நடிப்புக்காக அடி வாங்கியிருக்கேன்! | simhaa, சிம்ஹா

வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (09/05/2014)

கடைசி தொடர்பு:11:38 (09/05/2014)

நடிப்புக்காக அடி வாங்கியிருக்கேன்!

சிறிய கேரக்டர்களில் வந்தாலும் வெரைட்டி விருந்து கொடுக்கிறார் சிம்ஹா. இப்போது 'ஜிகர்தண்டா’ வில்லன், 'உறுமீன்’ ஹீரோ. பிஸியாக இருந்த சிம்ஹாவுடன்...

 

''பிறந்தது ஹைதராபாத். வளர்ந்தது கொடைக்கானல். ரஜினி படங்களைப் பார்த்துப் பார்த்து நாலாவது படிக்கும்போதே நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. 'நீங்க எதிர்காலத்துல என்னவாகப் போறீங்க?’னு டீச்சர் கேட்டப்போ 'நடிக்கப் போறேன்’னு சொல்லி, அடி வாங்கியிருக்கேன். ப்ளஸ் டூ முடிச்சதும், 'நடிக்கணும்’னு வீட்டுல சொன்னப்போ, அப்பாதான், 'முதல்ல டிகிரியை முடி’னு சொன்னார். அப்புறம் பி.சி.ஏ., முடிச்சிட்டு 'வேலைக்குப் போறேன்’னு 2005-ல சென்னைக்கு வந்து ஏதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே சான்ஸ் தேடினா,  அது செட் ஆகலை. 2009-ல் நடிப்புதான்னு முழுமூச்சா இறங்கினேன். 'காக்கா முட்டை’ படத்தோட டைரக்டர் மணிகண்டனோட அறிமுகம் கிடைச்சது. அவரோட குறும்படத்துல உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். ஒரு குறும்படத்துக்கு புரொடக்ஷன் மேனேஜராவும் இருந்திருக்கேன். இப்படி கிடைக்கிற லிங்கைப் பயன்படுத்திக்கிட்டதுக்கு அப்புறம்தான் நாளைய இயக்குநர்கள்ல கார்த்திக் சுப்புராஜ், நலன், அல்போன்ஸ், பாலாஜி மோகன்னு எல்லோருடைய அறிமுகமும் கிடைச்சது. முதன்முதலா நடிச்ச 'ராவனம்’ குறும்படத்தை டிவி-யில பார்த்துட்டு, 'சரிதான்... பையன் ஆக்டர் ஆயிட்டான்’னு அப்பா என்னோட போக்கிலேயே விட்டுட்டார். அப்படியே சில குறும்படங்கள், அப்புறம் 'காதலில் சொதப்புவது எப்படி?’ படத்துல என்ட்ரி ஆகி, ஒரு வழியா வெள்ளித்திரையில என் முகத்தையும் பார்த்தாச்சு'' - அமர்க்கள அறிமுகம் கொடுத்துத் தொடர்கிறார் சிம்ஹா.

''இதுவரை நான் நடிச்ச படங்களெல்லாம் பிளாக் ஹியூமர், த்ரில்லர்னு ரொமான்ஸ் ஏரியாவை டச் பண்ணாமலேயே வந்திருச்சு. இப்போ ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிற 'உறுமீன்’ படத்துலேயும் ரொமான்ஸ் ரொம்பக் கம்மி. இதெல்லாம் 'ச்சே... ஹீரோ ஆகியும் ஹீரோயினைக் கட்டிப்பிடிக்க முடியலையே’ங்கிற ஃபீலிங்ல சொல்லலை பாஸ். பெருமையா சொல்லிக்கிறேன்.

'பீட்சா’ படத்துல நானும் நடிச்சிருக்கேனு சொன்னா நம்ப மாட்டாங்க. 'நேரம்’ படத்தைப் பார்த்தவங்க என்னை நேர்ல பார்க்கும்போது 'நீங்கதானா அது?’னு ஆச்சரியப்படுவாங்க. இப்படி ஒவ்வொரு படத்துலேயும் ஒவ்வொரு விதமா இருக்கும் என்னுடைய கேரக்டர். இதுதான் பாஸ் எனக்கு வேணும். ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிற 'உறுமீன்’ படம் 1990 டு 2014 வரை நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சு, திரைக்கதை எழுதியிருக்காங்க. படம் ஆரம்பிச்சதுல இருந்து, க்ளைமாக்ஸ் வரை 'அடுத்து என்ன?’ங்கிற ஆர்வம் தொடரும். தவிர, சமீபத்துல 'ஜிகர்தண்டா’ படத்தோட டிரெய்லரைப் பார்த்த பாலாஜி சக்திவேல், ராம், வெங்கட் பிரபுனு பெரிய இயக்குநர்கள் போன் பண்ணி, வாழ்த்து சொன்னதோட, 'ஃபியூச்சர்ல சான்ஸ் இருந்தா, சேர்ந்து படம் பண்ணுவோம்’னு சொன்னாங்க. இதைக் கேட்டப்போ அவ்வளவு சந்தோஷம்.

நடிச்சா ஹீரோனு என்னைக்குமே நிற்க மாட்டேன். அடுத்து ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிற படத்துலேயும் லீட் ரோல்ல நடிக்கிறேன். முதன்முதல்ல நடிச்ச 'ராவனம்’ குறும்படத்துல 'நீ தூங்கு’னு சொன்னதுதான் ஒரு நடிகனா என்னுடைய முதல் டயலாக். அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்!'' - அதிர்ந்து சிரிக்கிறார் சிம்ஹா.

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்