Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“உலகத்தை வேட்டைக் காடா மாத்திடுச்சு பணம்!”

''ஒருநாள், பீக் அவர்ஸ்ல வடபழநி சிக்னல் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். ஆயிரமாயிரம் ஜனங்க போயிட்டே இருக்காங்க. அதுல மொத்தமா அஞ்சே அஞ்சு பேர் முகத்துலதான் சிரிப்பைப் பார்த்தேன். அதுல மூணு பேர் குழந்தைங்க. 'இப்படி இவ்வளவு பேரும் மெஷின் மாதிரி எதைத் தேடி ஓடுறாங்க?’னு யோசிச்சா... 'பணம்’னு ஒரு வார்த்தைதான் பதிலாத் தோணுது. இப்படி ராஜா, மந்திரி, குதிரை, சிப்பாய்னு அத்தனை பேரோட இலக்கும் பணமா இருக்கிறதாலதான், இந்த உலகம் வேட்டைக்காடா மாறிடுச்சுனு தோணுச்சு. அதே லைன்ல யோசிச்சுப் பிடிச்ச கதைதான் 'சதுரங்க வேட்டை’.

ஓட்டை விக்க எலெக்ஷன் வந்தாலும், ஈமுகோழி விக்க நமீதா வந்தாலும் ஓடி ஓடிப் போய் பல்பு வாங்கும் என் சக அப்பாவிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்!'' - கதை சொல்லும் பாணியில் தடதட மாற்றங்களைக் கண்டுவரும் தமிழ் சினிமாவில், மற்றுமொரு நம்பிக்கை இளைஞராகச் சிரிக்கிறார் வினோத். ஒரு நிமிட டீஸர், மூன்று நிமிட டிரெய்லரிலேயே புருவம் உயர்த்தவைக்கும் 'சதுரங்க வேட்டை’யின் இயக்குநர்.

'' 'பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணா என்ன?’ன்னு சிந்திக்கிற ஒருத்தனோட கதை இது. இப்படி, தனக்குனு ஒரு பாதை போட்டு காய் நகர்த்திக்கிட்டே போற ஒருத்தன், 'ராஜா ஆகிறானா... பஃபூன் ஆகிறானா?’ங்கிறதுதான் படம். கதையின் ஒன்லைன் கேட்க சீரியஸா இருக்கலாம். ஆனா, படம் செம காமெடி. யோசிச்சுப் பார்த்தா, பணம், பொருள், பதவினு வன்மமும் தந்திரமுமா ஓடிட்டே இருக்கிற இந்த வாழ்க்கையைவிட காமெடி என்னங்க இருக்கு?''

''அப்போ பணம் சம்பாதிக்கிறது காமெடினு சொல்ல வர்றீங்களா?''

''அப்படி இல்லை. பணம் சம்பாதிக்கிறதுக்காக மத்த எல்லாச் சுகதுக்கங்களையும் மறந்துட்டு ஓடுறதுதான் காமெடி. பஞ்சத்துக்குப் பாக்கெட் அடிக்கிறவன், தெருமுக்குல செயின் அறுக்கிறவன், ஏ.டி.எம்-ல கத்தி காட்டுற திருடன்களை நமக்குத் தெரியும். ஆனா, வெள்ளையும் சொள்ளையுமா வந்து, விவேகானந்தர் ரேஞ்சுக்குப் பேசிட்டு, மொத்தமா மொட்டையடிக்கிற 'நல்லவங்களை’ நமக்குத் தெரியாது. அப்படிச் சில 'ஒயிட் காலர் களவாணி’களின் உலகத்தை எட்டிப்பார்க்கிற படம்தான் இது. ஹாலிவுட்டின் கான் ஜானர் வகை படங்கள் மாதிரியான ஒரு படம்!

இதுக்காக அந்த உலகத்துக்குள்ளே கொஞ்சம் போனா, அது 'பாதாள பைரவி’ மாதிரி போயிட்டே இருக்கு. நம்ம அன்றாட வாழ்க்கையோட பின்னிப் பிணைஞ்ச, ஆனா நமக்கே தெரியாத உலகம். உள்ளே அவ்வளவு காமெடி. அவலச்சுவைனு சொல்வாங்கள்ல... அப்படி ஒரு அல்ட்டிமேட் காமெடி!''

''இப்படி ஒரு படத்துக்கு மனோபாலா தயாரிப்பாளர்... நம்பவே முடியலையே!''

''அதுதான் வாழ்க்கையோட சதுரங்கம். மனோபாலா சார் ஒரு படம் தயாரிக்கணும்னு நிறையக் கதைகள் கேட்டுட்டு இருந்தார். நான் இந்த ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் நலன் குமரசாமிகிட்ட படிக்கக் கொடுத்திருந்தேன். அவர் வீட்ல இருந்த என் ஸ்க்ரிப்ட்டை அவரோட அம்மா எடுத்துப் படிச்சிட்டு, 'டேய் இது யார் கதைடா? ரொம்ப நல்லா இருக்கு. சும்மா படிக்க எடுத்தேன். கீழே வெக்கவே முடியலை’னு சொல்லியிருக்காங்க. உடனே நலன் அதைப் படிச்சிட்டு மனோபாலா சார்கிட்ட கொடுத்திருக்கார். அவர்கிட்ட போய்க் கதைச் சொன்னேன். அவர் கேட்டு முடிச்சதுமே, இந்த புராஜெக்ட் ஆரம்பிச்சாச்சு.

இதுவரைக்குமான என் பயணத்துக்கு பார்த்திபன் சார், விஜய் மில்டன், ராஜு முருகன்னு மூணு பேருக்குப் பெரும் பங்கு இருக்கு. அந்த நல்ல மனுஷங்ககிட்ட வேலை பார்த்துட்டு வந்தவன் நான். பார்த்திபன் சார்கிட்ட ரசனையைக் கத்துக்கிட்டேன்; மில்டன் சார்கிட்ட பட்ஜெட்ல படம் எடுக்கிற வித்தையைக் கத்துக்கிட்டேன்; ராஜு முருகனோட இருந்தா ஒரே வாரத்துல ஒரு திரைக்கதை எழுதிட முடியும்.

அப்புறம் படத்தோட ஹீரோ... பாலிவுட்டின் பரபரப்பான ஒளிப்பதிவாளர் நட்டு. 'இதுக்கு ஏன் நட்டு?’னு நண்பர்களே கேட்டாங்க. முதல் தடவையா அவ்வளவு போலியா இதுல நடிச்சிருக்கார் நட்டு. நான் ஏன் இப்படிச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியுதா? ஏன்னா, உங்களுக்குப் புரிஞ்சுதுன்னா, நான் வேற பதில் யோசிக்கணும்!'' - கலகலவெனச் சிரிக்கிறார் வினோத்.

- டி.அருள் எழிலன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்