ஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்! | ப்ரஜின், சாண்ட்ரா, மணல் நகரம், prajin, sandra, manal nagaram,

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (02/07/2014)

கடைசி தொடர்பு:13:01 (02/07/2014)

ஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்!

ஷாரூக்கான், மாதவன், தொடங்கி சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களின் வரிசை தொடர்கிறது.இந்த டிவி டூ மூவி வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு நடிகர் ப்ரஜின்.

சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த வீடியோ ஜாக்கி ப்ரஜின், இப்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.அண்மையில் 'மணல் நகரம்' படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாயிலிருந்து வந்தவரிடம் பேசிய போது..

டிவியிலிருந்து சினிமாவுக்கு  என்று வந்தவர் நீங்கள். சினிமாவில் நுழைய இது சுலபமான வழியா?
'' அப்படிச் சொல்ல முடியாது. டிவியிலிருந்து சினிமாவுக்கு ஷாரூக்கான், மாதவன் போன்ற சிலர் வந்து வெற்றி பெற்றார்கள். ஆனால், எல்லோராலும் இப்படி வர முடியவில்லை. ஏனென்றால், டிவியில் பிரபலமான முகத்தை சினிமாவில் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிற அபிப்ராயம் இருந்தது. வீட்டுக்கு வீடு பார்த்து பழகிய முகத்தை சினிமாவில் ஏற்கமாட்டார்கள், சலிப்பு தரும் என்கிற தவறான அபிப்ராயம் இருந்தது''.

 சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வரவேற்பு அதை மாற்றி இருக்கிறதே..?
'' இப்போது நிலைமை மாறி இருக்கிறது. ஏற்கெனவே மக்களிடம் பரிச்சயமாகியிருக்கும் முகம் சினிமாவில் வரும்போது நல்லதுதான் விளையும் என்கிற கருத்து இப்போது வந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை நல்ல அறிகுறியாகவே நினைக்கிறேன். ஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்''.

சினிமா வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன?
'' நான் முதலில் நடித்தது மலையாளப் படத்தில்தான் .அந்தப் படம் 'த்ரில்லர்', அதில் நான் இரண்டாவது ஹீரோ. அதன்பிறகு லால் இயக்கத்தில் 'டோர்னமெண்ட்'. தமிழில் நான் நடித்த முதல் படம் 'தீக்குளிக்கும் பச்சைமரம்'   வினீஷ்- ப்ரவீன் என இரண்டு பேர் இயக்கினார்கள்.'தீக்குளிக்கும் பச்சைமரம்,'டோர்னமெண்ட்' இரண்டுமே வித்தியாசமான கதைகள். ஒன்று மார்ச்சுவரி சம்பந்தப்பட்ட கதை. இன்னொன்று விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை.இப்போது நடிகர் சங்கர் இயக்கத்தில் 'மணல் நகரம்' படத்தில் நடித்து முடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க துபாயில் எடுக்கப்பட்டது.அடுத்து 'பழைய வண்ணாரப் பேட்டை' என்கிற படம். இதுவும் எனக்கு வித்தியாசமான அனுபவம்தான்'' .

'மணல் நகரம்' துபாய் அனுபவம் எப்படி இருந்தது?
'' இது உண்மைச் சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம். நாடுவிட்டு நாடு போய் பிழைப்புக்காகச் செல்லும் நம் நாட்டவர்கள் அந்நாட்டு சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள். ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது அந்நாட்டு சட்டத்திலிருந்து மீண்டுவர என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சொல்லும் படம். சுமார் 50 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரண்டு மாதங்கள் தவிர அங்கு வெயில் சுட்டெரிக்கும்.  சாதாரண நாட்களிலேயே நம்மூர் கத்திரி வெயிலைப் போல நாலுமடங்கு கொளுத்தும். அப்படிப்பட்ட வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.இதில் நான் மன்சூர் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறேன். முழுப்படமும் அங்கேயே முடிந்தது ''. 

 யாரை முன்னோடியாக எண்ணி வளர விரும்புகிறீர்கள்?
'' வீடியோ ஜாக்கி வேலையை விட்டு விட்டு. பல வருஷங்கள் இருந்துவிட்டு சினிமாவுக்கு பயணப் பட்ட போது நிறைய புறக்கணிப்புகள் ஏமாற்றங்கள் இருந்தன.ஏழெட்டு வருஷப் போராட்டங்கள். அப்போது சினிமாவின் கதவுகள் திறக்கவே இல்லை. விடாமல் போராடினேன். இப்போதும் போராட்டம் இருக்கிறது.நாம் நம் வேலையைச் சரியாகச் செய்தால் நிச்சயம் ஒருநாள் கவனிக்கப் படுவோம். ஈடுபாடு, தேடல், முயற்சி, உழைப்பு, நம்பிக்கை இவற்றை கைவிடவே கூடாது. இது நான் விக்ரம் சாரிடம் கற்றது. போராடி ஜெயித்த விதத்தில் அவர் ஒரு பாடமாக என்முன் தெரிகிறார். நடிப்பின் இலக்கணமாக கமல்சார் இருக்கிறார். அவரை மிகவும் பிடிக்கும். இந்த விஷயத்தில்அவர் ஒரு முன்னோடி''.

லட்சியம்?
'' நல்ல கதைகளுக்கு தமிழில் வரவேற்பு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க ஆசை. நம் கதாபாத்திரங்கள்தான் நம்மை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்கிற தெளிவும் நம்பிக்கையும் எனக்கு உள்ளது ''.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்