“ரஜினியை சீக்கிரம் சந்திப்பேன்!” | மோகன் லால். ரஜினி, rajini, mohan lal

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/05/2014)

கடைசி தொடர்பு:14:40 (21/05/2014)

“ரஜினியை சீக்கிரம் சந்திப்பேன்!”

''என் தமிழ் அவ்வளவா நல்லா இருக்காது. பொறுத்துக்கங்க'' என்றபடியே வந்து அமர்கிறார் மோகன்லால். வடபழனி மோகன் ஸ்டுடியோவில் 'ஜில்லா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயுடன் நடித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தேன்.

'மலையாள சினிமாவின் கலரை, புதிய இளைஞர்கள் சிலர் மாத்திட்டு வர்றாங்க. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீங்க?'

''தமிழ் சினிமாவிலும் பழைய கலர் மாறிட்டுதானே இருக்கு? ரெண்டு நாளைக்கு முன்னால 'சூது கவ்வும்’ படம் பார்த்தேன். நல்லா இருந்தது. இந்த மாதிரி இப்போ நிறையப் படங்கள் வந்துட்டு இருக்குனு சொன்னாங்க. ஒவ்வொரு பத்து வருஷத்துக்கு ஒரு முறை இப்படி மாற்றம் வரும். மலையாளத்துலேயும் இந்த மாதிரி நிறையப் படங்கள் வந்துட்டு இருக்கு. ஆனால், அதோட சக்சஸ் ரேட் எவ்வளவுனு எனக்குத் தெரியாது. ஆனால், மாற்றம் நல்லது!''

''அரசியலோ, சினிமாவோ... மலையாளிகள் வாரிசுகளை ஆதரிக்க மாட்டாங்க. ஆனால், இப்போ பிரபலங்களோட வாரிசுகள் மலையாள சினிமாவை ஆதிக்கம் பண்றதாச் சொல்றாங்களே?''

'நீங்க சொல்ற அளவுக்கு அங்க பையன்மார்கள் இல்லையே? மம்மூட்டி, ஃபாசில் பசங்க நடிக்கிறாங்க. சீனிவாசன் மகன் இப்போ இயக்குநர். என் பையன் பிரனவை நடிக்கச் சொல்லி நிறையப் பேர் கேட்கிறாங்க. ஆனால், அவர் நடிப்பைவிடப் படிப்பில்தான் ஆர்வமா இருக்கார். சிட்னியில் தத்துவவியல் முடிச்சுட்டு, இப்போதான் கேரளாவுக்கு வந்திருக்கார். பொதுவா சினிமாவில் ஜெயிக்க, திறமையோட கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேணும். பெரிய பெரிய நடிகர், இயக்குநர்களோட பசங்களா இருந்தாலும், பல பேரால் இங்கே ஜெயிக்க முடியலையே? நல்ல கேரக்டர், நல்ல டீம் அமையுறதெல்லாம் அதிர்ஷ்டம்னுதான் சொல்வேன்!''

''குடிப் பழக்கத்துக்கு எதிரான உங்களின் 'ஸ்பிரிட்’ படத்துக்கு 'சிறந்த சமுதாய விழிப்பு உணர்வு’ படம்னு மத்திய அரசின் விருது கிடைச்சது. ஆனால், கேரளா வில் பெரும்பாலானோர் மது அருந்துவதையும்தமிழ்நாட் டில் அரசே மது விற்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'''ஸ்பிரிட்’ ஆல்கஹாலுக்கு எதிரானது இல்லை; ஆல்கஹாலிஸத்துக்கு எதிரானது. தமிழகத்தோடு ஒப்பிடும்போது, கேரளாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம்தான். தவிர, கேரள மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர் பீகார், பெங் கால், தமிழ், தெலுங்கர்கள். அங்கே ஈவ்னிங் ஆச்சுனா ஒயின் ஷாப் வாசல்ல ரேஷன்லநிக்கிற மாதிரி பெரிய க்யூ நிற்கும். க்யூவுல நிக்கிறது ஒழுக்கம்தான். ஆனா, குடிக்கிறதுக்காக நிக்கி றாங்களேன்னு நினைக்கிறப்ப வருத்தமா இருக் கும். தமிழ்நாட்டில் சாராயத்துக்குத் தடை இருந் தப்ப, கள்ளச் சாராயம் குடிச்சு இறந்துபோன சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு. இந்த விஷயத் தில் இரண்டு மாநில அரசாங்கங்களும் ஜாக்கிர தையா, மக்கள் நலனைக் கருத்தில் வெச்சுச் செயல்படணும்!''

'உங்க சமகால தமிழ் நடிகர், நடிகைகளோட தொடர்பில் இருக்கீங்களா?'

'தென்னிந்திய சினிமா உலகமே முன்னாடி சென்னையில்தானே இருந்தது.  இப்போதானே அந்தந்த மாநிலத்துக்குப் போயிருக்கு. சென்னையில் எனக்கு எக்மோர், வி.ஜி.பி. பக்கம்னு ரெண்டு வீடுகள் இருக்கு. அப்பப்ப இங்கே வரும்போது வாய்ப்பு கிடைச்சா, என் நண்பர்களைச் சந்திப்பேன். 1980-களில் நடிச்ச ஹீரோ, ஹீரோயின்கள் சந்திக்கிற நிகழ்ச்சியை வருஷா வருஷம் நடத்திட்டு இருக்கோம். அதில் ரஜினி, சிரஞ்சீவி, அம்ரீஷ்னு நிறையப் பேர் வருவாங்க. இந்த வருஷம் அந்தச் சந்திப்பு சீக்கிரமே என் சென்னை வீட்டில் நடக்க இருக்கு!''

'மலையாள சினிமாவில் சமீப நாட்களாக ஹீரோ வொர்ஷிப் உருவாகிட்டு வருதே?''

'கேரளாவில் வந்து தமிழ்ல பேசுனீங்கன்னா, நல்லாப் புரிஞ்சுப்பாங்க. அதே தமிழ்நாட்டில் மலையாளம் பேசினால்... புரிஞ்சுக்கத் திணறுவீங்க. ஏன்னா, கேரளாவில் எந்த சினிமாவையும் நாங்க விட்டுவைக்கிறது இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி சார் காலத்தில் இருந்தே தமிழ்ப் படங்கள் பார்க்கிறோம். இப்போ விஜய், சூர்யா படங்கள் எல்லாம் பிச்சிக்கிட்டுப் போவுது. அதனால, தமிழ் சினிமா மாதிரியே ஹீரோ வொர்ஷிப் அங்கேயும் ஆரம்பிச்சிருச்சு. இங்கே ஒரு வேண்டுகோள்... சென்னையில் மலையாளப் படங்கள் பத்து நாள் ஓடுறதே பெரிய விஷயமா இருக்கு. நாங்க அங்கே தமிழ்ப் படங்களைப் பார்க்கிறது மாதிரியே நீங்களும் இங்க மலையாளப் படங்கள் பார்க்கணும். அப்போதான் எங்க சினிமா உலகமும்  வளரும்!'

''இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் ஹீரோவா நடிக்கிறதா ஐடியா?''

''என் வயசுக்குத் தகுந்த கேரக்டர் பண்ணத் தான் பிடிக்கும். இங்கேதான் வயசு ஒரு பிரச்னையாப் பார்க்கப்படுது. நான் ஹீரோவாத்தான் பண்ணுவேன்னு அடம்பிடிக்கலை. நல்ல கேரக்டர் எதுவா இருந்தாலும் ஓ.கே. என் ஆசை கடைசி வரைக்கும் சினிமாவில் இருக்கணும். அவ்வளவுதான்!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்