பிரகாஷ்ராஜ் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேனா? | குமரவேல், kumaravel, பிரகாஷ்ராஜ், prakashraj, பொன்னியின் செல்வன்,ponniyin selvan

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (04/07/2014)

கடைசி தொடர்பு:12:16 (04/07/2014)

பிரகாஷ்ராஜ் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேனா?

பிரகாஷ்ராஜ் தயாரிப்பு என்றால், கண்டிப்பாக அதில் இளங்கோ குமரவேல் இருப்பார். 'உன் சமையலறையில்’ படத்திலும்...

''பிரகாஷ்ராஜ் உங்களை மொத்தமா குத்தகை எடுத்துட்டாரா?''

''அட நீங்க வேற. அவர் படத்துல நல்ல நல்ல ரோல்கள் வருது. அதான் நடிக்கிறேன். அதுக்காக, மற்ற யாரும் வாய்ப்பே தரலைனு நினைச்சுடாதீங்க. வாய்ப்புகள் வருது. ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான நல்ல பாத்திரங்கள் அமையலை. நல்ல ரோல் குடுத்தா, யார் வேணும்னாலும் என்னை டெண்டர் எடுத்துக்கலாங்கோ.''

''இப்படியே எத்தனை காலம் துணை நடிகராகவே நடிப்பீங்க? வயசாகிட்டே போகுதே. ஹீரோவா நடிக்கலாம்ல?''

''ஸ்டாப் தட் கொஸ்டீன். எனக்கு 47 வயசுதான் ஆகுது. நீங்க கேக்கிறதைப் பாத்தா... அய்யய்யோ எனக்கு இனிமே லவ் புரொபோசல்ஸ் வராதா? ஹீரோவா நடிக்க முடியாட்டிக்கூட பரவாயில்ல. வில்லனா வந்து உங்க எல்லோரையும் மிரட்டாம விட மாட்டேன்.''

''சினிமாவும் நானும்- சொல்லுங்க பார்ப்போம்''

''நான் அடிப்படையில் ஒரு தெருக்கூத்து கலைஞன். நாடகக்கலையில் முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கேன். நாசர் சார்தான் என்னை பாத்து 'மாயன்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் ராதாமோகன் அண்ட் பிரகாஷ் ராஜ் சார் கூட்டணி என்னை சினிமாவுல தொடர்ந்து வாய்ப்பு தர்றாங்க. தெருக்கூத்து, சினிமா ரெண்டுமே அற்புதமான கலைதான்.''

'' 'அபியும் நானும்’ படத்தில் பிச்சைக்காரனா தத்ரூபமா நடிச்சீங்களே...அனுபவம் எப்படி?''

''இதுவரைக்கும் பிச்சை எடுக்கலை. ஆனா பிச்சைக்காரன் கெட்டப்புக்கு தலையில விக் வெச்சதும் 'அபியும் நானும்’ படத்தோட ஆர்ட் டைரக்டர் கதிர் எனக்கு 50 பைசா பிச்சை போட்டார். அப்புறம் ராதா மோகன் என்னைப் பார்த்துட்டு மேக்கப்புக்குப் பிறகும்கூட இவர்கிட்ட பெருசா வித்தியாசம் தெரியலையேனு கலாய்ச்சாரு பாருங்க... அப்போதான் எனக்கே என் மேல கொஞ்சம் டவுட்டா இருந்துச்சு.''

''ஒரு பொண்ணோட சேலையைப் பிடிச்சு இழுத்தீங்கனு கேள்விப்பட்டோமே?''

'' நான் சினிமாவுலதான் காமெடி பீஸ். ஆனா தெருக்கூத்துல  வில்லன். அதுவும் தி கிரேட் துரியோதனன். அப்போதான் அந்த பாஞ்சாலியோட சேலையைப் பிடிச்சு இழுத்தேன். இதைப் பார்த்த கிராமத்துப் பொண்ணுங்களுக்கு தெய்வம் வந்துருச்சு. அப்புறம் எல்லோரும் சேர்ந்து என்னை சுத்தி வளைச்சுட்டாங்க. அந்த சாமிங்களுக்கு சூடம் காட்டின பிறகுதான் நான் அங்கே இருந்து தப்பிச்சு வந்தேன். ஒரு நெசத்தை சொல்லவா. பாஞ்சாலியா நடிச்சது ஒரு பொண்ணே இல்ல. அவ்வ்வ்..!''

''வெற்றிகரமாக மேடையேறிக்கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் ஸ்கிரிப்ட் எழுதியதோடு நடிக்கவும் செய்திருக்கிறீர்களே? அதைப்பற்றிச் சொல்லுங்கள்...''

''பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து ஒரு கிளைக்கதையை எடுத்து நாடகம் ஆக்கலாமா, அல்லது பொன்னியின் செல்வன் நாவலையே நாடகம் ஆக்கலாமா என்று யோசித்தேன். எனக்கு ரெண்டாவதுதான் சரின்னு பட்டது. கல்கியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம் அவருடைய நகைச்சுவையும் எளிமையும் கலந்த எழுத்துதான். கல்கியின் எழுத்தே அலங்கார மொழியாக இல்லாமல் பேச்சு மொழியாகத்தான் இருக்கிறது. அதனால் அவரது எழுத்தை அப்படியே பயன்படுத்தலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கெனவே 1999-ல் ஒய்.எம்.சி.ஏ வில் பொன்னியின் செல்வன் நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறோம். அப்போ திறந்த வெளியில் வானமே கூரையாக இருந்தது. இப்போதோ அரங்கத்தில். நாவலைப் படித்தவர்கள் முழுத் திருப்தி அடைய வேண்டும், நாவலைப் படிக்காதவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். மூன்றரை மணி நேரத்துக்குள் நாடகத்தின் முக்கியப் பகுதிகளைக் கொண்டுவர வேண்டும். கல்லூரி மாணவர்கள் பலரும் நாடகம் பார்க்க வந்திருந்தது நானே எதிர்பார்க்காத ஒன்று. பெரும்பாலும் பத்து மணிக்கு மேல் முடியக்கூடிய நாடகத்தை, பார்த்தவுடன் எல்லோரும் கலைந்து சென்றுவிடுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் 60 கலைஞர்களை கடைசியாக அறிமுகப்படுத்தும்போதும் மக்கள் நின்று கரவொலி எழுப்பிவிட்டுப் போனார்கள். நாடகம் நடந்த ஏழு நாட்களும் நல்ல வரவேற்பு. சென்னையில் முடிந்த நிலையில் மதுரையிலும் வெற்றிகரமாக மேடையேற்றம்.

அடுத்து தமிழகம் முழுக்க நடத்த உள்ளோம். பொன்னியின் செல்வனை நாடகமாக்கியதை என் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன்!''

- பொன்.விமலா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்