விருதாளிகள்! | விருதாளிகள், தேசிய விருது, national awards

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (15/05/2014)

கடைசி தொடர்பு:12:06 (15/05/2014)

விருதாளிகள்!

தேசிய விருதுகள் மூலம் தமிழ்த் திரைக்கும் பெருமை சேர்த்தவர்கள் இந்தக் கலைஞர்கள். இந்த ஆண்டு தமிழர்களுக்கு ஆறு விருதுகள். அதில் நான்கு பாலுமகேந்திரா வுக்கும், அவரது மாணவர்களுக் குமே கிடைத்திருக்கின்றன. 61-வது தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுகளைப் பெற்றுத் திரும்பியவர்கள் உற்சாகம் படபடக்கப் பேசினார்கள்.

'''ஆனந்த யாழை...’ பாட்டுக்கான முதல் அங்கீகாரத்தைத் தொடங்கி வெச்சதே, 'ஆனந்த விகடன்’தான். விகடன் விருதைத் தொடர்ந்து நார்வே இன்டர்நேஷனல் ஃபெஸ்டிவலில் சிறந்த பாடலாகத் தேர்வு, பிறகு தேசிய விருது'' - மெல்லியச் சந்தோஷத்தோடு பேசுகிறார் நா.முத்துக்குமார்.

''விருது செய்தி வந்த 10-வது நிமிடத்தில் யுவனிடம் இருந்து வாழ்த்துச் செய்தி. 'உங்களால்தான் இந்த விருது’னு நன்றி சொன்னேன். 'உங்கள் வரிகளுக்குக் கிடைத்த விருது’ என்றார். 'உடலையும் உயிரையும் தனியாப் பிரிக்க முடியாதே. உங்களுக்கும் கிடைச்சிருக்கணும். அடுத்தமுறை 'தரமணி’க்காகச் சேர்ந்து வாங்குவோம்’ என்றேன். சந்தோஷப்பட்டார். நான் எப்பவும் என் ஞானத்தந்தை வரிசையில் ராஜா சார், பாலுமகேந்திரா சார், அறிவுமதி அண்ணன் இவங்களை வெச்சிருப்பேன். ராஜா சாரைப் பார்த்ததுமே, 'தேசிய விருதா... வாழ்த்துகள்’னு மகிழ்ந்தார். அது மறக்க முடியாத பாராட்டு.

என் நண்பன் ராம் தன் 'கற்றது தமிழ்’ படத்தை தேசிய விருதுக்கு அனுப்பத் தவறிட்டான். 'தங்க மீன்கள்’ மூலம் அந்தக் குறை நீங்கி இருக்கு. நண்பனா எனக்கு ரொம்பச் சந்தோஷம்'' என்கிறார் நட்பான குரலில்.

'''தங்க மீன்கள்’ படத்துக்கு எப்படியும் தேசிய விருது கிடைச்சிடும்னு எதிர்பார்த்தேன். ஆனால், மூணு விருதுகளை எதிர்பார்க்கலை!'' - மகிழ்ந்து பேசுகிறார் இயக்குநர் ராம்.

''சாத்னாவுக்கு விருது கிடைச்சதுதான் ரொம்பச் சந்தோஷம். எங்க எல்லோரையும்விட அவள் பட்ட கஷ்டம் அதிகம். என் நண்பன் நா.முத்துக்குமாருக்கு என் படத்திலேயே விருது கிடைச்சது ரொம்பச் சந்தோஷம். பாலுமகேந்திரா சார் 'தங்க மீன்கள்’ படத்தை ரிலீஸுக்கு முன்னாடியே பார்த்துட்டார். 'இந்தப் படத்தை அனுப்பி வை. நீ தேசிய விருது வாங்கிறதை நான் பார்க்கணும்’னு சொல்லிட்டே இருந்தார். வாங்கும்போது அதைப் பார்க்க அவர் இல்லைங்கிறதுதான் ஒரே வருத்தம். இந்த விருதை 'தங்க மீன்கள்’ படம் எடுக்க காரணமா இருந்த என் மகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

'அப்பா-மகள் உறவு பற்றி படம் பண்ணிட்டீங்க. அம்மா-மகன் ரிலேஷன்ஷிப் பற்றி எப்பப் படம் பண்ணப் போறீங்க?’னு நிறைய அம்மாக்கள் கேட்கிறாங்க. நிச்சயம் பண்றேன். அது பேரறிவாளன் - அற்புதம் அம்மாள் கதைதான்'' என்று முடிக்கிறார்.

