“காமெடி வொர்க்-அவுட் ஆகலை!” கார்த்தியின் புது ரூட் | கார்த்தி, மெட்ராஸ், ரஞ்சித் , karthi, madras, ranjith

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (03/07/2014)

கடைசி தொடர்பு:15:02 (03/07/2014)

“காமெடி வொர்க்-அவுட் ஆகலை!” கார்த்தியின் புது ரூட்

'''காமெடி, ஆக்ஷன் நிறையப் பண்ணிட்டீங்க... நெஞ்சுக்கு நெருக்கமா மனசுல தைக்கிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க’னு ரசிகர்கள், நண்பர்கள் சொல்வாங்க. அப்பதான் புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ற ஸ்க்ரிப்ட்டோட வந்தார் 'அட்டகத்தி’ ரஞ்சித். 'அழுக்கு அரசியலும் அரிவாள் அடிதடியும்’னு அதுவரை வட சென்னை பத்தி இருந்த பார்வையை மாத்துற அளவுக்கு இருந்தது அந்த ஸ்க்ரிப்ட். ஃபுட்பால் பயிற்சிக்காக பிரேசில் போகும் இளைஞர்கள், கிழக்குக் கடற்கரை சாலை ஐ.டி நிறுவன ஊழியர்கள்னு கடந்த 25 வருஷத்துல வட சென்னை பெரிய அளவுல மாறியிருக்கு. அதுக்கு நடுவுல அப்பாவி மக்களின் வறுமையை வியாபாரமாக்கும் அரசியலும், பழி தீர்க்கும் பகையும் அங்கே இன்னும் ஏராளமா மிச்சம் இருக்கு. 'இன்னும் எதுக்கு யோசிக்கிற கார்த்தி?’னு மனசுக்குள்ள ஒரு மணி. 'இதை நாமே பண்ணலாமே’னு ரஞ்சித்கிட்ட கேட்டேன். 'நீங்க பண்றதா இருந்தா, இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணணும்’னார். உடனே கமிட் பண்ணிட்டேன். 'மெட்ராஸ்’ எனக்கு ரொம்ப முக்கியமான படம்!'' - படம் முடிவதற்கு முன்னரே கார்த்தி இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது... ஆச்சர்யம்!

''இந்தப் படத்துல ஒரு சுவருக்கு முக்கியமான கதாபாத்திரம். மனிதர்களின் வாழ்க்கையை அது எப்படி ஆக்கிரமிக்குது, இன்ப-துன்பங்களுக்கு எப்படிக் காரணமா இருக்குனு அந்தச் சுவர் போர்ஷன் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். படத்தில் அந்தச் சுவருக்குதான் ஓப்பனிங் பில்ட்-அப் இருக்குமே தவிர, ஹீரோவுக்கு இருக்காது!'' - தன் நம்பிக்கைக்கு இன்னும் அழுத்தம் சேர்க்கிறார் கார்த்தி.

''ஜாலியான நம்ம தெருப் பையன் மாதிரி நடிச்சுட்டுப் போவீங்க. ஆனா, நீங்க இவ்ளோ பேசுறதே ஆச்சர்யமா இருக்கே?''

''இந்தப் படத்துல, நடிக்கும்போது எனக்கு இருந்த சவால் என்ன தெரியுமா? 'இதில் நடிச்சிடக் கூடாது’ங்கிறதுதான். 'மெட்ராஸ்’ படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி, ஒரே விஷயத்தைத் தொடர்ந்து செஞ்சுட்டே இருந்தா வருமே ஒரு அலுப்பு... அப்டித்தான் நான் இருந்தேன். ஆனா, 'மெட்ராஸ்’ ஸ்கிரிப்ட்  எனக்குப் புதுசா எதையோ கத்துக்கொடுத்த மாதிரி இருந்தது. முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கும் எல்லோரும் வட சென்னைவாசிகள். அவங்கள்ல ஒருத்தனா மாறணுங்கிறதுதான் எனக்கான சவால். 'உங்களுக்கு மெட்ராஸ் ஸ்லாங் நேச்சுரலா வருது. தனியா சொல்லித்தர வேண்டிய அவசியமே இல்லை’னு சொன்ன ரஞ்சித், சிவப்பு கலர் செருப்பு, 30 ரூபாய் டிராக் பேன்ட், ஒரு பனியன்னு காஸ்ட்யூம் கொடுத்தார். போட்டுட்டு நின்னதும், ' 'காளி’யாவே இருக்கீங்க கார்த்தி’ன்னார். இப்போ ரஷ் கட் பார்க்கிறப்ப, 'காளி’யை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிக்கும்!''

