ஷங்கர் என் பேச்சைத்தான் கேட்டார்! | manobala, shankar, vijayakanth, மனோபாலா, ஷங்கர், விஜயகாந்த்

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (11/04/2014)

கடைசி தொடர்பு:11:49 (11/04/2014)

ஷங்கர் என் பேச்சைத்தான் கேட்டார்!

யக்குநராக இருந்து நடிகர் ஆகி, இப்போது 'சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் மனோபாலா. 60 வயதைக் கடந்தாலும், வாலிப வயசோடு தமிழ் சினிமாவை வலம்வருபவரிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை. 

''சினிமாவில் உங்க குச்சி உடம்பைக் குறிவெச்சே பலபேர் கிண்டல் பண்றாங்களே, தட்டிக்கேட்க மாட்டீங்களா?''

''இதுல நான் கேக்கிறதுக்கு என்ன இருக்கு? 'ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டைக் கலாய்க்கிறோமே’னு அவங்களுக்காத் தோணனும். இப்போவெல்லாம் கிண்டல் பண்றதோட, 'வாடா போடா’ன்னும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. என்ன பண்றது? இந்தக் குச்சி உடம்புதானே நமக்கு சான்ஸும் தருது. தவிர, அவங்க என்னைக் கலாய்க்கிறதனால் கிடைக்கிற கைதட்டல் எல்லாமே எனக்குத்தானே!''

''நீங்க ஒரு பிரபலமான டைரக்டர்ங்கிற உண்மையைப் பலபேர் மறந்திருப்பாங்க. திரும்ப ஞாபகப்படுத்துகிற ஐடியா இல்லையா?'

'

''என்கூட இருக்கிறவங்கள்ல ஒருத்தன் 'சார்... உங்களைப் பார்த்து ஒருத்தர் 'டைரக்டர்’னு நினைச்சுட்டாரு’னு சிரிக்கிறான். இன்னொருத்தன், 'நீங்க டைரக்டரா இருந்தீங்களாமே... உண்மையா?’னு ஆச்சரியப்படுறான். அதெல்லாம் அவங்களுடைய அறியாமைதானே தவிர, மறுபடியும் ஒரு படம் இயக்கும் ஐடியா எனக்கு இல்லை. என் ரூட்டு நல்லாப் போயிட்டு இருக்கு. நான் இயக்குன 'சிறகுகள்’ டெலிஃபிலிம் செம ஹிட். அந்த மாதிரி, சினிமாவுக்கும் சீரியலுக்கும் இடையில் இருக்கிற 'டெலிஃபிலிம்’ல இன்னும் நிறைய சாதிக்கணும்னு ஆசைப்படுறேன்.''

'' 'சதுரங்க வேட்டை’ படத்தைத் தயாரிக்க காரணம்?''

''தயாரிப்பாளர் ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை. 'நானும் ஒரு படம் தயாரிச்சேன்’னு இல்லாம, 'இந்தக் கதையைப் படமா பண்ணா நல்லா இருக்குமே?’னு ஆச்சரியப்படுற கதையை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். 'சதுரங்க வேட்டை’ கதையை ஒரே ஒரு தடவைதான் கேட்டேன். அடுத்த செகண்டே படத்தோட டைரக்டர் வினோத்கிட்ட, 'இன்னும் பத்து நாள்ல ஷூட்டிங்’னு சொல்லிட்டேன். இந்த மாதிரி பல வித்தியாசமான கதைகளை, திறமையான இளைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தணும்னு தான், கதவு திறக்கிற மாதிரி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு லோகோ டிசைன் பண்ணியிருக்கேன்.''

''இயக்குநர் பாலா ஷூட்டிங்ல செமத்தியா அடிப்பாராமே? அவர்கிட்ட அடி வாங்கியிருக்கீங்களா?''

''நானும் ஒரு டைரக்டர்தான். ஷூட்டிங்ல யாராவது சொதப்பினா கோபம் வரத்தான் செய்யும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் நேர்த்தியா உழைக்கிற இயக்குநர் பாலா. அதர்வா, ஆர்யா, விஷால்... இவங்கெல்லாம் இப்படி நடிப்பாங்கனு எவனாவது எதிர்பார்த்திருப்பானா? பாலா படத்தில் நடிக்கலைனா, சூர்யா எப்பவோ மூட்டையைக் கட்டியிருப்பார். ஒரு வாத்தியார் தன்னோட மாணவனை அடிக்கிறது நல்லா படிக்கணும்னுதானே? இதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனா, பாலா அடிக்கிறவர் அல்ல!''

''நீங்க இயக்கிய நடிகராக, இப்போதைய அரசியல்வாதியாக... விஜயகாந்த் எப்படி?''

''விஜயகாந்த் நல்ல நடிகர். ஹிட் படங்கள் கொடுத்து, சாதாரண மக்கள்கிட்டேயும் அவரைக் கொண்டுபோய் சேர்த்தவங்களில் நானும் ஒருத்தன். நடிகரா விஜயகாந்த் நல்ல மனிதர், நல்ல பண்பாளர். ஆனா, அவர் ஏன் அரசியலுக்கு வந்தார்னுதான் இப்போ வரைக்கும் புரிய மாட்டேங்குது. கிராமங்கள்ல பலபேர் 'எம்.ஜி.ஆர் இன்னும் உயிரோடதான் இருக்கார்’னு நினைச்சுக்கிட்டு இருக்கிற சமயத்துல, தன்னைத்தானே 'கருப்பு எம்.ஜி.ஆர்’னு சொல்லிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர். சமீபத்துலகூட '2014 பாராளுமன்றத் தேர்தலை’ '2004 சட்டமன்றத் தேர்தல்’ங்கிறார். அதனாலதான் எல்லோருமே கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. சிம்பிளா சொல்லணும்னா, யார்கிட்டயோ வசமா சிக்கியிருக்கார். அவங்க இயக்க, பொம்மையாட்டம் ஆடிக்கிட்டு இருக்கார் விஜயகாந்த்.''

''இப்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கு?''

''நல்ல டிரெண்ட் வந்துச்சு... திடீர்னு கும்பல் கும்பலா ஒரே மாதிரி படத்தைக் கொண்டுவந்து குழப்பிட்டாங்க. பலபேர் சிந்தனையை மட்டும் நம்பி, செயலாக்கத்துல கோட்டை விட்டுடுறாங்க. ஷங்கர் படம் எடுக்கும்போது 'இதை செயல்படுத்திடலாமா?’னு நாலு பேர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கே போவார். ஒரு முக்கியமான விஷயம் சொல்லவா? ஷங்கர்கிட்டேயும் 'உதிரிப்பூக்கள்’ மாதிரி கவித்துவமான கதைகள் இருந்துச்சு. முதல் முதலா அவர் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு, என்னிடமும் பாரதிராஜாவிடமும் '' 'உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், 'முதல்வன்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட், எதை பண்ணா நல்லா இருக்கும்?''னு கேட்டார். பாரதிராஜா 'கவித்துவ’ ஸ்கிரிப்ட்டைக் கை காட்ட, நான்தான் 'இது உங்களால செயல்படுத்த முடியாது. ஏன்னா ஆடியன்ஸ் உங்ககிட்ட 'முதல்வன்’ பிராண்டைத்தான் எதிர்பார்ப்பாங்க’னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் 'கவித்துவமான’ ஸ்கிரிப்ட் பக்கம் திரும்பவே இல்லை. இதுதான் சினிமா. சிந்திக்கிறது பெரிய விஷயம் இல்லை, அதை செயல்படுத்த முடியுமானு யோசிக்கணும்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்