அறிமுக இயக்குநர்கள் தான் பலம்!

மீபத்தில்தான் திருமணம் முடிந்திருக்கிறது. அதோடு 'வானவராயன் வல்லவராயன்’, 'யாமிருக்க பயமே’, 'விழித்திரு’ என அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ் ரேஸில் இருப்பதால், 'அன்லிமிட்டட் ஹாப்பி’யாய் நடிகர் கிருஷ்ணா!

 ''நீங்க ஹீரோவா அறிமுகமானப்போ இருந்த வேகம், இப்போ கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கே?''

''எதையுமே நான் பிளான் பண்றது இல்லை. முதல் இரண்டு படங்கள் சரியாப் போகாததால், 'கழுகு’ கமிட் பண்றப்போ கவனமா இருந்தேன். அந்தப் படம் ஹிட் ஆனதும், இன்னும் கவனம் தேவைப்படுது. நமக்குப் பிடிக்கிற கதை ஆடியன்ஸுக்குப் பிடிக்குமானு தீர்மானிக்கிறதுக்குதான் அதிக நேரம் எடுத்துக்கிறேன். கதை சொல்ல வர்ற இயக்குநர்கள்கிட்ட 'இங்கே சாங் வைங்க, அங்கே ஃபைட் வைங்க’னு என்னைக்குமே அடம்பிடிக்க மாட்டேன். 'வானவராயன் வல்லவராயன்’, 'யாமிருக்க பயமே’, 'விழித்திரு’ படங்களைத் தவிர, அடுத்து கமிட் ஆகியிருக்கிற 'வன்மம்’ படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் 'ரொம்ப ஸ்பீடாப் போறீங்களே?’னு  கேட்பீங்க.''

''தொடர்ந்து புது இயக்குநர்கள், நடிகைகளோடயே நடிக்கிறீங்களே... பெரிய இயக்குநர்களை அப்ரோச் பண்ற ஐடியா இல்லையா?''

''இயக்குநர்களில் வெங்கட்பிரபு சார், சுசீந்திரன் சார் நல்ல பழக்கம். 'அஞ்சலி’, 'இருவர்’ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். அதனால் மணிரத்னம் சாரே எனக்குத் தெரிஞ்சவர்தான். நான் சினிமாவில் நடிக்கணும்னு முடிவெடுத்ததுக்கு அப்புறம், நான் அப்ரோச் பண்ணாத இயக்குநர்களே கிடையாது. ஓப்பனா சொல்லணும்னா, யாருமே எனக்கு வாய்ப்பு கொடுக்கலை. அதனால்தான் நம்ம விதியை நாமதான் எழுதிக்கணும்னு தீர்மானிச்சுக் கஷ்டப்பட்டேன். அறிமுக இயக்குநர்களோட முதல் இரண்டு படங்கள்ல நான் தோத்தாலும், மூணாவது படத்தில் ஜெயிச்சது ஒரு அறிமுக இயக்குநரால்தான். தவிர, ஹீரோயின்ஸ் விஷயத்துல நான் தலையிட மாட்டேன்.''

'' 'ஜெயம்’ ராஜா - ரவி’, 'செல்வராகவன் - தனுஷ்’ மாதிரி 'விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா’ சகோதரர்களா சினிமாவில் ஜெயிச்சிருக்கலாம். உங்க சகோதரருமா உங்களுக்கு வாய்ப்பு தரலை?''

''அவங்க எல்லாம் சினிமாவில் என்ட்ரி ஆகும்போதே 'இயக்குநர் - நடிகரா’ அறிமுகமாகி ஜெயிச்சவங்க. ஆனா, எங்க அண்ணன் எனக்கு முன்னாடியே இயக்குநரா அறிமுகமாயிட்டார். நான் நடிகனா என்ட்ரி ஆனப்போ அவரோட உயரம் எட்டாத இடத்துல இருந்ததினால, என்னை நிரூபிச்சிட்டு அவர்கிட்ட போய் சான்ஸுக்காக நிற்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவரே எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கார். அவருடைய அடுத்த படத்தில் நானும் ஆர்யாவும் இணைந்து நடிக்கிறோம். 'அண்ணன்தானே’னு அசால்ட்டா இருந்திடாம, அந்தப் படத்துக்கு நிறைய உழைக்கணும்.''

''குறுகிய காலத்தில் வளர்ந்த நடிகர்களைப் பார்க்கும்போது என்ன ஃபீல் பண்றீங்க?''

''பந்தியில் 'என் இலைக்கு என்ன வைக்கிறாங்க?’னு பார்த்துக்கிட்டா போதும். பக்கத்து இலையில இருக்கிறவனுக்கு பாயாசம் வெச்சா எனக்கென்ன?''

''சினிமா - அரசியல் ரெண்டுலேயும் ஏன் வாரிசுகளே அட்ராசிட்டி பண்றாங்க?''

''டாக்டர் பையனுக்கு டாக்டர் ஆகணும்னு, இன்ஜினீயர் பையனுக்கு இன்ஜினீயர் ஆகணும்னு ஆசை வர்றது இயல்புதானே? அரசியல் வாரிசுகளும் சினிமா வாரிசுகளும் சின்னதா தப்பு பண்ணினாலும், அதுல வெளிச்சம் அதிகமா விழும்.''

''மேரேஜ் ஃலைப் எப்படிப் போகுது?''

''ரொம்ப நல்லா இருக்கேன். இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள் எதையும் அவங்க பார்க்கலை. அதனால்தான் எந்த ஆட்சேபனையும் இல்லாம, கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருப்பாங்கனு நினைக்கிறேன்!''

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!