''நிறைய ஹிட் கொடுத்த நீங்க, இன்னும் 'பருத்தி வீரன்’ அடையாளத்தை மறக்கும் அளவுக்கு ஒரு கேரக்டர் பண்ணலையே?''

''நிச்சயம் 'காளி’ அதுக்குப் பதில் சொல்வான். ஏன்னா, இந்தப் படத்தோட ஒவ்வொரு ஃப்ரேமையும் கதையும் திரைக்கதையும்தான் தீர்மானிச்சது. 'தொங்கும் வொயர்கள், பிங்க், ப்ளூ, பச்சைனு அடிக்கும் நிறங்கள்னு வட சென்னைக்குனு ஒரு கல்ச்சர், நேச்சர் இருக்கு. அது எதையும் மாத்தாம உள்ளதை உள்ளபடியே எடுப்போம்’னு ரஞ்சித் சொன்னார். ஷூட்டிங் நடந்தப்போ, 'வீட்டுக்குள்ளேயே வாழ்ந்துட்டு இருக்கோம் சார். ஒரு சில ஷாட்டாச்சும் கொஞ்சம் திறந்தவெளியில் எடுப்போமே’னு சொன்னேன். 'ஃபைனலா பாருங்க. கரெக்ட்டா இருக்கும்’னார். படம் பார்த்த பிறகு அவர் சொன்னது சரினு புரிஞ்சது. தேங்கிக்கிடக்கும் மழைத் தண்ணியில் சல்லுனு பைக்ல வருவேன். ரெண்டு கோழிகள் அப்படியே தாவிப் போகும். ஒரு அம்மா, இயல்பா என்னைப் பார்த்து சிரிச்சுட்டுப் போவாங்க. கோழி வளர்க்கிறவங்களும், பாசமான மனுஷங்களும் வட சென்னையில் இன்ச் இன்ச்சா பரவிக்கிடக்காங்கனு, பக்கம்பக்கமா பேசப் வேண்டிய வசனத்தை அந்தச் சில நொடி காட்சிகள் உணர்த்திடும்.

நடுராத்திரியில் திடுக்னு ஒரு சத்தம் வரும். அதுக்கு யாராவது ஒருத்தர் கதவைத் திறந்து பார்க்கிற மாதிரியோ, ஜன்னலைத் திறந்து பார்க்கிற மாதிரியோ சீன் வெச்சிருக்கலாம். ஆனா, தூங்கிட்டு இருக்கிற கோழி திடீர்னு கண்ணைத் திறந்து பார்க்கும். பார்த்தா கடகடனு ஒரு குரூப் ஓடிட்டு இருப்பாங்க. ஏதோ கிரைம் நடந்திருக்குனு அந்த ஒரு சீனே புரியவைச்சிடும். இப்படி விஷூவலா உண்மைக்கு ரொம்பப் பக்கத்துல போயிருக்கோம். அதனால, எனக்கு 'மெட்ராஸ்’ நிச்சயம் பெஸ்ட் சினிமாவா இருக்கும்!''

''ரொம்ப உயிரோட்டமான படம்னு சொல்றீங்க. அறிமுக ஹீரோயின்; அதுவும் தமிழ் தெரியாதவங்க... கேரக்டரைத் தாங்குவாங்களா?''

