“நயன்தாராவுக்கு நன்றி!” | romeo juliet, hansika, jayam ravi, ரோமியோ ஜூலியட், ஹன்சிகா, ஜெயம் ரவி,

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (17/04/2014)

கடைசி தொடர்பு:12:52 (17/04/2014)

“நயன்தாராவுக்கு நன்றி!”

''இப்ப தமிழ்ல வருஷத்துக்கு கிட்டத்தட்ட 300 படங்கள் வருது. அதில் பாதிக்கும் மேலே காதல் கதைகள். ஆனா, அத்தனை டைரக்டர்களும் எப்படி இந்தத் தலைப்பை மிஸ் பண்ணாங்கனு தெரியலை. என் படத்துக்கு அது சிக்கணும்னு இருந்திருக்கு. இதுவே எனக்குக் கிடைச்ச முதல் பாசிட்டிவ் சிக்னல்!'' - முக மலர்ச்சியோடு பேசுகிறார் இயக்குநர் லக்ஷ்மண். எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநர் 'ரோமியோ - ஜூலியட்’ எனத் தலைப்பு பிடித்து ஜெயம் ரவி - ஹன்சிகா  கூட்டணியுடன் அறிமுகமாகிறார்.

'' 'ரோமியோ-ஜூலியட்’னு தலைப்பைக் கேட்டதும், கவிதையா ஒரு காதல் கதையா இருக்கும்னு நினைச்சா அது தப்பு. தலைப்புக்கு அப்படியே நேர் எதிர் கதை. 1947 காலத்து உணர்வுபூர்வமான காதலைத் தேடிட்டு இருக்கும் ஹீரோ, 2014-லேயே 2025 வருஷ டிரெண்டுக்கு பார்ட்னர் தேடும் ஹீரோயின்... இப்படி எதிரெதிர் துருவங்கள் காதலிக்கிறாங்க. அந்தக் காதல் எப்படி இருக்கும்..? என்ன ஆகும்..? இதான் கதை!''

''கதை கேட்கப் பிரமாதமா இருந்தாலும்,  சமயங்கள்ல அந்த சுவாரஸ்யம் சினிமாவில் மிஸ் ஆகிடுதே!''

''அது உண்மைதான். சின்னச் சின்னப் பூக்களை வெச்சு அழகா மாலை தொடுக்கிற மாதிரிதான் சினிமாவும். ஆனா, மாலை தொடுக்கிறது ஈஸி; சினிமா பண்றது ரொம்பக் கஷ்டம். திரைக்கதை ட்விஸ்ட், சினிமா சுவாரஸ்யங்கள், பாட்டு, சண்டைனு ஒவ்வொரு விஷயத்தையும் கதையோட பின்னிப்பின்னி புது ட்ரீட்மென்ட்ல கொடுக்கணும். அதே சமயம் சொல்ற கதைல இருந்து வெளியே போயிடவும் கூடாது. அதுதான் சினிமா மேக்கிங்ல இருக்கிற சவால்.

ரவி சார்கிட்ட நான் கதையைச் சொன்னதுமே, 'என் மத்த புராஜெக்ட்களைத் தள்ளிவெச்சுடுறேன். இதை உடனே ஆரம்பிக்கலாம். நீங்க ரெடியா?’னு ஆர்வமாகிட்டார். ஹன்சிகாவும் கதை கேட்டதுமே, டேட்ஸ் கொடுத்தாங்க. காரணம், ரோமியோவுக்குச் சமமான கேரக்டர் ஜூலியட்டுக்கு.''

''அப்படி என்ன வித்தியாசம் வெச்சிருக்கீங்க கேரக்டர்ல?''

''ரவி ஜிம் கோச். சிக்ஸ் பேக் ஸ்பெஷலிஸ்ட். சிக்ஸ்-பேக் வைக்க ஆசைப்படும் சினிமா ஹீரோக்களும் இவரைத்தான் தேடுவாங்க.  ஆனா, சாருக்கு டி.ஆர்-தான் ரோல்மாடல். அவரோட தீவிர ரசிகர்... வெறியர். 'என் பையன் சிம்பு படம் ரிலீஸ் ஆகும் அதே நாள்ல, என் படத்தை ரிலீஸ் பண்ணுவேன்’னு அவர் காட்டுற கெத்து ப்ளஸ் தன்னம்பிக்கை நம்ம ஹீரோவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஹன்சிகாவுக்கு ஏர்ஹோஸ்டஸ் கேரக்டர். ரொம்ப ஃப்ரீக்கியான பொண்ணு. வாழ்க்கையை அந்தந்த நிமிஷம் வாழ விரும்பும் பொண்ணு.

