்தாது. டெக்னிக்கல் அறிவும் அவசியம் இருக்கணும். சினிமாவின் அத்தனை துறை பற்றிய புரிதலும் இருக்கணும். அவரோட ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் எப்படி இருக்குனு பார்த்து, விஷ§வல்கள் சுவாரஸ்யமா இருந்தா, உடனே ஓ.கே. சொல்லிரு«வாம்!''

''பெரிய நிறுவனங்களே படங்களை வெளியிட, வெற்றிபெற வைக்கத் தடுமாறும்போது, உங்க சக்சஸ் ஃபார்முலா என்ன?''

''எல்லாமே என் ஒருத்தன் பார்வையில்தான் நடக்கும். பெரிய பட்ஜெட்டுக்குப் போகவே மாட்டோம். இதெல்லாம் எங்க கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயம். இதுபோக, இப்போ சினிமாவின் வட்டம், வீச்சு குறுகிடுச்சு. எல்லா படத்தையும் எல்லாரும் பார்க்க மாட்டாங்க. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு 'டார்கெட் ரசிகர்கள்’ இருக்காங்க. அவங்களை ரீச் பண்ணாலே போதும்னு இலக்கு வெச்சுப்போம். அவங்களுக்கு என்ன மாதிரியான கதைகள் பிடிக்கும், அதை எப்படி சினிமா ஆக்குறது, அவங்களை ரீச் பண்ண எப்படில்லாம் பப்ளிசிட்டி பண்ணணும்..? இதுதான் எங்க சினிமா மேக்கிங். 'சினிமா’ங்கறது, ஒரு கலை, சேவை என்பதைத் தாண்டி சிக்கலும் சீரியஸுமான ஒரு வணிகம். ஒரு படத்தின் வணிக எல்லையை நாங்க எப்பவுமே மீற மாட்டோம்!''

''அப்போ, மாஸ் ஹீரோக்களை வெச்சு படம் பண்ற ஐடியாவே இல்லையா?''

''முதல்ல அவங்க நமக்கு டேட்ஸ் தரணும். அப்புறம் நாங்க அவங்களுக்கு ரேட்ஸ் தரணும். மாஸ் ஹீரோ நடிக்கும் படங்களின் எல்லை, ஓப்பனிங் வேற. அவங்க படங்களோட முதல் அஞ்சு நாள் கலெக்ஷன், எங்க சின்னப் பட பட்ஜெட் போல பத்து மடங்கு இருக்கும். வெளிப்படையா சொல்லணும்னா, பெரிய பட்ஜெட்ல படம் எடுக்குற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை!''

''சின்ன பட்ஜெட் படங்களுக்குப் பெரிய பப்ளிசிட்டி பண்றீங்க... மார்க்கெட்டிங்லயே ஒரு படத்தை ஓட வெக்கிறது உங்க திட்டமா?''

''எங்க டிராவல்ஸ் நிறுவனத்தோட அடிப்படையே விளம்பரம்தானே? அது இல்லைன்னா பிசினஸே இல்லை. நம்ம தயாரிப்பு எதுவா இருந்தாலும், அதை கச்சிதமா பிராண்ட் பண்றது முக்கியம். அதனால பப்ளிசிட்டியும் இப்போ ஒரு படத்தோட செகண்ட் ஹீரோ கணக்கா ஆகிடுச்சு.

'அட்டகத்தி’ ஒண்ணேகால் கோடியில முடிச்சேன். படத்தை 20 லட்சம் லாபத்துக்கு வித்தேன். இசை வெளியீட்டுக்கு 30 லட்சம், ரிலீஸ் விளம்பரங்களுக்கு மூணு கோடிக்கு மேல் செலவு. 1.52 கோடில முடிச்ச 'பீட்சா’வுக்கு பப்ளிசிட்டி செலவு 2.40 கோடி. 'சூது கவ்வும்’ தயாரிப்புச் செலவு 2.60 கோடி. பப்ளிசிட்டி பட்ஜெட் 2 கோடி. இங்க 50 லட்சத்துலயே ஒரு படம் எடுத்துடலாம். ஆனா, குறைஞ்சது ஒண்ணரைக் கோடிக்கு பப்ளிசிட்டி பண்ணாதான் ரிலீஸ் பண்ண முடியும்; ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க முடியும்!''

''தயாரிப்பு, இயக்கம்னு பல தகவல்கள் சொல்றீங்க... சீக்கிரமே நீங்களும் இயக்குநர் ஆகிடுவீங்க போல..!''

''சிலருக்கு ஒரு விஷயத்தை க்ரியேட் பண்ணத் தெரியும். சிலருக்கு அதைப் பார்த்துட்டு குறை சொல்ல மட்டும்தான் தெரியும். நான் ரெண்டாவது கேட்டகிரி. அதனால எனக்கு இயக்கம் எல்லாம் சரிப்பட்டு வராது!''

- ம.கா.செந்தில்குமார், படம்: உசேன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்