டைரக்டர்ஸ் இங்கே ஹீரோ கிடையாது!

'காதல் மன்னன்’ படத்தில் தொடங்கி, 'அசல்’ வரை... கமர்ஷியலையே வெரைட்டியாகக் கொடுத்தவர் இயக்குநர் சரண். சிறிய இடைவெளிக்குப் பிறகு 'ஆயிரத்தில் இருவர்’ இயக்கிக்கொண்டிருக்கிறார்.

' 'அசல்’ படத்துக்கு அப்புறம் ஏன் இந்த இடைவெளி?'

''இந்த இடைவெளியில் ஒரு இந்திப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். விஜய் நடிச்ச 'நண்பன்’ படத்தை நான்தான் டைரக்ட் பண்றதா இருந்தது. அப்புறம் 'பெராரி கி சவாரி’ இந்திப் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. சில காரணங்களால் முடியாமப்போச்சு. அவ்வளவுதான். மத்தபடி வருஷத்துக்கு ஒரு படமோ, இரண்டு வருஷத்துக்கு ஒரு படமோ என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது என் இருப்பு தெரிஞ்சா போதும்னு நினைப்பேனே தவிர, 'ஏதாவது ஒரு படம் பண்ணுவோம்’னு என்னைக்குமே நான் இறங்க மாட்டேன்.''

'இருந்தாலும், இந்த இடைவெளி உங்களிடம் இருக்கிற எதிர்பார்ப்பைக் குறைக்கவும் வாய்ப்பு இருக்கே?'

''இது எல்லாப் படைப்பாளிகளும் எதிர்கொள்கிற விஷயம்தான். என்னோட 'வட்டாரம்’ படம் சரியா ஓடலை. அதுக்குக் காரணம், முக்கியமான படங்கள் திடீர்னு வந்ததால் தியேட்டர் கிடைக்காததுதானே தவிர, அது மோசமான படம்னு இல்லை. இன்னைக்கு வரைக்கும் அந்தப் படத்துக்கான ஆடியன்ஸ் நிறையப் பேர் இருக்காங்க. 'மோதி விளையாடு’ படமும் என்னோட பரிசோதனை முயற்சிதான். இப்படி என்னுடைய படங்கள் அந்தந்தச் சமயத்தில், சூழல்ல ஜெயிக்காமப் போயிருக்கலாம். ஆனா, அதுக்கான ரசிகர்கள் என்னைக்குமே இருப்பாங்க. மக்கள் இயக்குநர்களோட பெயருக்காகப் படம் பார்க்கிறவங்க கிடையாது.''

' அஜித், விக்ரம், கமல்னு பெரிய நடிகர்களை இயக்குனீங்க. இப்ப அப்படியே ரிவர்ஸ்ல வர்றீங்களே?''

''ரஜினி, கமல், அஜித், விஜய்... இவங்கெல்லாம் அவங்க படத்தோட இயக்குநரை அவங்களே தீர்மானிக்கிற அளவுக்குப் பெரிய லெவல்ல இருக்காங்க. நான் 'காதல் மன்னன்’, 'ஜெமினி’ பண்ணும்போது, அஜித்தும் விக்ரமும் வளர்ந்து வர்ற நடிகர்களா இருந்தாங்க. அதைத்தான் திரும்பவும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா, இப்போதைக்கு என்னுடைய கதைகளுக்கு இவங்கதான் தேவைப்படுறாங்க. நானும் திருப்தியாப் படம் பண்ண முடியுது. ஆரம்ப காலத்து அஜித், விக்ரமை வெச்சு நான் ஈஸியாப் பண்ணின விஷயங்களை, இப்போ பண்ண முடியாது இல்லையா? அதனால, பெரிய ஹீரோக்களோட இணையுறப்போ கண்டிப்பா புது காம்பினேஷனா இருக்கும்.''

'அஜித்துக்கு 'தல’, விக்ரமுக்கு 'ஓ போடு’னு ஆரம்பிச்சு விட்டது நீங்கதானே?'

'' 'தல’ங்கிறதை 'தீனா’ படத்தோட டயலாக்லேயே பயன்படுத்தி இருப்பாங்க. அதை நான் கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணிவிட்டேன். 'அட்காசம்’ல அதை 'கீ வேர்டா’ கம்போஸ் பண்ணா நல்லா இருக்குமாங்கிற டவுட்டோட கம்போஸ் பண்ணினோம். அது அஜித்துக்கே பிராண்ட் நேம் ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. 'ஜெமினி’யில 'ஓ’ போட்டதும் யதார்த்தமாதான்.''

'வினயை வெச்சு ஆரம்பிச்ச 'செந்தட்டிக்காளை செவத்தகாளை’ படத்தைதான் இப்போ 'ஆயிரத்தில் இருவர்’ங்கிற பெயர்ல இயக்குறீங்களா?'

'செந்தட்டிக்காளை செவத்தகாளை’ படத்தை டிராப் பண்ணிட்டேன். இது முழுக்க முழுக்க வேற கதை. இந்தப் படத்துல நல்லவங்கனு யாருமே கிடையாது. சுருக்கமா சொல்லணும்னா, 'இந்தச் சமூகத்துல ஆண்களுக்கு நிகரா பெண்களும் கிரிமினல்ஸ்தான். வினய் டபுள் ரோல். ஆனா, இதுவரை நீங்க பார்த்த எந்த டபுள் ஆக்டிங் படங்களோட கிளிஷேவும் இருக்காது!'

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!