வடிவேலு தான் சிறந்த கலைஞன்! | saleem kumar, vadivelu, சலீம் குமார், வடிவேலு

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (25/04/2014)

கடைசி தொடர்பு:11:36 (25/04/2014)

வடிவேலு தான் சிறந்த கலைஞன்!

லீம் குமார், மலையாள சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகர். குணச்சித்திர வேடங்களில் கலக்கி எடுக்கும் நடிப்பு ராட்சஷன். 2010-ல் 'ஆதமின்டே மகன் அபு’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றவர். சமீபத்தில் 'நெடுஞ்சாலை’ படத்தில் மாட்டு சேகர் கேரக்டரில் காமெடி கதகளி ஆடி தமிழ் ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

 ''தமிழ் சினிமா மீது ஈர்ப்பு உண்டு. தேசிய விருது பெற்ற சமயம் சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தேன். என்னைச் சந்தித்த டைரக்டர் கிருஷ்ணா கதையைச் சொல்லி நீங்கள் அந்த கேரக்டரில் நடித்தால் நல்லா இருக்கும்னு சொன்னார். நடிக்க அழைத்ததே வெகுமதியாக நினைத்தேன். ஆனால் சம்பளம் வரை பக்காவாக அந்த மீட்டிங்கிலேயே அவர் பேசியது எனக்கு ஆச்சர்யம், இரட்டிப்பு சந்தோஷம். உடனே ஷூட்டிங்குக்கு வந்துவிட்டேன்.''

''எப்படி 'ஆதாமின்டே மகன் அபு’ படத்தில் மரியாதையான பாத்திரத்திலும் நடிக்கிறீர்கள். 'நெடுஞ்சாலை’ போன்ற இறங்கி அடிக்கும் காமெடியிலும் நடிக்கிறீர்கள்?''

''சாரே! நடிகன் என்பவன் நட என்றால் நடக்கணும். அனுபவங்களை சேகரிப்பவன்தான் நல்ல கலைஞனாக இருக்க முடியும். 'நெடுஞ்சாலை’ படம் எனக்கு அப்படி ஓர் அனுபவம். டைரக்டர் உருவாக்கிய சட்டைக்குள் என்னைப் பொருத்திப் பார்க்கிற அனுபவம் சூப்பர் சாரே. படத்தை சென்னையில் பார்த்தபோது நான் பேசும் சீன்களில் அதிர்ந்து சிரிக்கிறார்கள். சந்தோஷம். பரம சந்தோஷம். என்னை ஒரு கட்டுக்குள் அடக்கி இப்படித்தான் நடிப்பேன்னு சொன்னால் நான் காணாமப் போயிடுவேன்.''

''மோகன்லால்-மம்முட்டியுடன் நட்பு பற்றி சொல்லுங்களேன்...''

''உண்மையைச் சொல்லணும்னா, ஆழமான நட்பெல்லாம் இல்லை. நாங்கள் கலைஞர்கள். அதைத் தாண்டி பெரிதாய் நட்பு வட்டம் எங்களுக்குள் இல்லை.''

''அரசியலில் தீவிரமாக இருந்தீர்களே?''

'' 'ராஷ்ட்ரம் உண்டங்கில் ராஷ்ட்ரியம்’னு கேரளாவில் சொல்வோம். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கணும். சும்மா அந்த நேரத்துல உணர்ச்சிவசப்பட்டு ஓர் ஓட்டினை யாருக்கோ குத்தணுமேனு குத்தக் கூடாது. இப்போதும் எனக்கான அரசியலில் தீவிரமாக இருக்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாகரன் மீது பற்றுள்ளவன். அதனால் 'யு.டி.எஃப்’பில் உறுப்பினராக இருந்தேன். இப்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறேன்.''

''தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் பார்க்கிறீர்கள்?''

''ஒரு வித்தியாசமும் இல்லை. அப்படியேதான் இரண்டும் இருக்கிறது. உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள்தான், இப்போது கேரளாவில் இளைஞர்கள் மட்டுமே சினிமா இயக்குவதான தோற்றத்தோடு எழுதுகிறார்கள். நல்ல சினிமாக்கள் கெட்ட சினிமாக்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. இன்று ஒரே வசதி. யாரானாலும் நடிக்கலாம் என்பதுதான்''

''உங்களுக்குப் பிடித்த தமிழ் காமெடி நடிகர் யார்?''

''ஹைய்யோ... சிக்கலான கேள்வியாச்சே. நிறையப் பேர் இருக்காங்களே... சரி சொல்கிறேன். எனக்கு உடல்மொழியில் ரொம்பப் பிடிக்கும் அவரை. அவர் நடித்த படங்களை காமெடி சேனல்களில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். அவரிடம் நிறைய ஒரிஜினாலிட்டி இருக்கிறது. நம்ம வடிவேலுதான்!''

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close