"சும்மா கவிதை எழுதப் போறேன்!” | பார்த்திபன், partiban, கவிதை, kavithai, poem,

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (06/06/2014)

கடைசி தொடர்பு:15:38 (06/06/2014)

"சும்மா கவிதை எழுதப் போறேன்!”

 

லுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்ட ஐம்பெருங்காப்பியங்கள், புத்தரின் முப்பரிமாண படம், புத்தர் பற்றிய புத்தகங்கள், விதவிதமான கலைப்பொருட்கள் சிதறிக்கிடக்க, சிரித்துக்கொண்டே வரவேற்கிறார் இயக்குநர், நடிகர் ரா.பார்த்திபன்.

''புத்தர் அமைதி. நீங்க மூச்சுவிடாம பேசிக்கிட்டு இருக்கிற ஆளு... இதுவும் வித்தியாசத்துக்குத்தானா?''

''ஆர்ப்பரிப்புல ஆரம்பிச்சு அமைதியில் முடியிறதுதான் வாழ்க்கை. நான் புத்தரைப்பற்றி அதிகமா படிக்கிறதுக்கு அவரோட அமைதிதான் காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் சார், 'நாம் எவ்வளவு பேசுகிறோமோ அவ்வளவு விஷயம் தெரியும்னு நினைப்பாங்க. ஒண்ணுமே பேசலைனா எல்லாமே தெரியும்னு நினைச்சுக்குவாங்க’னு சொல்வார். அதனால, நான் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் அதிகமா இருக்கு. அதையெல்லாம் கத்துக்கிட்டதுக்கு அப்புறம் பேசுறதைக் குறைச்சிடுவேனு நினைக்கிறேன்.  மத்தபடி, பெர்சனலா நான் ரொம்ப அமைதியான ஆள்.''

'' 'கதையே இல்லாத படம்’னு ஆடியன்ஸுக்கு சொல்றது ஓகே. தயாரிப் பாளர்கிட்ட எப்படி கதை சொன்னீங்க?''

''இது ஒரு நல்ல கேள்வி. ஆக்சுவலா, தயாரிப்பாளர் மோகன்கிட்ட ஒரு கதை சொன்னேன். 'ஓகே. பண்ணலாம்’னு பச்சைக்கொடி காட்டினார். கொஞ்ச நாள் கழிச்சு 'முதல்ல சொன்ன கதையின் பட்ஜெட்டைவிட 2 கோடி அதிகமாகும்’னு வேற ஒரு கதையை ஓகே வாங்கினேன். இந்த விஷயத்தைப் பேசிக்கிட்டு இருந்தப்போ, தயாரிப்பாளருக்கு ஒரு போன் வந்தது. பேசி முடிச்சுட்டு என்னைப் பார்த்தவர்,  'கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம்’னு ஒரு டைட்டிலை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களாமே? அந்தக் கதையைச் சொல்லுங்க’னு சொன்னார். அந்த படத்தோட கதையைச் சொல்ல மாட்டேனு சொன்னா திமிரா பேசுற மாதிரி இருக்கும். ஆனா, உண்மை அதுதான். அந்த படத்துல கதையே இல்லை. என்மேல நம்பிக்கை இருந்தா, தயாரிங்க. கதையே இல்லாத இந்தக் கதையை உங்களுக்குப் படமாவே காட்டிடுறேன்னு சொல்லிட்டேன். திரும்பவும் பச்சைக்கொடி காட்டிய தயாரிப்பாளர் மோகன் உண்மையிலேயே தங்கமான மனிதர்தான். மத்தபடி, 'கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம்’ படத்துல சுவாரஸ்யமான பல சம்பவங்கள், ஒவ்வொரு காட்சியும் அத்தியாவசியமா இருக்குமே தவிர, அனாவசியமா இருக்காது. முழு படத்தையும் பார்த்துட்டு, 'முதல் பாதி நன்று, ரெண்டாவது பாதி வேஸ்ட்டு’னு  கமென்ட்டெல்லாம் இந்தப் படத்துல அடிக்க முடியாது. அந்த அளவுக்குக் கடுமையா உழைச்சிருக்கோம்.''

''மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டரை நீங்க 'முறையாக’ என்று அறிமுகப்படுத்தியதாக விளம்பரப்படுத்தியதில், மணி வண்ணனை அவமானப்படுத்திவிட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் பேசியிருக் கிறாரே?''

''படத்தோட எடிட்டர் சுதர்சன் என்கிட்ட வரும்போது 'அறிமுக’மாதான் வந்தார். படத்தோட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் ரெடியாகிற சமயத்தில்தான் எனக்கு ஏற்கெனவே அவர் மணிவண்ணன் சாரோட படத்துல வொர்க் பண்ண விஷயம் தெரிஞ்சது. உடனே, அழைப்பிதழ்ல மறு'முறையாக’னு ஒரு கேப்ஷனைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். ஆனா, பத்திரிகை அடிச்சவங்க, நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணியிருப்பேனு நினைச்சு, 'மறு’வை கட் பண் ணிட்டாங்க.  மணிவண்ணன் சாரோட பங்கை நான் எடுத்துக்கணும்னு ஆசைப் படலை. ஆனா, அந்தத் தயாரிப்பாளர் அதிபுத்தி சாலி. 'மறைந்த இயக்குநரை அவமானப்படுத்திய பார்த்திபன்’னு நியூஸ் கொடுத்தா, அவருக்கு விளம்பரம் கிடைக்கும்னு நினைச்சுட்டார். ஆனா இப்போ அது என் பக்கம் திரும்பிடுச்சு.''

''100 வருட சினிமாவுக்காக 'கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம்’ டைட்டில் ஓகே. 67 வருட அரசியலுக்கு ஒரு படம் இயக்கினா என்ன டைட்டில் வைப்பீங்க?''

''அல்வா. நம் நாட்டு அரசியலுக்கு இதைவிட பொருத்தமான டைட்டிலை வைக்க முடியாது.''

'''வேற எதையும் 'கிறுக்க’ ஆரம்பிக்கலையா?''

''சும்மா சொல்றேன்னு நினைச்சுடாதீங்க. 'சும்மா’னே ஒரு கவிதைத் தொகுப்பு ரெடியாகிட்டு இருக்கு!''

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : ஆ.முத்துக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்