மரண பயத்தைக் காட்டிட்டீங்களே! | அப்புச்சி கிராமம், ஆனந்த், appuchi gramam, anand

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (14/06/2014)

கடைசி தொடர்பு:12:38 (14/06/2014)

மரண பயத்தைக் காட்டிட்டீங்களே!

'சாகிற நாள் தெரிஞ்சுபோச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும்’ சூப்பர் ஸ்டார் பேசிய மாஸ் பன்ச் இது. ஆனால், 'அதெல்லாம் இல்லை. சாகிற நாள் தெரிஞ்சுபோச்சுனா சந்தோஷமா இருப்பாங்க’ என்கிறார் 'அப்புச்சி கிராமம்’ படத்தின் இயக்குநர் ஆனந்த்.

''ஈரோடுதான் என் ஊர். ஆர்க்கிடெக்சர் படிச்சிருந்தாலும் சினிமாதான் இலக்கா இருந்ததால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். 'அப்புச்சி கிராமம்’ என்னுடைய முதல் படம்'' - அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் ஆனந்த்.

''எங்க ஊர்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஒருத்தர் இருந்தார். 50 வயசு வரைக்கும் அப்படியே வாழ்ந்துட்ட அவருக்கு ஒருநாள் புற்றுநோய் இருக்குனு டாக்டர் சொல்ல, அதுக்கப்புறம் ஆள் முழுசா மாறிட்டார். சண்டை போட்டவங்க எல்லோர்கிட்டேயும் அவராவே போய் சந்தோஷமா சிரிச்சுப் பேசினார். ஒருநாள் இறந்தும் போயிட்டார். அப்போதான் 'அப்புச்சி கிராமம்’ ஐடியா கிடைச்சது. ஊர்ப் பக்கம் தாத்தாவை அப்புச்சினு சொல்லுவோம். அப்புச்சின்னாலே அன்பான, வெகுளித்தனமான தாத்தாதான் என் ஞாபகத்துக்கு வருவார். இந்தக் கதையும் அன்பான, வெகுளித்தனமான ஒரு கிராமத்தைப் பற்றியதுங்கிறதால 'அப்புச்சி கிராமம்’னே வெச்சுட்டேன். மொத்த ஊரே எட்டு நாள்ல அழியப்போகுதுனா, அந்த ஊர்ல இருக்கிறவங்களோட மனநிலை எப்படி இருக்கும்? அந்த எட்டு நாள்ல கிராம மக்களுக்குள்ளே என்னென்ன விஷயங்கள் நடக்குதுங்கிறதைப் பதிவு பண்ணியிருக்கோம். குறிப்பிட்ட பகுதியில் விண்கல் விழப்போகுது, அதை விஞ்ஞானிகள் எப்படி தடுப்பாங்கங்கனு நகம் கடிச்சுக்கிட்டே படம் பார்க்கிற அனுபவத்தையெல்லாம் நிறைய ஹாலிவுட் படங்கள் கொடுத்திருச்சு. அதனால 'விண்கல்’ என்கிற விஷயத்தை வெச்சுக்கிட்டு, 'சாகப்போறோம்’கிற மனநிலையில் மொத்த ஊர் மக்களுடைய உணர்வுகளும் நடத்தைகளும் எப்படி இருக்கும்னு காட்டுறதுதான் 'அப்புச்சி கிராமம்''

சிறிய இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார். ''இதில் விண்கல்லை கான்செப்ட்டா எடுத்துக்கிட்டதுக்குக் காரணம், அவ்வளவு பெரிய டைனோசர் இனம் அழிஞ்சதுக்கே விண்கற்கள்தான் காரணம்னு சொல்றாங்க. கிராமத்துல இருக்கிறவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கனு யோசிச்சுப் பாருங்க. எங்க படத்தோட செய்தியைப் படிச்சுட்டு 'சில வருஷத்துக்கு முன்னாடி எங்க கிராமத்துல விண்கல் விழப்போகுதுனு வதந்தி பரவி... அந்த ஊர் மக்களெல்லாம் ஒண்ணு கூடி, அவங்கவங்ககிட்ட இருக்கிற பணத்தையெல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தாங்க’னு ஒருத்தர் சொன்னார்'' என்றவரிடம்,

''பெரும்பாலான வித்தியாச முயற்சிகள் புதுமுகங்களை வெச்சுப் பண்ணும்போது, ரசிகர்கள்கிட்ட சரியாப் போய் சேர்றதில்லை. இருந்தாலும் ஏன் ரிஸ்க் எடுக்கிறாங்க?'' எனக் கேட்டபோது,

''இதை ஓர் உதவி இயக்குநர் பாயின்ட்ல இருந்து யோசிச்சுப் பாருங்க. பெரிய நடிகர்கிட்ட கதை சொன்னா, 'ஓப்பனிங் சாங்ல யார் என்கூட ஆடப்போறா?’, 'எனக்கு வில்லன் யாரு?’ங்கிற கேள்விகளைச் சமாளிக்கணும். 'விண்கல்தான் சார் இதுல வில்லன்’னு சொன்னா, 'அப்போ நான் யார்கிட்ட பன்ச் பேசுறது’னு கேட்பாங்க. முதல் ரெண்டு கேள்விகளை விடுங்க. இந்த மூணாவது கேள்விக்கு என்கிட்ட பதில் மட்டுமில்ல, கதையும் கிடையாது. தவிர, இந்தத் தயாரிப்பாளருக்கே ஆறு வருஷம் வெயிட் பண்ணியிருக்கேன். நாங்க ரிஸ்க் எடுக்கலை, எடுக்கவைக்கிறாங்க!'' என்கிறார் ஆனந்த்.

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்