Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நல்லா நடிக்கணும்னா நிறையப் படிக்கணும்!”

இளவரசு என்றாலே அந்த நக்கல் பேச்சும் கிராமத்து வெள்ளந்தி வாசமும் ஞாபகத்துக்கு வரும். பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவரிடம் மொக்கை போட்டதில்...

''படத்துக்குப் படம் நக்கல்ல பின்னி எடுக்குறீங்களே, யார் சார் நீங்க?''

''தம்பி நமக்கு மதுரைப் பக்கம் மேலூரு. அப்பா மலைச்சாமி 1967- லிருந்து 71 வரை தி.மு.க மேலூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வா இருந்தவர். நம் நாடு, ஆரிய மாயை, காஞ்சினு புத்தகங்கள் படிக்கக் கொடுத்துக் கேள்வி கேட்பார். அப்பா என்னோட ரோல்மாடல். அரசியலுக்கு லாயக்கில்லாத தங்கமான மனுஷனுக்குப் புள்ளையாப் பொறந்தவன் நான். சினிமாவுல கேமராமேனா போகப்போறேன்னு சொன்னப்போ, ஒழுக்கத்தை எப்பவும் மனசுல வெச்சுக்கனு வாழ்த்தி அனுப்பின மனுஷன். பாரதிராஜா சாரோட ஆஸ்தான கேமராமேன் கண்ணன் சார்கிட்ட கேமரா துடைக்கிறதுல ஆரம்பிச்சு, அசோஸியேட் கேமராமேன் வரைக்கும் பண்ணினேன். தனியா கேமராமேனா 13 படங்கள் பண்ணினேன். நடிக்க வந்தது தனிக் கதையப்பு!''

''எப்போ முதன்முதலா நடிகர் ஆனீங்க?''

''அந்தக் கதையை சொல்லணும்னா, ஃப்ளாஷ்பேக் போகணும் தம்பி. 'கடலோரக் கவிதைகள்’ சின்னப்பதாஸோட சேக்காளிகள்ல நானும் ஒருத்தன்.'முதல் மரியாதை’ படத்துல சிவாஜி சாரை மாட்டிவிடும் அந்த போட்டோகிராஃபர் அடியேன்தான். 'வேதம் புதிது’ படத்துலேயும் 'மண்வாசனை’யிலேயும் என்ன ரோல்ல வர்றேன்னு கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பார்ப்போம். 95-ல 'பசும்பொன்’ல ஆரம்பிச்சு 'தவசி’ வரைக்கும் அப்பிடி இப்படி வந்துட்டுப் போனேன். அப்புறம் 2001-க்கு அப்புறம் ஒருத்தரும் கேமராவுக்குக் கூப்பிடலை. நடிக்க வந்த வாய்ப்பைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன். ஏதோ பிழைப்பு நல்லாவே ஓடுது.''

''என்ன படமானாலும் உங்களுக்கான டயலாக் மட்டும் அப்படியே மண்வாசனையோட இருக்கே, எப்படி?''

''அதுக்கும் அப்பாதான் காரணம். வாசிப்புப் பழக்கத்தை விதைச்சது அப்பாதான். கால்பரீட்சை, அரைப்பரீட்சையில அதிக மார்க் எடுத்தா, புத்தகங் களா வாங்கிக் கொடுப்பார். நண்பர்கள் வட்டாரமும் இடதுசாரி சிந்தனை குரூப். சொல்லவா வேணும்? அவங்களுக்கு சரிசமமா பேசணுமேனு படிக்க ஆரம்பிச்ச பழக்கம் இப்பவும் தொடருது. ஒரு நடிகனுக்கு நல்ல உடல்மொழி தேவை. உடல்மொழிக்கு நிறைய வாசிக்கணும்னு நினைக்கிறேன். அது என்னோட தனிப்பட்ட கருத்து. வாசிக்கிறப்போ நம்மோட கவனம் சிதறாதுனு நம்புறேன். ஊரைவிட்டு வந்தாலும் இன்னும் வட்டார வழக்கு எனக்கு மாறலை. அதுவே ப்ளஸ்ஸாப் போச்சு. சில பேரு ஸ்க்ரிப்ட் எழுதுறப்பவே எனக்கான டயலாக்கை என்னோட மாடுலேஷன்ல எழுதி ஆச்சர்யப்படுத்துறாங்க. சிலபேர், 'அண்ணே இதை அப்படியே நீங்க மாத்திக்கங்கண்ணே’னு சொல்லிடுறாங்க. நம்ம மண்ணுக்கும் மொழிக்கும் மதிப்பு இன்னும் இருக்கு தம்பி. சந்தோஷமாப் போகுது சினிமா வாழ்க்கை.''

''என்ன மாதிரியான ரோல்ல நடிக்க ஆசை?''

''காமெடி வில்லனா நடிக்க அவ்ளோ ஆசை. 'களவாணி’ படத்துலகூட வில்லன் கேரக்டர்தானே பண்ணிருக்கேன். எல்லா அப்பாக்களும் நாம அப்பா ஆகிறவரைக்கும் வில்லனுகதானே. நாம வில்லனா ஆகிறப்போதான், அப்பாக்களும் நம்மளை மாதிரிதான் இருந்தவங்கனு புரியும். இப்போகூட 'இடம் பொருள் ஏவல்’ படத்துல அப்படிப்பட்ட ரோல்லதான் நடிக்கிறேன்.''

''ஆரசியல்ல ஆர்வம் இருக்கா?''

''எலே அய்யா, அரசியல் அப்பாவோட போகட்டும். நமக்கு சுத்தப்படாது. தி.மு.க மேல  அதிருப்தி ஆகி வைகோ வெளியேறின காலத்துல வெளியேறி வந்தவர்தான் எங்க அப்பாரு. இப்போ அரசியல்லாம் ஓட்டுப்போடுறதுக்கு மட்டும் வெச்சுக்குவோம். இல்லைனா பொழப்பு நாறிப்போயிடும்யா... என்ன நான் சொல்றது?''  

- ஆர்.சரண், படம்: வீ.சிவக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்