எ ஃபிலிம் பை சாமியார்! | saamiyaar, cinema, ithu enna maatram, sathya narayanan, சாமியார், சினிமா, இது என்ன மாற்றம், சத்திய நாராயணன்.

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (03/05/2014)

கடைசி தொடர்பு:15:05 (03/05/2014)

எ ஃபிலிம் பை சாமியார்!

சினிமா எடுத்திருக்கிறார் ஒரு சாமியார்! யெஸ்... 'இது என்ன மாற்றம்’ திரைப்படத்தின் இயக்குநர் சத்தியநாராயணன் ஒரு சாமியார்.

 ''தேனி பக்கத்துல தின்னிநாயக்கன்பட்டி சொந்த ஊர். என்னுடைய தியான நிலைகளைப் பார்த்து 'சாமியார்’னு மக்கள் சொல்றாங்க. ஆனா, நான் என்னை சாமியார்னு என்னைக்குமே சொன்னதில்லை. ஆன்மிக ஈடுபாடு இருக்கு. ஆன்மிகம்னாலே பொதுவா சாமியார்னு சொல்லிடுவாங்க. மத்தபடி விவசாயம்தான் என்னுடைய தொழில். கூடவே 'என்ன இந்த மாற்றம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸுக்குச் சொந்தமான நிலங்களையும் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள். 'என்னடா? சாமியார்னு சொல்லிட்டுப் பொண்டாட்டி, புள்ளைங்கனு அடுக்குறானே?’னு ஆச்சரியப்படாதீங்க.  எந்தச் சாமியார்களும் தூய்மையாக இருந்தாலும் உடல் இச்சை இருக்கத்தான் செய்யும். அதனால, 'இல்லறத்துடன் துறவறம்தான்’ என்னைக்குமே சிறந்தது. 'என் காலைத் தொட்டுக் கும்பிடு’னு சொல்றவங்க எல்லாம் சாமியாரே கிடையாது'' கன்ட்ரோல் இல்லாமல் தாறுமாறாய் வண்டி ஓட்டிய சத்தியநாராயணன், கொஞ்சம் நிதானித்துத் தொடர்ந்தார்...

'' ஜேம்ஸுக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரியும். 'என்ன சாமி படம் பண்ணணும்கிற ஆசை இருக்காமே? பண்ணிட வேண்டியதுதானே?’னு சொன்னதோட, அவரே தயாரிப்பாளர் ஆகிட்டார். ஆனா, யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாம எப்படி படம் பண்றதுனு யோசிச்சு, 'நான் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதுறேன். 'கனா காணும் காலங்கள்’, 'காத்து கருப்பு’ உள்ளிட்ட சில சீரியல்கள்ல உதவி இயக்குநரா இருந்த குமார் ராஜாவை டைரக்ட் பண்ணச் சொல்லலாம்’னு ஐடியா கொடுத்தேன். ஆனா, இரண்டுநாள் ஷூட்டிங் முடியிறதுக்குள்ளே குமார் ராஜா மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்து போயிட்டார். அப்புறம் நான் டைரக்டர் ஆயிட்டேன். அது ஆண்டவனோட விருப்பம். ஏன்னா, சின்ன வயசுல இருந்து நான் நினைச்சதெல்லாம் நடந்திருக்கு. என்னைக்கோ ஒருநாள் சினிமா எடுக்கணும்னு நினைச்சிருக்கேன்... இப்போ அதுவும் நடந்திருச்சு. இதுதான் என்னுடைய முதல் படமாகவும் இருக்கும் கடைசிப் படமாகவும் இருக்கும்'' என்றவர், கதைக்குத் தாவினார்.

''இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு இருந்த வெளிநாட்டுக்காரங்க குடும்ப முறைக்கு மாறிட்டாங்க. அதே சமயம் நாம குடும்ப முறையில் இருந்து விலகிப் போயிட்டு இருக்கோம். இங்கே மட்டுமல்ல, உலகம் முழுக்க எல்லா நாடுகளுடைய கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள்னு எல்லா விஷயமும் பின்ணிப் பிணைய ஆரம்பிச்சுடுச்சு. இதனால அந்தந்தப் பகுதிகளோட தட்பவெப்ப நிலையும் நிச்சயமா மாறும்(?). இந்தச் சீரழிவுகளுக்கு யார் காரணம்கிற விஷயத்தையும், ஆன்மிகமும், விஞ்ஞானமும் இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறதுங்கிற விஷயத்தையும் படத்துல சொல்லி இருக்கேன்.

காணாமல் போன மலேசியா விமானம் சூரியனிடமிருந்து வெளிவரும் சிகப்பு நிற கதிர்களால் சுக்குநூறாகப் பொசுங்கிவிட்டது. ஆழ்ந்த தியானத்துல இந்த மாதிரியான விஷயங்கள் எனக்குப் புலப்படும். இதுக்கு 'இறை நிலை உணர்தல்’னு பேர். விமானம் காணாமல் போன விஷயம் மட்டுமல்ல,  அடுத்து நடக்கப்போகிற பல மோசமான நிகழ்வுகள், எல்லாத்தையும் நான் அறிவேன். தவிர சில விஷயங்களைச் சொன்னா, என்னோட உயிருக்கே ஆபத்து இருக்கு. உங்களுக்காக ஒண்ணே ஒண்ணு சொல்றேன்... 2040-ல பூமியில ஒரு மாற்றம் நடக்கப் போகுது'' டிவிஸ்ட்டுடன் முடிக்கிறார் சத்தியநாராயணன்.

இந்த ட்விஸ்ட்லாம் படத்துல இருக்குமா?

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்