Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“வாடகை சைக்கிள்ல போய் வம்பிழுப்பான்!”

'' 'யார்கிட்டயுமே அசிஸ்டென்டா வேலை பார்க்காமல் ஒரு படம் இயக்க முடியுமா?,  ஒரு ஷார்ட்ஃபிலிம்கூட பண்ணாம எந்த தைரியத்தில் படம் பண்றீங்க?’ - இவையும் இன்ன பிறவுமாக பலப்பல கேள்விகள். உலகத்திலேயே ரொம்பச் சிக்கலானதும் ஆபத்தானதும், தன் உயிர்ல இருந்து இன்னோர் உயிரை ஒரு பெண் பிரசவிக்கிறதுதான். ஆனா, எந்தப் பெண்ணும் பிரசவ அனுபவத்தை நேரடியாப் பார்த்து தெரிஞ்சுகிட்டு குழந்தை பெத்துக்கிறது இல்லை. தன் வாரிசைப் பார்க்கப்போகிற நெகிழ்ச்சிதான் தேவையான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணையும் 'அம்மா’வா மாத்துது. இந்த இடத்தில் அனுபவத்தைவிட அன்பும் பிடிப்பும்தான் முக்கியம்.

13 வருஷத்துக்கு முன்னாடி விக்ரமன் சார் வீடு தேடி அலைஞ்சப்ப என் மனசுல சினிமா மேல இருந்த காதல், இப்பவும் அப்படியே இருக்கு. அந்த மனசு இருந்தா போதும் சார்... தேவயானியைக் கல்யாணம் கட்டிக்கிட்ட ராஜகுமாரன் மாதிரி எவ்வளவு பெரிய விஷயத்தையும் அசால்ட்டா முடிச்சிடலாம்!'' - கலகலவெனப் பேசுகிறார் 'கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன்.

''முதல் நாள் ஷூட்டிங்... சிவன் கோயில் வாசல்ல நரேன் நடந்து வர்ற மாதிரி சீன். மொத்த யூனிட்டும், 'நான் தேறுவேனா’னு பார்க்க ஆவலா நிக்குது. மனசு முழுக்கப் பதற்றம். அப்போ என் செல்லுல ஒரு வாய்ஸ் எஸ்.எம்.எஸ். வந்து விழுது. 'ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்... வாழ்த்துகள் சரவணா’னு பளீர்னு சசிகுமார் சார் குரல். அப்போ அவர் ஷூட்டிங்காக சுவிஸ்ல இருந்தார். அங்கே அதிகாலை 2 மணிக்கு எழுந்து அந்த எஸ்.எம்.எஸ்-ஸை அனுப்பியிருக்கார். அந்தக் குரல் கொடுத்த தைரியம் ரொம்பப் பெரிசு. மனசுல இருந்த பதற்றம், போன இடம் தெரியலை. நம்ம நலன்ல இவ்வளவு அக்கறையோட இருக்கிற மனுஷங்க பக்கத்துல இருக்கிறதே பெரிய தைரியம்தானே!''

'''கத்துக்குட்டி’ தலைப்புல என்ன சொல்ல வர்றீங்க?''

''எந்த அனுபவமோ பயிற்சியோ இல்லாத ஒருத்தனை 'கத்துக்குட்டி’னு சொல்வாங்க. அந்த விதத்தில் கதையோட நாயகனுக்கு மட்டும் இல்லாம, எனக்கும் இந்த டைட்டில் பொருந்தும்.

தஞ்சாவூர் மண்ணுல நல்லாப் படிக்கிற பசங்க சென்னை, பெங்களூருனு போயிடுவாங்க. சரியாப் படிக்காத பசங்க திருப்பூர், காங்கேயம்னு போயிடுவாங்க. ஆனா, சில பசங்க மட்டும் வம்பு, வீம்பு, பந்தபாசம்னு சொந்த மண்ணைவிட்டுப் போகாம ஊருக்குள்ளேயே சேட்டையைக் காட்டிட்டுத் திரிவானுக. அவங்கள்ல ஒருத்தர்தான் நரேன். வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி வம்பிழுக்கிற அளவுக்கு நல்ல பையன். இந்த மாதிரி வம்புதும்புலயே திரியுறவன் கையில் திடீர்னு பெரிய பொறுப்பு ஒண்ணு விழுது. அப்பாவோட 40 வருஷக் கனவை நனவாக்கவேண்டிய பொறுப்பு. கத்துக்குட்டியாத் திரியுறவன் அதைக் காப்பாத்துறானா இல்லையா... இதான் கதை. படம் டைட்டில்ல இருந்து எண்ட் கார்டு வரை காமெடிதான்!''

''அநேகமா நரேன் நடிக்கிற முதல் காமெடிப் படம் இதுதானே?''

''ஆமா..! இந்தக் கதையை முதல்ல இயக்குநர் அமீர் சார்கிட்டதான் சொன்னேன். 'கதை சூப்பர். இதுல ஒரு பெரிய ஹீரோ நடிச்சா நல்லா இருக்கும். நானே பேசுறேன்’னு சொன்னார். 'இல்லை சார். உங்களுக்குக் கதை பிடிச்சதே போதும்’னு சொல்லிட்டு, நரேனைச் சந்திச்சேன். கதையை ஷாட் பை ஷாட் கேட்டதும், 'நாம பண்றோம்...’னு உடனே கேரக்டருக்குள் புகுந்துட்டார்.

அவருக்குப் பக்கபலமா சூரி. படத்தில் சூரி கேரக்டர் பேர் 'ஜிஞ்சர்’. பெரிய பெரிய கம்பெனிகளே அவரோட கால்ஷீட் கிடைக்காம காத்துக்கிடக்கிறப்ப, சுளையா 20 நாள் எனக்குக் கொடுத்தார். வஞ்சம் இல்லாம நடிச்சுக் கொடுத்திருக்கார்!''

''பாரதிராஜா நடிக்கிறாரா என்ன?''

'' அது பாரதிராஜா சார் இல்லை. அவரோட தம்பி ஜெயராஜ். பாரதிராஜா சார் ஆபீஸ்ல அவரைப் பார்த்திருக்கேன். வெகுளியும் சாந்தமுமான முகம். நடிக்கக் கேட்டப்ப மறுத்துட்டார். அப்புறம் ஸ்க்ரிப்ட்டை பாரதிராஜா சார்கிட்ட காண்பிச்சு அவர் சரினு சொன்ன பிறகுதான் நடிக்க வந்தார். 'எல்லாம் சரி, ஆனா, எனக்கு நடிப்புனா என்னன்னே தெரியாதே...’னு தயங்கினார். நான் சொன்னேன்... 'சும்மா வாங்க சார்... எனக்கு மட்டும் டைரக்ஷன்னா என்னன்னு தெரியுமா என்ன?’ ''

- ம.கா.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்