“ஒண்ணு... தற்கொலை இல்லைன்னா... கொலை. நான் ரெண்டையுமே பண்ணலை!” பிசாசு மிஷ்கின் | மிஷ்கின். பிசாசு, mysskin, pisasu

வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (08/07/2014)

கடைசி தொடர்பு:10:06 (08/07/2014)

“ஒண்ணு... தற்கொலை இல்லைன்னா... கொலை. நான் ரெண்டையுமே பண்ணலை!” பிசாசு மிஷ்கின்

''அவன் கையெடுத்துக் கும்புடுறான்... அப்போ அடிக்கக் கை ஓங்குற... பாரு பாரு... என்ன நடக்குதுனு பாரு. அப்டியே அந்த ஒரிஜினல் எமோஷன் வரணும்'' - ஹீரோவுக்கு உத்தரவு கொடுத்துவிட்டுத் திரும்புகிறார் இயக்குநர் மிஷ்கின்.

''ரொம்பக் கொடூரமான ஃபைட் இது. நிஜ வாழ்க்கையில் சண்டை போடத் தெரியாத, சண்டை போட விரும்பாத ஒருத்தன், சண்டை போட்டா எப்படி இருக்குமோ... அப்படி இருக்கும்! என் ஹீரோ ரெண்டு டஜன் பேரை பறந்து பறந்து அடிச்சு ரத்தம் கக்கவைக்கிறவனா இருக்க மாட்டான்ல... இவன் அடி வாங்கிறவன். தோத்துக்கிட்டே இருக்கான். ஒருநாள் அடிக்கிறான். அந்த அடி, மரண அடியா இருக்கும்'' - சென்னை அண்ணா சாலை பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதையில் நள்ளிரவில் படமாகிக்கொண்டிருக்கிறது 'பிசாசு’!

''அதென்ன பிசாசு?''

''இது ஒரு பிசாசைப் பத்தின கதை... அவ்வளவுதான்! நம்ம ஊர்கள்ல ஒவ்வொரு புளிய மரத்துக்கும் ஒரு பேய்க் கதையோ, நீலிக் கதையோ இருக்கும். அப்படி ஒரு கதை இது. இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சப்போ, சொர்க்கம்-நரகம் பத்தின குழப்பங்கள் எனக்குள்ள இருந்தன. சொர்க்கம் எதுனு ஒரு பிசாசு தீர்மானிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு, அந்தக் கோட்டுல பயணிச்சு இந்தக் கதையை முடிச்சேன். வழக்கமா சொர்க்கத்தை கடவுளர்கள்தான் தீர்மானிப்பாங்க. இந்தப் படத்தில் சொர்க்கத்தை ஒரு பிசாசு தேவதை தீர்மானிக்குது. உண்மையிலேயே பிசாசு இருக்கா, அதெல்லாம் உண்மையா... அந்தக் கேள்விகளுக்குள் நான் போகலை. எனக்கே அதைப் பத்தி எந்தத் தெளிவும் கிடையாது.

தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை. ஆனா, இந்த உலகத்துக்கு, பிசாசு கள் தேவைனு மட்டும் தோணுது. பிசாசுகள் இருந்தா இந்த உலகம் இன்னும்கூட அழகா இருக்கும். கதையை மொத்தமா முடிச்சுட்டு, 'பிசாசு’, 'காற்று’னு ரெண்டு தலைப்புகளை இயக்குநர் பாலாகிட்ட சொன்னப்போ, அவர் சிரிச்சார்; நானும் சிரிச்சேன். 'பிசாசு’ங்கிற தலைப்பு முடிவாச்சு!''

''படத்துல 'பிசாசு தேவதை’ யாரு?''

''ரொம்பச் சாதாரணமா, ஆனா ஏதோ ஒரு வசியம் இருக்கிற மாதிரி ஒரு பொண்ணைத் தேடிக்கிட்டே இருந்தேன். கேரளாவுல இருந்து டான்சர் உருவத்துல வந்தாங்க அவங்க. பேருகூட என்னமோ... (உதவியாளர்களிடம் சத்தமாகக் கேட்கிறார்... 'டேய்... வாட் இஸ் தட் கேர்ள்ஸ் நேம்?’ 'பிரயாகா சார்’!) ஆங்... பிரயாகா. இந்தப் படத்தோட பெரிய பலம் அந்தப் பொண்ணுதான். தயாரிப்பாளர் ரமேஷின் மகன் நாகாதான் படத்தின் ஹீரோ. லண்டன்ல ஃபிலிம் டெக்னாலஜி முடிச்சுட்டு வந்தவன். ரெண்டு மாசமா என் கூடவே தங்கியிருந்து 'பிசாசு’ படத்துக்காகத் தன்னை டிசைன் பண்ணிக்கிட்டான்!''

