கிளாமராய் நடிப்பதும் பரிசோதனை முயற்சிதான்! | இனியா, ineya, iniya

வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (25/04/2014)

கடைசி தொடர்பு:11:34 (25/04/2014)

கிளாமராய் நடிப்பதும் பரிசோதனை முயற்சிதான்!

றிமுகமானபோது அடக்கி வாசித்த இனியா, சமீப காலமாகக் கவர்ச்சி  கேரக்டர்களில் கிறங்கடிக்கிறார். கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்தவரிடம், இரவு 11 மணிக்கு அடித்த 'மிட்நைட்’ அரட்டை.

 

''ஹீரோயினா நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ முழுநேர கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டீங்களே?''

'' 'வாகை சூட வா’, 'மௌனகுரு’, 'அம்மாவின் கைபேசி’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினா நடிக்கலையே தவிர, 'வாகை சூட வா’ படத்தில் இருந்து 'நான் சிகப்பு மனிதன்’ வரை... நான் நடிச்ச எல்லாப் படங்களுமே நல்ல படங்கள். பணத்துக்காக சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டிருந்தா, இந்த மாதிரி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சிருக்க மாட்டேன். 'இனியா நடிப்பு செமையா இருந்துச்சு’னு ஆடியன்ஸ் சொல்லணும். அதனாலதான் என் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதைகளாத் தேடுறேன். அதுக்காக கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா மட்டுமே நடிப்பேன்னு நினைச்சுடாதீங்க. இப்போ தமிழ்ல மூணு படங்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. எல்லாமே எனக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். ஸோ, கண்டிப்பா இந்த ரவுண்ட் சிங்கிள் ஹீரோயின்தான்.''

''முன்பெல்லாம் கவர்ச்சிப் படங்கள்னு தனியா வந்தது. இப்போ கமர்ஷியல் சினிமாவிலேயே முத்தக் காட்சி, படுக்கையறைக் காட்சினு வெச்சுடுறாங்க. ஒரு நடிகையா இதை எப்படிப் பார்க்குறீங்க?''

''காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், கிளாமர்னு எல்லா விஷயங்களும் கலந்ததுதான் கமர்ஷியல் சினிமா. இதெல்லாம் இருந்தால்தான் படம் பார்க்கிற ஆடியன்ஸ¨க்கு என்டர்டெயின்மென்ட்டா இருக்கும். தவிர, எல்லாரோட வாழ்க்கையிலேயும் கிளாமர், ரொமான்ஸ்  இருக்கத்தானே செய்யுது?''

''ஆனா, கிளாமருக்கு மாறினதுக்கு அப்புறம்தான் உங்களுக்கு வாய்ப்புகள் குறைஞ்ச மாதிரி தெரியுதே?''

''கிளாமருக்கு மாறினதுக்காக நான் இப்போவரை ஃபீல் பண்ணினதே கிடையாது. வெரைட்டியான கேரக்டர்கள்ல நடிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. முதல் படத்தில் கிராமத்துப் பொண்ணா நடிச்ச எனக்கு, கிளாமரா நடிக்கிறதும் ஒரு பரிசோதனை முயற்சியாத்தான் தெரியுது. ஆனா, என்னுடைய வாய்ப்புகள் குறைஞ்சதுனு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. இப்பவும் தமிழ், மலையாளம் தவிர, தெலுங்குலேயும் எனக்கு வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு.''

''உங்க பெயரைச் சொல்லி நிறையப் பேர் ஏமாத்திட்டு இருக்கிறதா கேள்விப்பட்டோம்?''

''ஆமா, என்னுடைய மேனேஜர்னு சொல்லிட்டுப் பல பேர் பல சினிமா கம்பெனியில் அப்ரோச் பண்ணியிருக்காங்க. இயக்குநர் ஒருத்தர் காமெடியா 'எத்தனை மேனேஜர் வெச்சிருக்கீங்க இனியா?’னு கேட்டப்போதான் எனக்கே விஷயம் தெரிஞ்சது. உண்மையைச் சொல்லணும்னா, இதுவரை எனக்கு மேனேஜர்னு யாருமே கிடையாது. இந்த பிரச்சனைகளுக்குப் பிறகுதான் ஒருத்தரை மேனேஜரா நியமிச்சிருக்கேன்.''

 

''உங்க படத்தைப் பார்த்துட்டு மெசேஜ் அனுப்புற, போன் பண்ணி வாழ்த்து சொல்ற நண்பர்கள் யார் யார்?''

''விமல் முதல் விஷால் வரை... எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான். என்னுடைய படங்களைப் பார்த்து மட்டுமில்ல, அவங்களுடைய படங்களைப் பத்தியும், லேட்டஸ்ட்டா ரிலீஸ் ஆன படங்களைப் பத்தியும் நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். தவிர, என்னுடைய கிளாஸ்மேட்ஸ் எல்லாருமே ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு மெசேஜ் பண்ணிடுவாங்க.''

''ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல உங்க ஹாபி என்ன?''

''நான் பி.பி.ஏ., செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்கேன். ஷூட்டிங் இல்லாத சமயத்துல அதுக்கான கிளாஸ், டியூஷன்னு படிக்க ஆரம்பிச்சிடுவேன். வீட்ல தனியா இருக்கிறப்போ இளையராஜா சாரோட பாடல்களைக் கேட்பேன். அவரோட 'ஊருசனம் தூங்கிடுச்சு...’ பாட்டு என்னோட ஆல்டைம் ஃபேவரைட்.''

''கல்யாணம் எப்போ?''

''லேட்டஸ்ட்டா என்னை 'லவ் பண்றதா’ எங்க அப்பாகிட்ட போய் சொல்லி, பொண்ணு கேட்டிருக்கார் ஒருத்தர். எனக்கும் லவ் அண்ட் அரேஞ்டு மேரேஜ் பண்ணிக்கணும்னுதான் ஆசை. ஆனா, அதுக்கான டைம் வரட்டும்... அதுவரை லவ் பண்றதில் ஆர்வம் இல்லை!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்