''பெரியவளான பிறகு ஃபிலிம் டைரக்டர் ஆகணும். குளோபல் வார்மிங் பற்றி படம் எடுக்க ஆசை'' - சரளமாகப் பேசுகிறார் சாத்னா. 'தங்க மீன்கள்’ படத்தில் செல்லம்மாவாக நடித்ததற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர்.

''ராம் அங்கிள், சூப்பரா நடிக்கச் சொல்லிக் கொடுத்தார். படத்துல கல்யாணி, செல்லம்மாவை விட்டுட்டு வேற ஊருக்குப் போயிருவார். அதே மாதிரி எங்க அப்பா, என்னை சென்னையில் விட்டுட்டு துபாய் போயிட்டார். அதை நினைச்சு நடிச்சதால்தான் நல்லா வந்துச்சு. இப்போ நான் துபாய்ல செவன்த் கிரேடு படிக்கிறேன். நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எனக்குப் படிப்புலதான் ஆர்வம். ஆனாலும் ராம் அங்கிள் கூப்பிட்டா மட்டும் நிச்சயம் நடிப்பேன்'' என்கிறாள் தெற்றுப் பல் சிரிப்போடு.

''பாலுமகேந்திரா சாருக்கு இன்னொரு சிறப்பு, அவர் ஒளிப்பதிவு செய்த முதல் படமான 'நெல்லு’க்குச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைச்சது. அதேபோல கடைசிப் படமான 'தலைமுறைகள்’க்கும் தேசிய விருது. இந்தப் படத்தைப் பேரனுக்காக டெடிகேட் பண்ணி யிருந்தார். காலம், அவரின் பேரனின் கையாலேயே அந்த விருதை வாங்குவதாக மாற்றி இருக்கிறது!'' - சந்தோஷமும் வருத்தமும் கலந்து பேசுகிறார் இயக்குநர் சசிகுமார்.

''இயக்குநர் விருதை பாலுமகேந்திரா சார் வாங்கியிருக்கணும். அவருக்குப் பதிலா அவருடைய பேரன் ஸ்ரேயாஸ் மேடை ஏறி வாங்கினார். இதில் ஆச்சரியம், 'தலைமுறைகள்’ படத்தில் பாலுமகேந்திரா சார் கதைப்படி க்ளைமாக்ஸ் காட்சியில் இறந்துவிடுவார். அவருடைய பேரன் விருது வாங்குவான். நிஜத்திலும் அதுபோலவே நடந்திருச்சு. அவர் தன் படத்துக்கு எழுதின கதை, அவர் வாழ்க்கையிலேயே உண்மையாயிடுச்சு.

ஸ்ரேயாஸ் மேடை ஏறி விருது வாங்கிட்டு, 'தாத்தாவை ரொம்ப மிஸ் பண்றேன்’னு சொன்னதைக் கேட்டு அரங்கமே அமைதியா இருந்துச்சு. அந்த மாபெரும் கலைஞனுக்கு இந்த நாடு செலுத்தின அஞ்சலியா அதை எடுத்துக்கிட்டேன். அவர் மாதிரி மிகப் பெரிய ஓர்  ஆளுமையோடு இந்தப் படத்துக்காக இணைஞ்சு இருந்ததையும், இந்தப் படத்தைத் தயாரிச்சதையும், பாலா அண்ணன் வாழ்த்தினதையும் என் வாழ்நாள் பெருமையா நினைக்கிறேன்'' என்ற சசிகுமாருக்கு, குரல் நெகிழ்கிறது.