''நீங்க நடிச்சிருக்கீங்களா படத்துல?''

''நான் நடிக்கிறேன்னு சொன்னா யார் தயாரிப்பாங்க? எனக்கும் போர் அடிக்குது. இந்தப் படத்துல ராதாரவி சார் முக்கியமான ஒரு கேரக்டர் பண்றார். அது பெரிய வைபரேஷன் கொடுக்கும் பாருங்க. என் படத்தில் அவர் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டார். அதைவிட அவரோடு வேலை செய்றது எனக்குப் பெருமையா இருக்கு!''

''இயக்குநர் பாலா, உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்?''

'' 'சேது’ பார்த்த நாள்ல இருந்தே பாலா எனக்குப் பழக்கம். 'சித்திரம் பேசுதடி’ படம் பார்த்துட்டு 15 நிமிஷம் பேசின பாலா, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துட்டு 15 நாட்கள் பேசினார். சினிமா இல்லாம எங்க ரெண்டு பேராலயுமே வாழ முடியாது. ஒருநாள் சும்மா பார்க்கப் போயிருந்தப்போ, 'அடுத்த படம் யாருக்குப் பண்ற?’னு கேட்டார். 'யாருமே பண்ணலை. நீங்க பண்றீங்களா?’னு கேட்டேன். 'சந்தோஷமா பண்றேன்டா’ன்னார். சினிமாக் காதலர்களின் கூட்டு முயற்சியா உருவாகும் இந்தப் 'பிசாசு’, பிரமிப்பான ஓர் அனுபவமா இருக்கும்!''

'' 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ நிறைய சபாஷ் வாங்குச்சு. ஆனா, 'திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம்’னு சொல்லி சேனலில் ஒளிபரப்பப்பட்டதே... அந்த விபத்து எப்படி நடந்தது?''

''நடந்து முடிஞ்சுபோன சில விஷயங்களை நான் கிளற விரும்பலை. ஆனா, இப்போ நினைச்சாகூட அது வேதனைதான். மனுஷங்க இப்படி எல்லாம்கூடக் கெட்டது பண்ண முடியுமானு நினைச்சா மலைப்பா இருக்கு. 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் வெளியாவதற்கு முந்தைய இரவும், மறுநாள் காலையிலும் என்ன நடந்ததுனு இண்டஸ்ட்ரியில இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் படைப்புக்கும் நடந்தது எல்லாம் இன்னொருத்தருக்கு நடந்திருந்தா, ஒண்ணு... அவர் தற்கொலை செய்திருப்பார்; இல்லைன்னா, ஒரு கொலையாளியா ஆகிருப்பார். ஆனா, நான் ரெண்டுமே பண்ணலை. என் ஆபீஸ் ரூமைப் பூட்டிட்டு 40 நாள் புத்தகங்கள் படிச்சு ஒரு மனிதனா மீண்டேன். ஒரு எழுத்தாளனுக்கு, கலைஞனுக்கு நடந்த அநீதி அது. 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் வெளியான பிறகும் நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் நாங்க 20 பேர் சாப்பிட்டோம். இதைச் சொல்றதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அந்த அவமானங்கள், அசிங்கங்கள் என்னைப் பக்குவப்படுத்திருக்கு. மிக மோசமான அந்த அநீதி, ஒரு காண்டாமிருகத்தின் தோலையும் யானையின் தோலையும் சேர்த்துத் தைத்துக்கொண்டு, எதையும் தாங்கும்விதமா என்னை மாத்தியிருக்கு!''

''இப்போ கடன் தொல்லைகள் தீர்ந்துடுச்சா?''

''ஒரு பேப்பர், பென்சிலோட சினிமாவுக்கு வந்தேன். இப்போ நானும் நண்பர்களும் நல்லாவே இருக்கோம். வசதியா இருக்கும்போதும் சரி, கஷ்டப்பட்டப்பவும் சரி... பணம் மட்டும்தான் வாழ்க்கையில் முக்கியம்னு நினைக்கலை. என்கிட்ட இருக்கிற கவிதை நூல்களைவிட வேற எதையும் நான் சிறந்ததா நினைக்கலை. 'நந்தலாலா’ படம் முடிஞ்சும் ரெண்டு வருஷம் பெட்டிக்குள்ளயே கிடந்தது. ஆனா, இப்ப பார்க்கிறவங்களும் 'நந்தலாலா நல்ல சினிமா’னு என்கிட்ட கண் கலங்குறாங்க. அதே மாதிரி 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தையும் சிலாகிக்கிறாங்க. சாராயம் விக்கும்போது கிடைக்காத மரியாதை, பால் விக்கும்போது கிடைக்குது. எனக்குப் பிச்சை போடும் இந்த மனிதர்களுக்காக, இன்னும் சில காலம் சினிமாவில் பிச்சை எடுத்தாலும் தப்பில்லை!''

