வில்லனா நடிக்கணும்!

120 படங்கள், 150 சீரியல்கள், 75-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை என்று கைவசம் பெரிய பட்டியல் வைத்திருக்கும் மங்களநாத குருக்களைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெரும்பாலான படங்களில் அர்ச்சகர் இவர்தான்.

 ''நான் பூஜை போடுற சீரியல்கள், படம் எல்லாமே நல்லாப் போகும்னு நம்புவாங்க. எப்பவுமே சினிமா இன்டஸ்ட்ரி என்னை மிஸ் பண்றதே இல்ல. கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 100 படங்கள் பூஜை போட்டிருக்கேன். கடந்த 11 வருடங்கள்ல 'சூப்பர் குட் பிலிம்ஸ்’ படங்கள் எல்லாத்துக்கும் நான்தான் பூஜை போட்டிருக்கேன். கூடவே நடிக்கவும் செய்றேன்.

நான் சம்பளத்துல எப்பவுமே பேரம் பேசினது கிடையாது. என்னைப் பொருத்தவரைக்கும் பங்க்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். சரியான டைம்ல ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பேன். என்ன பிரச்னையா இருந்தாலும் சரி. ஆரம்பத்துல நடிச்ச ஒரு சில படங்களுக்குப் பிறகு, ஷாட்டுக்கு போனேன்னா, ஒரே டேக்ல ஓகே ஆகி வந்துடுவேன். 'இது மட்டுமல்லாமல் நிறையத் திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்த பூஜைகளுக்கும் போய்ட்டு இருக்கேன்'' என்றவர்,  

''விஜய் டி.வி-யோட 'யாமிருக்க பயமேன்’ சீரியல்ல, போகர், ஐயர், ஜோசியர், முருகர் என்று நான்கு ரோல்கள் பண்ணியிருந்தேன். 'ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் கேரக்டர் ரோல்ல நடிச்சது நீங்கதான்’னு வடிவுக்கரசி அம்மா என்னைப் பாராட்டினாங்க. 'திருமதி செல்வம்’ சீரியலிலும் நான் நெகட்டிவ் ரோலில் நடிச்சிருந்தேன். பிராமின் கேரக்டர் பண்ணிட்டு நீங்க வில்லன் ரோல் பண்ணலாமானு சிலர் கோவிச்சுக்குவாங்க. அதுல ஒருத்தர் உச்சத்துக்குப் போய் போன் போட்டு மிரட்ட ஆரம்பிச்சிட்டார். வேற வழியில்லாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். போலீஸார் மிரட்டினவரை வரவழைச்சு, 'அது ஒரு நடிப்பு, தொழில், இதுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் எதுவும் சம்பந்தம் இல்லைனு’ புரியவெச்சு அனுப்பிவெச்சாங்க. எந்தப் படம் வந்தாலும் சரி உடனே போய் பார்த்துடுவேன். அதுல என்னோட ரோல் எப்படி வந்திருக்குனு இன்னும் கொஞ்சம் அதிகமா அக்கறை எடுப்பேன். எதிர்காலத்தில் படங்களில் என்னை வில்லனாகப் பார்க்கலாம்'' என்கிறார்!

- வே.கிருஷ்ணவேணி

படம்: வீ. நாகமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!