''ஆறு முறை தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சாரிடம் பேசணும்னு பல முறை முயற்சி பண்ணியிருக்கேன். ஆனால், அவரே என் நம்பர் பிடிச்சு மெசேஜ் பண்ணினது பெரிய விஷயம்!'' - சீனியரிடம் இருந்து பாராட்டுப் பெற்ற பூரிப்புடன் தொடங்குகிறார் 'வல்லினம்’ எடிட்டர் சாபு ஜோசப்.

'' 'வல்லினம்’ இயக்குநர் அறிவழகனோடு வேலை பார்த்த ஒவ்வொரு நாளும் புதுசு, புதுசாக் கத்துக்கிட்டேன். இது விளையாட்டு பற்றிய படம்ங்கிறதால ரசிகர்கள் ஒரிஜினல் ஸ்போர்ட்ஸை ஃபீல் பண்ணணும். அதில் சினிமாத்தனம் இருக்கவேக் கூடாது. எடிட்டரா இது சவாலான வேலை. அதனால்தான் கமர்ஷியல் படமா இருந்தாலும் படத்தொகுப்புக்காக விருது கொடுத்திருக்காங்க'' என்று சிரிக்கிறார் சாபு.

''என் அப்பா 'துரை’யை சினிமாவில் பலருக்கும் தெரியும். ஏவி.எம்-மில் புரொடக்ஷன் தொழிலாளியா இருந்தவர். அவருக்குச் சாப்பாடு கொடுக்க ஏவி.எம். போகும்போது கேட்கிற சினிமா சத்தங்கள் என்னை இழுக்க ஆரம்பித்தன. 'என்னையும் ஏவி.எம்-ல சேர்த்துவிடுங்க’னு அப்பாவிடம் கேட்டேன். 'நேரத்துக்கு வரணும். ராப்பகலா வேலை இருக்கும். நேரத்துக்குச் சாப்பிட முடியாது. யோசிச்சிக்கோ’னு சொன்னார். நான் உறுதியா இருந்ததும், டப்பிங் தியேட்டரில் சேர்த்துவிட்டார்'' - அப்பா பற்றிய நினைவுகளோடு ஆரம்பிக்கிறார் யுவராஜ். இவர், 'ஸ்வப்னம்’ என்ற மலையாளப் படத்துக்காக சிறந்த ஆடியோகிராஃபி விருது பெற்ற தமிழர்.

'ஏவி.எம்-மில் சேர்ந்த பின் ரிக்கார்டிங் தியேட்டரில் வேலை. ஆறு மாசத்துல எஸ்.பி.பி. போன்ற சீனியர் சிங்கர்ஸின் வாய்ஸை மிக்ஸ் பண்ணும் அளவுக்கு வளர்ந்தேன். அப்புறம் பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் வேலைக்குச் சேர்ந்தேன். இந்தியாவின் முதல் ஆரோ 3டி மிக்ஸிங் தியேட்டர் இதுதான். 'ஸ்வப்னம்’ படத்தின் இயக்குநர் சாஜன், என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புத் தந்தார்.

100 பேர் ஒரே சமயத்தில் வாசிக்கும் கேரளா ஸ்பெஷல் சென்டை மேளத்துக்கு நடுவுல வசனங்களைத் தெளிவா கேட்க வெக்கிறது மிகப் பெரிய சவால். அதை இந்தப் படத்தில் சரியாகச் செய்ததால 'பெஸ்ட் ஆடியோகிராஃபி ரீ-ரிகார்டிஸ்ட் ஆஃப் ஃபைனல் மிக்ஸ்டு டிராக்’ விருது கிடைச்சிருக்கு. தனக்கு நெஞ்சு வலி வந்தப்பகூட, 'நீ வேலைக்குப் போ. உனக்காக அங்கே காத்திருப்பாங்க’னு அனுப்பி வெச்சவர் அப்பா. இப்போ அவர் உயிரோட இல்லை. அவருக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்'' என்ற யுவராஜின் குரலில் அத்தனை அன்பு.

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close