''பிரபல நட்சத்திரங்களை வைச்சுப் படம் பண்ணினா நல்ல விலை கிடைக்குமே?''

''பெரிய ஸ்டார்ஸ் என் படத்துக்குத் தேவை இல்லை. இப்படிச் சொன்னா உடனே 'திமிர் பிடித்தவன்’னு என் மேல முத்திரை குத்துவாங்க. சரி, நான் கேட்கிறேன்... எந்தப் பெரிய ஸ்டார் என் படத்துல நடிக்கத் தயாரா இருக்கார்? நடிக்கத் தெரியாதவர்களுடனும், சினிமா தெரியாதவர்களுடனும் வேலை பார்க்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அவங்க போதும் எனக்கு!''

''சினிமா எடுக்கத் தெரிஞ்ச உங்களுக்கு, அதை வியாபாரம் பண்ணத் தெரியலைனு சொல்லலாமா?''

''ஆயிரம் பேர் செய்யவேண்டிய வேலையை, ஒரு இயக்குநரா செய்றேன். சினிமா பிசினஸ் மட்டும் எனக்குச் செய்யத் தெரியாதா என்ன? ஏழு வருஷம் நான் மார்க்கெட்டிங்லதான் இருந்தேன். ஆனா, எனக்கு மார்க்கெட்டிங்கில் விருப்பம் இல்லை. என் நண்பர்தான் எனக்கு மேனேஜரா இருக்கார். மிக நேர்மையா ஒரு படைப்பை விக்க முயற்சி பண்றார். ஆனா, கழுதைப்புலிகள் மாதிரி ஒரு படைப்பைச் சுரண்டித் தின்ன சிலர் இருக்கிறார்கள். அந்த வியாபாரிகளும் மிஷ்கினும் செத்துப்போனாக்கூட சினிமா மறைஞ்சுடாது. அது வாழ்ந்துட்டேதான் இருக்கும்!''

''இளையராஜாவின் இசைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கலை என்பதால்தான், அவர் இந்தப் படத்துக்கு இசையமைக்காமல் ஒதுங்கிக் கொண்டாராமே?''

''ஏதோ ஒரு கிசுகிசு எழுதணுமேனு எழுதிட்டு, பசிக்க ஆரம்பிச்சதும் சாப்பிடப் போயிடுறாங்க. நானும் என் அப்பா இளையராஜாவும் ஒரு ரூமுக்குள்ள உட்கார்ந்து பேசினதை அவங்க கேட்டுட்டு இருந்த மாதிரி சொல்றாங்களே! அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை. இசைஞானிகிட்ட, 'ஒரு சின்னப் பையன்கூட வேலை செய்யப்போறேன்’னு சொன்னேன். அவரும் 'சரி’னு சொன்னார். மத்தபடி வேற எதுவும் இல்லை. 'அருள்’னு ஒரு பையன்தான் இந்தப் படத்துக்கு மியூசிக். 'வேற பேர் வெச்சுக்கிறேன். ஏதாவது பேர் சொல்லுங்க’னு கேட்டான். 'அரோல் குரோலி’னு பேரை மாத்திட்டேன். குரோலி என்பவர் இத்தாலியில் பெரிய வயலினிஸ்ட்!''

''இன்னும் எத்தனை சினிமா எடுப்பீங்கனு நினைக்கிறீங்க?''

''1.5 வருஷமா கவிதைகளை மட்டுமே வாசிச்சிட்டு இருக்கேன். மேற்குலகக் கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றை வாசிக்கும்போது, 40 படங்கள் எடுத்தாலும் ஒரு கவிதைக்கு ஈடாகாதுனு தோணுது. ஒட்டுமொத்தமா ஒரு வருஷ உழைப்பை ஒரு சினிமா எடுத்துக்கும்போது, வாழ்க்கையில வேற எதுவுமே இல்லாத மாதிரியே தோணுது. இன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன். இருக்கிற வரை நல்ல சினிமா மட்டும்தான் எடுப்பேன்!''

- டி.அருள் எழிலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்