“கோச்சடையான்” வரும்போது ‘ஆனந்தத் தொல்லை’யும் வரும்!

மின்மினிப் பளபளப்பு காட்டி, கடைசியில் மின்மினிப் பூச்சி மாதிரி ஆகிவிட்டார் பவர் ஸ்டார். 'மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை’ கதையாக பவர்ஸ்டாரை ஒரு சில நிகழ்ச்சிகளில் அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி செங்கல்பட்டு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி (விஜயகாந்த் காலேஜ்தாங்கோ!) ஹாஸ்டல் டேவுக்காக வந்திருந்தவரிடம் பேசினேன்.

'' 'ஆனந்தத் தொல்லை’ ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?''

''படம் ரெடியா இருக்கு. கூடிய சீக்கிரமே வந்துடும். என்னோட குரு சூப்பர் ஸ்டார். அவரோட 'கோச்சடையான்’  ரிலீஸ் தேதியில் நான் படத்தை வெளியிட மாட்டேன். ஆனா, 'கோச்சடையான்’ ரிலீஸ் ஆகிற அதே மாசத்துலதான் படத்தை ரிலீஸ் பண்ணுவேன்.''

''நீங்களும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறதா பில்டப் கொடுக்கிறீங்களே, இந்த மாஸை ஏன் தேர்தலில் பயன்படுத்தலை?''

''யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று என் ரசிகர்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம். இன்னும் என்னை ஒரு நடிகனாகத்தான் என்னோட ரசிகர்கள் பார்க்கிறார்கள். என்னோட ரசிகர்கள் அவரவர் விருப்பம்போல் அரசியலில் ஈடுபடலாம்.''

''சென்னை மத்திய சிறை, டெல்லி திகார் சிறை அனுபவம் எப்படி இருந்தது?''

''எனக்கு ரெண்டுமே ஆசிரமம் மாதிரிதான் இருந்தது. சிறை வார்டன், ஜெயிலர் எல்லாம் நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. ஜெயில்ல இருக்கிற கைதிகளும் நண்பர்களைப்போல் பழகுறாங்க. ஒருமுறை தப்பு செய்தவங்க உள்ளே போனா, திருந்துறதுக்கு இது ஒரு வாய்ப்பு. ஜெயில்ல கைதிங்கனா பயங்கரமா இருப்பாங்கனு நெனச்சேன். ஆனா, அப்படி இல்லை.''

''நீங்க அரசியலுக்கு வருவீங்களா?''

''கண்டிப்பா வருவேன். நான் சினிமாவுக்கு வருவேன்னு நெனச்சுப் பார்க்கலை. ஆனால், இன்னைக்கு ஒரு பெரிய ஸ்டாரா வளர்ந்திருக்கேன். கடவுளோட அருள் இருந்தா, அரசியலுக்கு வருவது உறுதி.''

''ஷங்கரோட 'ஐ’ படத்தில் நடிக்கிறீங்க. படம் எப்படி இருக்கு?''

''படத்தைப் பற்றி வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் சொல்லிட்டார். அதனால் அந்தப் படத்தைப் பற்றி நான் இப்போ எதுவும் சொல்ல முடியாது. சந்தானத்துடன் சேர்ந்து காமெடி பண்ணியிருக்கேன். அதுபோல் 'பரதேசி’ படத்தில் நடிக்கிறதுக்கு பாலா என்னைக் கூப்பிட்டார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படத்துல நடிச்சிட்டு இருந்ததால், அவர் படத்துல நடிக்க முடியலை.''

''இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு உங்க ரசிகர்களுக்கு நீங்க சொல்ல நினைக்கிறீங்க?''

''நாட்டை ஆளக்கூடிய இரண்டு தலைவர்கள் போட்டியில் இருக்கிறாங்க. நல்ல தலைவர்கள் யார்னு அவங்களுக்குத் தெரியும். நான் சொல்லணும்னு அவசியம் இல்லை. இதுல யார் ஜெயிச்சாலும் அவங்க நல்ல ஆட்சி கொடுக்கணும்.''

''தொடர்ந்து மோசடி வழக்குகள் உங்கள் மீது பாய்கின்றன. உண்மையில் நீங்க நல்லவரா, கெட்டவரா?''

''நான் நல்லவன். என்னோட வளர்ச்சி பிடிக்காம என்னை வேணும்னே பழிவாங்குறாங்க. அஞ்சு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவத்தை எல்லாம் இப்போ எடுத்துட்டு வர்றாங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா ஒரு பிரின்டிங் பிரஸ்ல இருக்கிறவர், இரண்டு லட்ச ரூபாய்க்கு பிரின்ட் அடிச்சார். ஆனா 20 லட்சம்னு சொல்றார். நான் உள்ளே இருக்கிற நேரம் பார்த்து என்னோட ஹாஸ்பிட்டலை எல்லோரும் சூறையாடிட்டாங்க. அதோட மதிப்பு மட்டும் எட்டு கோடி ரூபாய். என்னோட இருந்தவங்களே என்னை ஏமாத்திட்டாங்க. வழக்கறிஞர் ஒருவர் தினமும் பத்து ரவுடிகளை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து மிரட்டுறார்.''

''சிறை வாழ்க்கைக்குப் பிறகு, சினிமா வாழ்க்கை எப்படி இருக்கு?''

'' 'நாலு பொண்ணு நாலு பசங்க’, 'சுட்ட பழம் சுடாத பழம்’, 'ஐ’ னு மூணு படங்கள் முடிச்சிட்டேன். இன்னும் அஞ்சு படம் பேசிட்டு இருக்காங்க. நான் என்னென்ன படங்கள்ல நடிக்கப்போறேன்னு விவரமா சொன்னா, என்னோட வளர்ச்சியைப் பிடிக்காதவங்க அவங்க பப்ளிசிட்டிக்காக அந்தப் படங்களுக்கு ஸ்டே வாங்கிடுவாங்க.''

- பா.ஜெயவேல், படங்கள் : க.பாலாஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!