''கேத்ரீன் தெரேசாவுக்கு இயல்பாவே திராவிட முகம். துபாய்ல வளர்ந்தவங்க; பெங்களூருல படிச்சவங்க; தெலுங்கு சினிமாக்களில் நடிச்சிருக்காங்க. 'மெட்ராஸ்’னு சொன்னதும், 'ரிச் காஸ்ட்யூம்ல ஸ்டைலான படமா இருக்கும்’னு நினைச்சு வந்திருப்பாங்க போல. கதையைக் கேட்டதும் ஆடிப்போயிட்டாங்க. 'இந்தக் கலையரசி கேரக்டர் ரொம்ப அபூர்வம்’னு ஆர்வமா வொர்க்ஷாப்ல கலந்துக்கிட்டாங்க. பட மேக்கிங்கின்போது ரொம்ப இன்வால்வ் ஆகிட்டாங்க.''

'' 'பையா’ சமயத்தில் இருந்த குழந்தைகள், குடும்ப ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவெச்சுக்கலையோனு நினைக்கிறீங்களா?''

''அப்படியா சொல்றீங்க? இன்னைக்கும் குழந்தைகள் பார்க்கும்போது, 'ஜிந்தாத்தா...’ சொல்றாங்க. 'கார்த்தி மாமா’னு கொஞ்சுறாங்க. குழந்தைகள், பெண்களுக்கு ஓவர் ஆக்ஷன் பிடிக்காதுனு காமெடிப் பக்கம் ஒதுங்கினேன். அது சரியா வொர்க்-அவுட் ஆகலை. 'சரியா இருக்கும்’னு நினைச்சுதான் ஒவ்வொரு முயற்சியும் எடுக்கிறோம். அது சக்சஸ் ஆகலைன்னா, நாம ஒண்ணும் பண்ண முடியாதே. 'மெட்ராஸ்’ கதை எனக்குப் பிடிச்சிருந்துச்சு; பண்ணணும்னு தோணுச்சு. நடிச்சுட்டேன். இனி முடிவு சொல்ல வேண்டியது ரசிகர்கள்தான். இன்னொரு விஷயம் இங்கே சொல்லணும், 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ சரியா போகலைன்னதும், டைரக்டர் ராஜேஷ்கூட நான் சரியாப் பேசுறது இல்லைனு எழுதினாங்க. எனக்குப் படத்தின் வரவு-செலவைவிட உறவே முக்கியம். ஏன்னா, காசு-பணத்தைவிட அன்பிலும் நம்பிக்கையிலும்தான் சினிமா இயங்கிட்டு இருக்குனு நினைக்கிறேன். ஒண்ணு ரெண்டு வெற்றிகள், எல்லாத்தையும் மறக்கடிச்சிடும்!''

''வீட்ல பாப்பா என்ன சொல்றா?''

''என் மகள், அப்பா செல்லம். மழலைக் குரல்ல, 'தோசை... இட்லி’னு சொல்லும்போது, ஓடி ஓடி ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்கேன். 'பிரியாணி’ படத்துல வரும் 'நானனனா...’தான் அவங்களுக்குப் பிடிச்சப் பாட்டு. அவங்க தூங்கணும்னா அந்தப் பாட்டு பாடியாகணும். 'என்னடா... கிளப் ஸாங் எப்படித் தாலாட்டாகும்?’னு கேட்கக் கூடாது. தாலாட்டு டோன்ல பாடித் தூங்கவெக்கிறாங்க. குழந்தையை அதிகமா டி.வி பார்க்கவிடுறது இல்லை. முடிஞ்ச அளவுக்கு நார்மலா வளர்க்க முயற்சி பண்றோம். ஆனா, அவங்க நம்மளைவிட பயங்கர ஸ்மார்ட்!'' - பூரிப்பாகச் சிரிக்கிறார் கார்த்தியப்பா!

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்