என் குதிரை ஓடலை! | நமோ நாராயணன், கவுண்டமணி, வடிவேலு, namo narayanan, goundamani, vadivelu

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (19/04/2014)

கடைசி தொடர்பு:14:56 (19/04/2014)

என் குதிரை ஓடலை!

வுண்டமணி, வடிவேலு என இரண்டு காமெடி ராஜாக்களுடன் நடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் 'நமோ நாராயணன்’. 'நாடோடிகள்’ ஃப்ளெக்ஸ் புகழ் நமோ நாராயணன்தான். ''ஆமாங்க, 'வாய்மை’ படத்தில் கவுண்டமணி அண்ணன், 'தெனாலிராமன்’ படத்தில் வடிவேலு சார் ரெண்டுபேர்கூடவும் நடிச்சுப்புட்டோம்ல'' என்று சிரிக்கிறார்.

''அடிப்படையில் நான் சாஃப்ட்வேர் ஆளு. மதுரைதான் பூர்வீகம். அமெரிக்காவில் வேலை பார்த்தேன். தனியே ஒரு கம்பெனி துவங்கும் யோசனையில் இருந்தப்போ சமுத்திரக்கனியைச் சந்தித்தேன். அவர் எனக்கு 25 வருஷ நண்பர். 'நாடோடிகள்’ படத்துக்கு எக்ஸிகியூட்டிவ் புரொடியூசரா வேலை பார்க்கக் கூப்பிட்டார். நடிக்கிற ஆசையெல்லாம் எனக்கு அப்போ இல்லை. யார்கிட்டவோ கைகட்டி நிற்கும் வேலையிலிருந்து வெளியே வந்தாப் போதும்னு நினைச்சவன், கிளம்பி வந்தேன். சமுத்திரக்கனி, சசிக்குமார், கேமராமேன் கதிர் முணு பேரும் என்னை நடிக்கவைக்கணும்னு பிளான் போட்டிருக்காங்க. அது எனக்குத் தெரியாது. அந்தப் படத்தில் வரும் ஐட்டம் சாங்ல ரெண்டு ஸ்டெப் போடும் கேரக்டர்னு மட்டும் சொன்னாங்க. அதை என் மனைவியிடம் சொன்னதும் அவ சமுத்திரக்கனிகிட்ட போன் பண்ணி, 'என் வீட்டுக்காரருக்குத் தனி கேரக்டர் கொடுங்க’னு உரிமையாக் கேட்டுட்டாங்க. கனி, சசி, கதிர் முணு பேரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுட்டுப் போவாங்க. நானும் அது ரொம்ப சீரியஸான கேரக்டர்னுதான் நெனைச்சுப் பண்ணினேன். படம் ரெடியான பின்னாடி பார்த்துட்டு எனக்கே சிரிப்பு வந்திடுச்சு.

எனக்கு எங்க தாத்தா நமோ நாராயணன் பெயரையே எங்க அப்பா எனக்கு வெச்சார். 'வாழ்ந்தா ஊரறிய வாழணும்டா’னு சொல்லிட்டே இருப்பார். 'நாடோடிகள்’ படத்தில் டைட்டிலில் எனது பேரைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.''

''வடிவேலுவுடன் 'தெனாலிராமன்’ படத்தில் நடித்தது எப்படி இருந்தது?''

''செம காமெடி. எங்க மண்ணின் மைந்தன் வடிவேலு அண்ணன்கூட நடிக்கக் கிடைச்ச வாய்ப்பு, ரொம்பப் பெரிய விஷயம். எனக்கு இந்தப் படத்தில் அமைச்சர் கேரக்டர். வடிவேலு அண்ணன் எப்பவுமே தன்னோட நடிக்கிற நடிகர்களோட பெர்ஃபார்மென்ஸையும் மெருகேத்துவார். ஒரு இயக்குநருக்கு இருக்கும் அனைத்துத் திறமைகளும் அவருக்கு இருக்கு. ஷூட்டிங்கில் குதிரையில் போற சீன், நானே வாழ்க்கையில் முதல் முறையா குதிரையில் ஏறினேன். திடீர்னு ஒரு குதிரை கனைக்கவும் நான் உட்கார்ந்திருந்த குதிரை மட்டும் மிரண்டுபோய் பிச்சுக்கிட்டு ஓடுது. அடக்குறதுக்குள்ள படாதபாடாகிப் போச்சு. அடுத்து பாண்டிச்சேரியில் ஷூட்டிங். இதே மாதிரி குதிரையில் போற சீன் இருக்குனு சொன்னாங்க. நான் ஒரு வாரம் குதிரை சவாரி டிரெய்னிங்கெல்லாம் எடுத்து ரெடியாப் போயிருந்தேன். அங்கே போய்ப் பாத்தா, என் குதிரை மட்டும் ஓடலை!''  

- செந்தில்குமார், படம் : ப.சரவணகுமார்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்