இவங்க ரெண்டு பேரும் போடுற ஆங்ரி டிஸ்கோவில் அவ்வளவு காமெடி இருக்கும். இவங்களுக்கு இடையில் செம காமெடியான ஒரு கேரக்டர் வருது. 'ஷாருக்கானுக்கும் எனக்கும் ஒரே வயசுதான். வித்தியாசமான கேரக்டர்கள் மாத்தி மாத்தி நடிச்சப்ப உருவான தொப்பை பெர்மனென்ட்டா தங்கிடுச்சு’னு சொல்லிட்டுத் திரியுற கேரக்டர். ஒரு கட்டத்துல, அவரும் சிக்ஸ்-பேக் டிரை பண்ணுவார். அந்த போர்ஷன் ரணகளமா இருக்கும்!''  

''எவ்வளவு பில்ட்-அப் கொடுத்தாலும் இது இன்னுமொரு காதல் கதைதானே?''

''அப்படி நினைச்சிருந்தா, இந்தப் படத்துல நடிக்க நயன்தாரா தன் சம்பளத்தை 50 சதவிகிதத்துக்கும் மேலே குறைக்க முன்வருவாங்களா?'' என்று எதிர் கேள்வி கேட்கிறார்.

''என்ன சொல்றீங்க?''

''ரவி சாரும் நயன்தாராவும் இப்ப ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அந்தப் பட ஷூட்டிங் பிரேக்ல ரவி இந்தக் கதையை நயன்கிட்ட சொல்லியிருக்கார். அவங்களுக்கு கதை ரொம்பப் பிடிச்சுப்போய், 'நானே நடிக்கிறேன்’னு சொல்லியிருக்காங்க. அடுத்தடுத்த படங்கள்ல ரவியும் நயன்தாராவும் ஜோடியா நடிச்சா ரிசப்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டே இருந்தோம். ஆனா, சம்பளம், கால்ஷீட்னு யோசிக்கிறோம்னு நினைச்சுட்டு, 'இந்தக் கேரக்டர் எனக்காகவே ஃப்ரேம் பண்ண மாதிரி இருக்கு. என் சம்பளத்தை எவ்வளவு வேணும்னாலும் குறைச்சுக்கிறேன்’னு தடாலடியா இறங்கி வந்துட்டாங்க. அந்தளவுக்கு அந்த கேரக்டர் அவங்களை இம்ப்ரெஸ் பண்ணிருச்சு. ஆனா, வித்தியாசமான காம்பினேஷன் வேணும்னு ஹன்சிகாவை ஃபிக்ஸ் பண்ணோம். எங்க சூழ்நிலை புரிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி. நயன்தாராவை ஈர்த்த கதை, நிச்சயம் எல்லாரையும் ஈர்க்கும்!''  

''உங்க குரு எஸ்.ஜே.சூர்யா என்ன சொன்னார்?''

''எனக்கு சினிமாதான் கடவுள். அதுக்கு அடுத்தபடியா எஸ்.ஜே.சூர்யா சார்தான் எல்லாமே! அவர்கிட்ட பேசும்போது நாம ஏதாவது சொல்லத் தயங்குறதை நம்ம உடல்மொழியில் இருந்தே கேட்ச் பண்ணிடுவார். 'உன் ரியாக்ஷனுக்கும் நீ பேசுற வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லையே. என்ன ஏதாவது பிரச்னையா? சீக்கிரம் வீட்டுக்குப் போகணுமா? மாசம் பிறந்துடுச்சே, வீட்டு வாடகையெல்லாம் கொடுத்துட்டியா?’னு நம்ம  உள்மனசை யூகிச்சிடுவார். அவருக்கு செயற்கையா இருக்கிறது, பேசுறது பிடிக்காது. அதேபோல அவருக்கு எல்லாமே சினிமாதான். திடீர்னு விடியற்காலை ரெண்டு மூணு மணிக்கு போன் பண்ணி, 'இப்படி சீன் தோணுச்சு’னு சொல்லி டிஸ்கஸ் பண்ணுவார். 'நாம இவனுக்கு கத்துத்தர்றோம்’ங்கிற உணர்வு இல்லாமல் தனக்குத் தெரிஞ்ச விஷயங்களை இவனும் தெரிஞ்சுக்கணும்னு ஃப்ரெண்ட்லியா டீச் பண்ணுவார். இந்தப் படத்துல அவரோட பாதிப்பு இருக்கும். அவர் தன் ஸ்பாட்ல 'ஆக்ஷன்’ சொல்றதைக்கூட ரொமான்ஸ், சென்டிமென்ட், பேதாஸ்னு ஒவ்வொரு மூடுக்கும் தகுந்த மாதிரி சொல்வார். இதை அப்படியே என் படத்துல ரவியோட கேரக்டரைச் சொல்றதுக்குப் பயன்படுத்தி இருக்கேன். சிம்பிளா சொல்லணும்னா, அவர் எனக்கு கடவுளை அறிமுகப்படுத்திய கடவுள்!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்